Sunday, March 13, 2011

யஃஜூஜ்,மஃஜூஜ்,தஜ்ஜால்?

ஃஜூஜ்,மஃஜூஜ்,தஜ்ஜால்?
அல்குர்ஆன் வழியில் அறிவியல் S.ஹழரத் அலி, ஜித்தா மனித சமுதாயம் படிப்பனை பெறுவதற்காக ஏராளமான வரலாறு சம்பவங்களை அல்குர்ஆனில் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். கடந்த காலச் சம்பவங்களையும், இனி வரப்போகும் காலங்களில் நடபெற வேண்டிய செய்திகளையும் முன்னறிவிப்பாக சொல்கிறான். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொல்லிய செய்திகள் அனைத்தும் சத்தியமானவை. கதையோ கற்பனையோ அல்ல. சில செய்திகள் நம் சிற்றறிவிற்கு புலப்படாமல் போனாலும், படைத்த ரப்பிடமிருந்து வந்த உண்மை என்று விசுவாசிகள் அனைவரும் விசுவாசம் கொள்கிறோம். இது போன்ற சில சம்பவங்களை நம் அறிவிற்கு விளங்குமளவு அறிவியல் ஆதாரங்களோடு அவ்வப்போது வெளிப்படுத்தவும் செய்கிறான். ஒரு வரலாற்று சம்பவத்தை அல்குர்ஆனில் பார்ப்போம். அல்லாஹ்வின் நல்லடியார் துல்கர்னைன் பயணம் செய்கிறார். முதலில் சூரியன் மறையும் மேற்கு திசைக்கும் பின்பு சூரியன் உதயமாகும் கிழக்கு திசை பக்கம் செல்கிறார். (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார். சூாியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்தபோது, அது ஒரு சேறு கலந்த நீாில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; ”துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்”" என்று நாம் கூறினோம். (ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்; ”எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.” பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான். ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம். பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓாிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்ைைல. அவர்கள் ”துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜுஜும், மஃஜுஜும் பூமியில் ஃபஸாது குழப்பம் செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள். அதற்கவர்; ”என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; ”நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் ”உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்”" (என்றார்). எனவே, (யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை. ”இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள்தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார். அல்குர்ஆன் 18:83-98 யஃஜுஜு, மஃஜுஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள். அல்குர்ஆன் 21:96 இப்படியான ஒரு சமுதாயம் இன்னும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் வருகிறது. 21 நூற்றாண்டு அறிவியல் கண்களுக்கு இன்னும் அவர்கள் தென்படவில்லை. தடுப்புச் சுவரை துளைத்து, உடைத்து அவர்களை அல்லாஹ் வெளியேற்றும் பொழுது உலகம் அவர்களால் பெரிதும் துன்பப்படும். இந்த விசித்திர குள்ளர்கள் நாம் வாழும் உலகிலேயே எங்கோ மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குகளில் வாழ்ந்து வருகிறார்கள். ஃபுளோரஸ் தீவில் விசித்திர குள்ளர்கள் இந்தோனேஷியா கிழக்குப் பகுதியில் Flores என்ற ஒரு தீவு உள்ளது. இந்த தீவு மலைகளும் காடுகளும் எரிமலைகளும் நிறைந்த ஒன்று. இங்குள்ள கிராமத்தில் வயது முதிர்ந்த பெரியவர் நெல்லிஸ் குயா தனது மூதாதையர்கள் கூறியதாக சொல்லும் விசித்திர கதை. இந்த கிரமத்திற்கு அப்பால் உள்ள மலைகளுக்கு பின்னால் விசித்திர குள்ளர்கள் வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் கண்கள் பெரிதாகவும் உடல் முழுவதும் ரோமம் மூடியவர்களாகவும், ஒன்றும் விளங்கிக் கொள்ள முடியாத மொழி பேசுபவர்கள் என்றும், இவர்கள் அடிக்கடி தங்கள் கிராமத்திற்குள் புகுந்து பயிர்கள், உணவுப் பொருள், பழங்களை திருடிக்கொண்டு ஓடி விடுவார்கள். பெரும் பசிக்காரர்கள். எதையும் தின்பவர்கள். இக்குள்ளர்களை (Ebu gogo) எபு கோகோ என்று அழைப்பதாகவும் கூறினார். இதற்குப் பொருள் எதையும் தின்னும் தின்னிப்பாட்டி. இது போன்ற கதை இந்தோனேஷியா கிராமங்களில் ஏராளமாய் உண்டு என்பதால் ஆய்வாளர்கள் இக்கதைகளை கற்பனை என ஒதுக்கித் தள்ளினர். ஆனால் 2003ம் ஆண்டு புளோரஸ் தீவில் நெல்லிஸ் குயா வாழ்ந்த கிராமத்திலிருந்து 75 மைல் தொலைவில் ஒரு குகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு எலும்புக்கூடு, மேற்கண்ட கதைகள் கற்பனையல்ல உண்மைதான் என அறிவித்து உலகத்தை வியக்க வைத்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா தொல் பொருள் ஆய்வுக் குழுவினர் டாக்டர் ரிச்சர்ட் ராபர்ட் தலைமையில் இவ் எலும்புக் கூட்டுடன் பல மிருகங்களின் எலும்புகளையும் 19 அடி ஆழத்தில் கண்டு பிடித்தனர். முதலில் இந்த எலும்புக் கூடு ஒரு சிறிய குழந்தையின் எலும்பாக இருக்கும் என்று நம்பினர். ஏனெனில் மொத்த உயரமே மூன்று அடிதான். இறுதியில் விரிவாக ஆராய்ந்த பொழுது, இது வரை யாரும் அறியாத புதிய மானிட இனம் என்பதை அறிந்தனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 30 வயதுடைய பெண்ணின் எலும்பாகும். இவர்களின் மொத்த உயரமே சராசரி 3 அடிதான். அதாவது 3 வயது குழந்தையின் உயரம்தான். இவர்களின் மொத்த உடல் எடை 25 கிலோதான். மூளை அமைப்பு மிகச்சிறியதாகவும் சிக்கல் நிரம்பியதாகவும் காணப்படுகிறது. இக்கண்டு பிடிப்பின் மூலம் மனித பரிணாம வளர்ச்சி கொள்கை தலைகீழாக புரண்டு விட்டது. பெரிய மூளையுடைய மனிதர்கள் மட்டுமே நுட்பமான அறிவு நிறம்பியவர்கள் என்ற கருத்துக்கு மாறாக சிறிய அளவுள்ள மூளையை உடைய இந்த சித்திரக்குள்ளர்கள் வேட்டையாடுதல் வேட்டை கருவிகளை கூர்மையாக உருவாக்கும் நுட்பம் அறிந்தவர்கள் என்று ஆய்வு கூறுகிறது. இந்த 3 அடி பெண் எலும்புக்கூடு சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது பற்றி டாக்டர் ரிச்சட் ராபர்ட் கூறும் பொழுது மானிட வரலாற்றில் 18 ஆயிரம் என்பது சமீபமாக ஒன்று. இந்த புதிய இன குள்ள மனிதர்கள் இன்றும் கூட அடர்த்தியான காடுகளில் வாழ்ந்து வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் விரிவாக ஆய்வு நடத்தினால் இப்புதிய இனத்தைப் பற்றி மேலும் அறியலாம் என்று கூறினார். முதியவர் நெல்லிஸ் குயாவின் கிராமத்தினர், இன்னும் இந்த விசித்திர குள்ளர்கள் மலைகளுக்கு அப்பால் வசிப்பதாக நம்புகின்றனர். இக்கிராமத்தினர் அனைவரும் கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். விசித்திர குள்ளர்கலை Ebu Gogo என்று அழைப்பது யஃஜுஜ், மஃஜுஜின் ஆங்கிலப் பெயரான Yahog, Magog வுக்கு நெருக்கமாக உள்ளது கவனிக்கத்தக்கது. இந்த சித்திர குள்ளர்கள் மனித இனத்தின் ஒரு பிரிவினர். இவர்களுக்கு Homo floresiensis என்ற பெயர் இடப்பட்டுள்ளது. “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம்(அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்படால் மக்களின் வாழ்க்கையை பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை:” என்பது நபிமொழி அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி) நூல்: தப்ரானீ இவர்கள் நூஹ்(அலை) அவர்களின் புதல்வர் ‘யாபிஸ்’ என்பாரின் வழித்தோன்றல்களாவர் என்று கூறப்படுகிறது. யஃஜுஜ், மஃஜுஜ் அரபி அல்லாத சொற்கள். மனித வர்க்கமும் ஜின் வர்க்கமும் நூறு சதம் என்றால் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் மட்டும் 90 சதம். ‘இவர்கள் உயரம் ஒரு சான் அல்லது இரு சான் அதிகபட்சம் மூன்று சான்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள்’ என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாக ஹாக்கிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசித்திர குள்ளர்கள் இறுதி நாளின்போது வெளிக்கிளம்பி வந்து பெரும் அட்டூழியங்களில் ஈடுபடுவர். ஃபத்ஹுல்பாரி, நூல்: புகாரி 7ம் பாகம் பக்கம் 573 “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வரும்வரை நீங்கள் போராடிக்கொண்டே இருப்பீர்கள்; அவர்களின் முகம் அகன்றதாகவும், கேடயம் போல்(வட்டமாகவும்) கண்கள் சிறிதளவும், முடிகள் பட்டையாகவும் அமைந்திருப்பார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ் நூல்கள்: அஹ்மத் தப்ரானீ கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டின் முக அளவும் கிராம மக்களின் வர்ணிக்கும் ‘எபு கோகோ குள்ளர்களின் அமைப்பும் ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துல்கர்னைன் அவர்கள் பயனம் செய்த கீழ்திசை இரு மலைகள் சூழ்ந்த அமைப்பு, விளங்கிக்கொள்ள முடியாத மொழி பேசுபவர்கள், மேலும் எரிமலை குழம்பு நிறைந்த ஃபுளோரஸ் தீவில் இரும்புப் பாலங்களும் நெருப்பாக்குவதற்கு தேவையான மரங்கள் மற்றும் நிலக்கரியும் அங்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரை அல்லாஹ் வெளிப்படுத்துவான், அவர்களில் முதல் கூட்டத்தினர் ஒரு நீரோடையைக் கண்டு அதன் நீரைப் பருகுவார்கள். அடுத்த கூட்டத்தினர் வரும்போது (தண்னீர் இராது என்பதால்) அந்த இடத்தில் ஒரு சமயத்தில் தண்ணீர் இருந்தது என்று கூறுவார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன்(அரழி) நூல்: முஸ்லிம் இக்கூட்டத்தினர் வெளியாகும்போது மக்களுக்கு ஒன்றும் கிடைக்காது என்றளவுக்கு அனைத்தையும் தின்று தீர்த்து அநியாயம் செய்வார்கள். அதனால்தான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “ஒரு மாட்டின் தலை இன்று என்ன பெறுமதியோ, அது அன்று நூறு தங்க காசுகளைவிட அதிக வெகுமதியாக இருக்கும்” துல்கர்னைன் எழுப்பிய தடுப்புச் சுவர் இந்தோனேஷிய தீவுகளில் எதாவது ஒன்றில் இன்ஷா அல்லாஹ் இருக்கலாம். ஃபுளோரஸ் தீவில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடும் எலும்புக்கூடும் தரும் ஆய்வுச் செய்திகள், குள்ள மனிதர்கள் வேட்டையாடுவதில் சிறந்தவர்கள், கூர்மையான கற்கலால் ஆன ஆயுதங்களை கொண்டு ராட்சத பல்லி, முயல் அளவில் உள்ள காட்டெலி அன்று வாழ்ந்த குள்ள யானை போன்ற மிருகங்களை வேட்டையாடி வீழ்த்தியுள்ளார்கள். இவ்விடத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி கவனிக்கத்தக்கது. (யஃஜுஜ், மஃஜுஜ் மடிந்தபின்) அவர்களின் அம்புகளையும், விற்களையும், அம்பாரத் தூளிகளையும் ஏழு ஆண்டுகளுக்கு முஸ்லிம்கள் பயன்படுத்துவார்கள். அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன்(ரழி) நூல்:திர்மிதீ ஏழு ஆண்டுகள் விறகாக பயன்படுத்துமளவிற்கு அம்பாரக்கூடுகள் பெரும் எண்ணிக்கையில் இருந்தால் இக்கூட்டம் அடர்ந்த காடுகளில் வாழ்ந்தாலே இது சாத்தியம். மனிதன் கால்படாத ஏராளாமான காட்டு பிதேசங்கள் இன்றும் இந்தோனேஷிய தீவுகளில் உள்ளன. ஆகவே அறிவியல் சான்றுபடியும் கிராம மக்கள் வழிவழி கதைகள் மூலமும் அல்குர்ஆன் அல்ஹதீஸ் மூலம் அறியும் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் இந்தோனேஷிய தீவுகளில் இன்ஷா அல்லாஹ் வாழ்ந்து வரலாம். அல்லாஹ் அறிந்தவன். எது எப்படியோ 3 அடி குள்ள மனிதர்கள் ஆதம்(அலை) சந்ததிகள் என்ற குர்ஆன், ஹதீஸ் முன்னறிவிப்பு இன்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ். ஃபித்னாக்கள் புறப்படும் திசை கீழ்த்திசை யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வெளிக்கிளம்புவதற்கு முன்னதாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். தஜ்ஜாலைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் ஏராளமான செய்திகளை கூறியுள்ளார்கள். தஜ்ஜால் குழப்பவாதி, இனி புதிதாக பிறப்பவன் அல்ல. இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எங்கே என்ற கேள்விக்கு ஓரளவிற்கு ஹதீஸ்களில் பதில்கள் கிடைக்கவே செய்கின்றன. தஜ்ஜால் கீழ்த்திசையிலிருந்து மதீனாவைக் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான். அப்போது மலக்குகள் அவனது முகத்தை ‘ஷாம்’ பகுதியை நோக்கித் திருப்புவார்கள். அங்கேதான் அவன் அழிவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம் வழிகெடுக்கக்கூடிய தஜ்ஜால் என்னும் ஒற்றைக்கண்ணன், மக்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் கீழ்த்திஸையில் தோன்றுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: அஹ்மத் நிராகரிப்பின் சிகரம் கீழ்த்திசையில் இருக்கிறது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரழி) நூல்கள்: புகாரி, முஅத்தா நிச்சயமாக இப்லீஸுடைய அரியாசனம் கடலில் இருக்கிறது. எனவே அவன்தான் படையினரை (இப்புவியில் குழப்பன் உண்டு பண்ண) அனுப்புகிறான். அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி) நூல்: முஸ்லிம் அன்றைய அரபு மக்கள் தங்கள் வியாபாரத் தொடர்பாக தரை மார்க்கமாக சீனா, இந்தோனேஷியா, மலேசியா, மாலத்தீவு, இலங்கை, இந்தியா வரையிலும் சென்று வந்தனர். முன்பு கிருஸ்தவராக இருந்த தமீமுத்தாரி(ரழி) அவர்கள் இவ்வாறு 30 நபர்களுடன் புயலில் சிக்கி ஒரு தீபகற்பத்தில் கப்பலோடு ஒதுங்கினார். அப்பொழுது ‘ஜஸ்ஸாஸா’ என்ற ஒரு பிராணி அவர்களிடம் ‘நீங்கள் இந்த மடத்திலுள்ள மனிதனிடம் செல்லுங்கள்’ என்று கூறியது. அங்கு அவர்கள் ஒரு பருமனான மனிதனைக் கண்டார்கள். அவனைப்போன்று ஒரு படைப்பை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை. இரண்டு கரண்டை கால்களுக்கும், முட்டுக் கால்களுக்கும் இரும்பினால் தலை சேர்த்து கட்டப்பட்டிருந்தான். பின்பு அவன் சில கேள்விகள் கேட்டான். இறுதியில் “நான்தான் தஜ்ஜாலாவேன் (இங்கிருந்து) வெளியேற விரைவில் அனுமதி வழங்கப்படலாம்” என்று கூறியதாக தமீமுத்தாரி(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினர். இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள் இவ்விஷயத்தை முன்பே நான் உங்களிடம் கூறியிருக்கிறேன் அல்லவா? என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் ‘ஆம்’ என்றனர். அறிந்து கொள்க! நிச்சயம் அவன் ஷாம் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான். அல்லது யமன் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான் என மும்முறை கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம்) அறிவிப்பவர்: ஃபாத்திமா பிந்த் கைஸ்(ரழி) நூல்: முஸ்லிம் தஜ்ஜால் கடலில் உள்ள தீவுக்குள் தனி மடாலத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது. ஏமன் கடல் பகுதி. ஷாம் (சிரியா) கடல் பகுதி எல்லாம் மக்களால் அறியப்பட்ட பிரதேசங்கள். மேலும் இங்கு தீவுக்கூட்டங்கள் அதிகம் இல்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட கிழக்குத் திசையின் கடல் பகுதிகளில் ஏராளமான தீவுகளும், தீபகற்பங்களும் உள்ளன. இந்தோனேஷியாவில் உள்ள மொத்த தீவுகள் 13667. இதில் மனிதர்கள் வசிக்காத அடர்ந்த காடுகள் உள்ள தீவுகள் மட்டும் 6000க்கும் மேல். அதைத் தொடர்ந்துள்ள நமது அந்தமான் தீவுக்கூட்டங்கள் மனிதர்கள் எவரும் வசிக்காத தீவுகள் 265. மாலத்தீவில் மொத்தம் 2000, மனித நடமாட்டம் உள்ள தீவுகள் 199 மட்டுமே. ஆக ஏராளமான தீவுகள் மனிதப் பார்வையில் படாமல் உள்ளன. தஜ்ஜால் வருகையின் முக்கிய நோக்கம், தானே இறைவன் என வாதிட்டு மக்களை ஈமான் கொள்ளச் செய்து நரகில் தள்ளுவது. தஜ்ஜாலின் மூலம் இறைவன் மூஃமின்களுக்கு ஏற்படுத்தும் சோதனை கடுமையாக இருக்கும். ஃபித்னாக்களுக்கும் சுனாமி பூகம்பம் போன்ற சோதனைகளும் இந்தோனேஷியா தீவுகளை சூழ்ந்துள்ளது. அல்லஹ்வின் சோதனைக்கு காரணம் பெயரளவுக்கு முஸ்லிம்களாகவும் செயல்களில் மாற்று மதத்தினராக மாறிவிட்டதுதான். நாம் நம்முடைய செயல்களை அல்லாஹ்விற்கு பொருத்தமான முறையில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக உலகெங்கும் தனது அத்தாட்சிகளை வெளிப்படுத்துகிறான். அறிவுள்ளவர் தெரிந்து கொள்ளவும் திருந்திக் கொள்ளவும் இது ஒரு வாய்ப்பு. நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம். அல்குர்ஆன் 41:53 அல்குர்ஆன் வசனங்களையும் நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பான ஹதீஸையும் ஒப்பிட்டு இக்கட்டுரையை எழுதியுள்ளார். இதன் மிகத்துல்லியமான உண்மை நிலையை அல்லாஹ்வே மிக அறிந்தவன். விசித்திர குள்ளர்களைப் பற்றிய சமீபத்திய ஆய்வுகளை சில இனையதளங்களில் காணலாம். http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3960001.stm http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3948165.stm http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4308751.stm

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::