Wednesday, March 2, 2011

கோத்ரா-நீதிக்கு ஏற்பட்ட வறட்சி

கோத்ரா-நீதிக்கு ஏற்பட்ட வறட்சி

கோத்ரா:நீதிக்கு ஏற்பட்ட வறட்சி
கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் அஹ்மதாபாத் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நமது நீதிபீடத்தின் வறட்சியையும், வீழ்ச்சியையும் குறித்த சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது. 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி பி.ஆர்.பட்டேல், 63 பேரை குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்துள்ளார். மோடியின் மாநிலத்தில் சிறைக் கொட்டகையிலிருந்து 63 பேருக்கு விடுதலை கிடைத்தது ஆறுதலான செய்திதான். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக இவர்கள் ஒரு முறைக்கூட ஜாமீன் கிடைக்காமல் சிறைக் கொட்டகைகளின் இருள் நிறைந்த சூழலில் தங்களின் வாழ்க்கை கழித்துள்ளனர். இவர்களில் முக்கிய குற்றவாளி என குறிப்பிடப்பட்ட வயோதிகரான இஸ்லாமிய மார்க்க அறிஞர் உமர்ஜியும், ஏறத்தாழ தனது பார்வையை இழந்துவிட்ட சிறுவனும் அடங்குவர். ஐந்து சிறுவர்களை குஜராத் போலீஸ் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்தது. இவர்கள் இழந்துபோன 9 ஆண்டுகளுக்கும், இவர்களுடைய குடும்பத்தினர் அனுபவித்த தீராத வேதனைகளுக்கும் நமது நீதிபீடங்களால் உரிய இழப்பீட்டை வழங்கவியலுமா?
பிணைக் கிடைக்கும் என்ற நீதிபீடத்தின் கருணையை எதிர்பார்த்து இவ்வளவு காலம் அவர்கள் சிறைக் கொட்டகைகளில் தங்களது வாழ்க்கையை கழித்துள்ளனர்.

2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ரா ரெயில்வே நிலையத்தில் வைத்து சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தீப்பிடித்தது. அதற்கான குற்றத்தை முஸ்லிம்களின் மீது சுமத்திவிட்டு நரேந்திர மோடியின் தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கொடூரமான கோரத்தாண்டவத்தை அரங்கேற்றினர்.

சிசுக்களும், சிறுவர்,சிறுமிகளும், பெண்களும், ஆண்களும், வயோதிகர்களும் என அப்பாவி முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் படு கோரமாக கொலைச் செய்யப்பட்டனர். முஸ்லிம் சகோதரிகள் கடுமையான பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். சொத்துக்களும், மஸ்ஜிதுகளும் அழித்தொழிக்கப்பட்டன. இவ்வாறு இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய இனப்படுகொலை ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது.

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என ஹிந்துத்துவா சக்திகளும், குஜராத் அரசும் பிரச்சாரம் செய்துவந்தன. ஆனால், யு.சி.பானர்ஜியின் விசாரணை கமிஷன் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நிகழ்வதற்கு காரணம் ரெயில் பெட்டிக்குள் பயன்படுத்தப்பட்ட எரிபொருள்தான் எனக்கூறியது. இதற்கு சாட்சிகளின் வாக்குமூலங்களும், அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் ஆதாரமாக இருப்பதாக பானர்ஜி கமிஷன் தெரிவித்தது. மேலும், போலீஸ் கூறுவதைப்போல், 60 கி.மீ வேகத்தில் செல்லும் ரெயில் மீது பெட்ரோலை ஊற்றுவது சாத்தியமல்ல. பெட்டியின் உள்பகுதி பூட்டியிருந்ததால் வெளியேயிருந்து எவரும் உள்ளே நுழையவும் வாய்ப்பில்லை. ஆரம்பத்தில் பெட்டியிலிருந்து உருவான கரிந்த வாசனையும், புகையும் பெட்ரோல் மூலமாக பெட்டியில் தீப்பிடிக்கவில்லை என்பதை நிரூபிப்பதாக உள்ளன. கரசேவகர்கள் ரெயிலுக்குள் வைத்து சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ பரவி பயணிகளின் பேக்கேஜ்களில் தீப்பிடிக்க காரணமாயிருக்கலாம் என பானர்ஜி கமிஷன் தெரிவித்திருந்தது. ஆனால், குஜராத் அரசால் நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷனின் இடைக்கால அறிக்கை பெட்ரோல் வெளியேயிருந்து ரெயில் பெட்டியின் மீது ஊற்றப்பட்டதாகவும், திட்டமிட்ட சதி எனவும் தெரிவித்தது.

நீதிமன்றம் நானாவதி கமிஷனின் அறிக்கையை ஒப்புக்கொண்டுவிட்டு, பானர்ஜி கமிஷனின் அறிக்கையை புறக்கணித்துள்ளது அதன் தீர்ப்பிலிருந்து தெரியவருகிறது. கோத்ரா ரெயில் எரிப்பில் கைதுச் செய்யப்பட்டவர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு நிர்பந்தப்படுத்தி வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கு முடிவடைந்துவிட்டது. ஆனால், பல ஆயிரம் முஸ்லிம்களை கொடூரமாக கொன்றொழித்த குஜராத் இனப்படுகொலைத் தொடர்பான வழக்குகள் இழுத்துக்கொண்டே செல்கின்றன.

முஸ்லிம்கள் குற்றவாளிகளாக்கப்படும் வழக்குகளின் விசாரணைகள் மட்டும் இந்தியாவில் வேகமாக நடந்து தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனைகள் அளிக்கப்படுவது எதேச்சையான ஒன்றல்ல.

அப்துல் நாஸர் மஃதனி கோவைக் குண்டுவெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகள் சிறையில் கழித்து உடலும் உள்ளமும் பலகீனம் அடைந்த நிலையில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். ஆனால், அவர் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு வழக்கின் பெயரால் சிறைக்கொட்டகைக்குள் தள்ளப்பட்டுள்ளார்.

2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நிரபராதிகளான முஸ்லிம்களை இதுவரை விடுதலைச் செய்யவில்லை. அஸிமானந்தாவின் வாக்குமூலத்தில் மலேகான் குண்டுவெடிப்பை திட்டமிட்டு நிகழ்த்தியது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தாம் என்பது நிரூபணமாகியும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவிப்பதற்கு தடையாக நிற்பது மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐயாகும்.

மஹராஷ்ட்ரா அமைப்பு ரீதியான குற்றத்தடுப்பு சட்டம், சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டம் போன்ற கறுப்புச்சட்டங்கள் போலீஸாருக்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்கும் பொழுது அது மூலமாக நிரபராதிகள்தாம் சிறைக் கொட்டகையில் தள்ளப்பட்டு தங்களது வாழ்க்கையின் மதிப்புமிக்க காலங்களை இழந்து வருகின்றனர்.

தாங்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிக்கும் பொறுப்பும் இத்தகைய அப்பாவிகள் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளது என்பது மிகக் கொடூரமானதாகும். நிரபராதிகள் சிறையிலடைக்கப்பட்டு, குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் தேசத்தில் ஜனநாயகம் எவ்வாறு தழைத்தோங்கும்? அந்த தேசத்தை முன்னேறிய தேசம் என்றோ அல்லது நாகரீகமடைந்த தேசம் என்றோ கூற இயலுமா?

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::