Wednesday, March 2, 2011

மமகவுக்கு மூன்று தொகுதிகள்; ஒரு மாச்சர்யமற்ற பார்வை!

மகவுக்கு மூன்று தொகுதிகள்; ஒரு மாச்சர்யமற்ற பார்வை!


தமுமுகவின் அரசியல் பிரிவாக அவதரித்த மனிதநேய மக்கள் கட்சி எனும் மமக, ''ஒரு சீட்டு கலாச்சாரத்தை ஒழிப்போம். சமுதாயத்தின் மானம் காப்போம்' என்ற தாராக மந்திரத்தை முன்வைத்து அரசியலில் அடியெடுத்து வைத்தது. அக்கட்சியின் முதல் தேர்தல் களமான கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுகவுடன் தான் கூட்டணி என்ற கருத்து இறுதிவரை நீடித்து, பின்னர் தனித்து போட்டியிட்டது.

திமுக ஒரு தொகுதிதான் தரமுடியும் என்று கூறியதாகவும், ஏதேனும் ஒரு யூனியன் கவர்னர்[அ] வெளிநாட்டுத் தூதர் பதவியை தர காங் முன் வந்ததாகவும், ஒரு சீட்டு கலாசாரத்தை ஒழிப்போம் என்று சொன்ன நாங்கள், ஒரு சீட்டைப் பெறுவது பொருத்தமாகாது எனக் காரணம் கூறியது மமக.

மமகவின் காரணம் நியாயமான ஒன்றாக இருந்த காரணத்தால் அன்றைக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட அமைப்புக்கள் மமகவுக்கு ஆதரவளித்தன. போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் தோல்வியுற்றாலும், 'மண்ணைக் கவ்வ வைப்போம்' புகழ், தனிநபர்வாதிகள் ஆதரித்த அய்யரை, அதுவும் தொடர்ந்து அந்த தொகுதியில் வெற்றிவாகை சூடியவரை தோல்வியுற செய்ததில் மமகவுக்கு பெரும் பங்குண்டு என்பதை மறுக்கமுடியாது.

இந்நிலையில், இரண்டாண்டுகள் கழிந்த நிலையில், நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது மமக. மூன்று சீட்டுகள் பெற்ற நிலையில் இந்த விஷயத்தில் மமகவுக்கு ஆதரவும்-எதிர்ப்பும் உள்ளது. முதலாவதாக எதிர்ப்பவர்கள் கூறும் காரணங்களை பார்ப்போம்.
''கடந்த தேர்தலில் திமுகவிடம் ஒரு இரு எம்.பி தொகுதிகள் கேட்டதன் அடிப்படையில், 12 தொகுதிகளையோ, அல்லது ஏற்கனவே நான்கு எம்.பி தொகுதியில் போட்டியிட்டதன் அடிப்படையில் 24 சட்டமனறத் தொகுதிகளையோ ஜெயலலிதாவிடம் பெறாமல், வெறும் மூன்று தொகுதிகள் பெற்று மானத்தை இழந்துள்ளது' என்று கூறுகிறார்கள்.

இவர்களின் இந்த வாதம் அடிப்படையிலேயே தவறாகும். ஏனெனில் எந்த கூட்டணியிலும் சட்டமன்றத்தில் ஒதுக்கிய சதவிகிதத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளோ, நாடளுமன்றத் தேர்தலில் ஒதுக்கிய சதவிகிதத்தின் அடிப்படையில் சட்டமன்றத் தொகுதிகளோ எந்த கட்சிக்கும் ஒதுக்கப்படுவதில்லை. உதாரணமாக,

* கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் 35 தொகுதிகள் பெற்றது மதிமுக. இந்த அடிப்படையில் நாடாளுமன்றத்தேர்தலில் 6 தொகுதிகள் பெறவேண்டும். ஆனால் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 4 தொகுதிகளைத் தான் பெற்றது மதிமுக. அப்படியாயின் மதிமுக மானமிழந்து விட்டதா?
* கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் 48 தொகுதிகள் பெற்றது காங். இந்த அடிப்படையில் நாடாளுமன்றத்தேர்தலில் 8 தொகுதிகள் மட்டுமே பெறவேண்டும். ஆனால் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 16 தொகுதிகளை பெற்றது காங். அப்படியாயின் காங்கிரஸ் மானமுள்ள கட்சி என்று சொல்வார்களா?

எனவே அரசியல் கூட்டணியில் கட்சிகளுக்கு, சட்டமன்றத் தேர்தலில் பெற்ற சீட்டுக்களை அடிப்படையாக கொண்டு நாடளுமன்றத் தேர்தலுக்கோ, நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற சீட்டுகளை அடிப்படையாக கொண்டு சட்டமன்றத் தேர்தலுக்கோ சீட்டுகள் ஒதுக்கப்படவில்லை என்பது புரிகிறதா? எனவே இந்த வகையில் மமக, ஏன் 12 தொகுதி வாங்கவில்லை என்றோ, ஏன் 24 தொகுதி வாங்கவில்லை என்றோ கேட்பது அறியாமையாகும்.

அடுத்து முஸ்லிம் லீக், தேசிய லீக் ஆகிய கட்சிகள் மூன்று சீட்டுகள்- ஐந்து சீட்டுகள் வாங்கியபோது அதை விமர்சித்த மமக, இப்போது மட்டும் மூன்று சீட்டு வாங்குவது நியாயமா என்கின்றனர். மேலோட்டமாக பார்த்தால் இந்த வாதம் சரியானது என்றாலும், லீக்குகள் வாங்கிய சீட்டுக்கும்- மமக வாங்கிய சீட்டுக்கும் வேறுபாடு உண்டு. லீக்குகள் நாமறிந்தவரை தாங்கள் பெற்ற சீட்டுக்களில் தனி சின்னத்தில் போட்டியிட்டதில்லை. இரட்டை இலையிலோ, உதயசூரியனிலோ தான் போட்டியிட்டார்கள். இவர்கள் பெயருக்கு லீக் என்று சொல்லிக்கொண்டாலும், சட்டமன்ற- நாடாளுமன்றத்தில் இவர்கள் திராவிடக் கட்சியின் பிரதிநிதியாகத்தான் கருதப்படுவார்கள். மேலும், அக்கட்சியின் கொறடா அனுமதியின்றி சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ வாய் திறக்கமுடியாது. ஆனால் மமக மூன்று சீட்டு வாங்கினாலும் அதிமுகவின் சின்னத்தில் போட்டியிடாமல் தனி சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இவர்கள் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க எந்த கொறடா அனுமதியும் தேவையில்லை. எனவே, மமக லீக்கை விமர்சித்தது தவறுமல்ல; லீக்குகளின் அளவுக்கு மமக இந்த விஷயத்தில் வீக்காகவும் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

அடுத்து, மமக சீட்டு விசயத்தில் விமர்சிப்பவர்கள் யார் என்றால், மறக்காமல் ஒவ்வொரு தேர்தலிலும் 'மமகவை மண்ணைக் கவ்வ வைப்போம்' என்று சமுதாய[!] உணவோடு சொல்லக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மண்ணைக் கவ்வ வைப்போம் என்று 'மனுநீதி'யையும் தாண்டிய வெறியோடு தீர்மானம் போடும் இவர்களுக்கு, மமக மூன்று சீட்டு வாங்கினால் என்ன? முப்பது சீட்டு வாங்கினால் என்ன? ஒரு பேச்சுக்கு மமக கூடுதல் தொகுதிகளை அதிமுகவிடம் பெற்றுவிட்டால் இவர்கள் நாளையே அதரவு என்று சொல்லிவிடுவார்களாக்கும்? சரி! உங்க ஆசைப்படியே மமக, மானமிழந்து விட்டது என்றே வைத்துக் கொள்வோம். இவர்களுக்கு உண்மையிலே சமுதாய அக்கறையிருந்தால், ''தமது கட்சி வேட்பாளர்களில் 25 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிக்கே ஆதரவு' என்று கூட்டணி 'டிமான்ட்' வைக்கத் தயாரா? இவ்வாறு செய்தால் நீங்கள் இடஒதுக்கீடு பெறாமலேயே முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை சட்டமன்றத்தில் ஏற்படுத்தி விடலாமே! செய்யத் தாயாரா இந்த தனிநபர்வாதிகள். எனவே இனிமேலாவது நெஞ்சத்தை ஈமான் கொண்டு கழுவி, வஞ்சத்தை ஒழித்து, சகோதரத்துவம் பேன முன்வரட்டும்.

அடுத்து மமகவின் இந்த தேர்தல் நிலைப்பாட்டை ஆதரிப்பவர்கள் உள்ளத்திலும் ஒரு ஆதங்கமும், மமக மீது சில வருததங்களும் உண்டு. அது என்னவெனில், இன்னும் கூட தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அவசரகதியாக மாறும் அரசியல் சூழ்நிலைகளை கவனத்தில் கொள்ளாமல், சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பே அதிமுகவிடம் கூடட்டணி உறுதி செய்ததில் காட்டிய வேகம் முதல் தவறு. அடுத்து சீட்டு பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு முன்னால், சக முஸ்லிம் அமைப்புகளை கலந்து ஆலோசித்து ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தாதது இரண்டாவது தவறு. சீட்டு பேச்சுவார்த்தைக்கு சக முஸ்லிம் அமைப்புகளை அழைத்து சென்றால் இன்னும் கூடுதலாக சில தொகுதிகள் கிடைக்க இருந்த வாய்ப்பை இழந்தது மூன்றாவது தவறு. தேர்தலை மனதில் கொண்டு, சக முஸ்லிம் அமைப்புகளுக்கு மத்தியில் நிலவிய முறுகல் நிலையை கண்டுகொள்ளாமல் மவ்னம் காத்தது நான்காவது தவறு.

இவ்வாறான சில குறைகள் நீங்கலாக, தனிநபர்வாதிகள் கூறியது போன்ற பாரதூரமான பிழையை மமக செய்துவிடவில்லை என்பதை கவனத்தில் கொள்வோமாக.
-அப்துல்முஹைமின்.


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::