“”குடி உயர கோல் உயரும்நன்றி:
கோல் உயர குடி உயரும்” -ஒளவையார்
ஆரோக்கியம், கல்வி, பொருளாதாரம், வாங்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டுதான் ஒரு நாட்டின் முன்னேற்றம் கணிக்கப்படுகிறது. முன்னேற்றத்திற்கு முதல் காரணி ஆரோக்கியம்; இது இல்லாத நாடு சவலைப் பிள்ளைக்குச் சமமானது.
ஆரோக்கியமும் கல்வியும் எந்த நாட்டில் வலிமையாக உள்ளதோ அது வல்லரசு நாடு. எல்லோருக்கும் கல்வி என்ற இலக்கை எட்டப்போகும் வேளையில் இடியாக இறங்கியது இந்தச் செய்தி. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட நூறு சதவீதத்திற்கும் அதிகமாக தீபாவளி மது விற்பனை ரூபாய் 220 கோடி! இது கடந்த ஆண்டை விட நூறு சதவீதத்திற்கு மேல் அதிகம் என்பதே அந்தச் செய்தி. இந்தியா முழுவதும் மதுவிலக்குக் கொள்கை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்டு இருந்தாலும் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்றாகவே நீண்ட காலமாக இருந்தது 1972-வரை. அன்று முதல்வராய் இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதி தான் மதுவிலக்கை ரத்து செய்தார்.
1983-84களில் 139.41 கோடியாக இருந்த மது வருவாய் இன்று பல ஆயிரம் கோடியாக உயர்ந்தது; அரசின் கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. குடி ஒரு தீமை என்ற குற்ற உணர்வே இல்லாமல் குடித்துக் கொண்டிருக்கிறார்கள் வெகு ஜன மக்கள். இதில் மிகப் பெரிய சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் என வித்தியாசமில்லாமல் மதுவின் போதையில் மயங்கிக் கிடக்கிறார்கள். நம்முடைய பொது புத்தியும் இதெல்லாம் “சாதாரணம்பா” என்று ஏற்றுக் கொண்டு விட்டது.
“தனி மனித சுதந்திரம்’ புழக்கத்திலிருக்கும் இப்புதிய சொல்லாடலால் தவறுகளுக்குத் தகுந்த பாதுகாப்பு கிடைக்கிறது; வீட்டிலும் “ஊற்றிக் கொடுக்கும் மனைவிமார்கள்’; வெளியே சென்று அதிகமாகக் குடித்து கெட்டுப்போகாமல் நாமலே வீட்டில் ஒரு பெக்கோ இரண்டு பெக்கோ ஊற்றிக் கொடுத்தால் நல்லது தானே! வக்காலத்து வாங்கும் தாய்மார்கள் பெருகி வருகிறார்கள் தெரியுமா?
பண்பட்ட கலாச்சாரத்தின் வழிவந்தவர்கள் நாம். குடியைக் குற்றமாகக் கருதி வெறுத்தோம். இன்று பாரில் (BAR) அமர்ந்து குடிப்பதை நாகரீகமாகவும், “பார்ட்டி’களில் குடித்து கும்மாளமிடுவதை நவீன நாகரீகமாகவும் கருத வேண்டிய சூழலுக்கு நம் உணர்வுகள்?!! உலகமயமாக்கள் தந்த அன்பளிப்புகளில் இதுவும் ஒன்றல்லவா? குடிப்பதும், புகைப்பதும் தவறே இல்லை;
இக்கருத்தை ஊடகங்களும் உயர்த்திப் பிடிக்கின்றன. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மதுவோடுதான் நிறைவு பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். இதில் இளம் பெண்களும் இணைந்து கொள்கிறார்கள். மதுவுக்கு எதிராக போராடிய மாதர்கள் எங்கே போனார்கள்?
ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கும், மளிகை சாமான் ஐம்பது ரூபாய்க்கும், கண்டு கழிக்க இலவச கலர் டிவியும் இருக்கும் போது போராட புத்தி போகுமா? தீராத மாமியார் மருமகள் பிரச்சனை, தீங்கு செய்ய நினைக்கும் நாத்தினார், திருமதி மனைவி தேவைப்படும் போதெல்லாம் வெகுமதியோடு வர நினைக்கும் கணவன், மச்சான் சொத்தை மங்கeம் பாட நினைக்கும் மைத்துனர்கள், மாமனாரின் கள்ளத் தொடர்பை கண்டு பிடிக்கும் மருமகன் என உறவு சிக்கல்களே ஒவ்வொரு தொடரும் போதித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிழலுக்கு அழுவதற்கே நேரம் போதவில்லை-பிறகு எங்கே போராடுவது?
அத்தகைய எண்ணமே வந்துவிடக் கூடாது என்பதால்தான் சலுகைகள், இலவசங்கள் லஞ்சமாக தரப்படுகிறது. இது குறித்து எந்தக் கட்சியும் கண்டிக்கவும் இல்லை; கண்டு கொள்ளவும் இல்லை. பதவி போதைக்காக பேரம் பேசுபவர்கள் மது போதைக்கு எதிரான போராட்டத்தை எங்கே முன் எடுத்துச் செல்லப் போகிறார்கள். எவருமே தயாராக இல்லாதபோது தீமைகளை எப்படித்தான் ஒழிப்பது?
மிக சிறந்த முஸ்லிம் சமுதாயம் கூட “உள் மார்க்கம்’ பேசி காலம் கடத்துகிறது. ஊர் பிரச்சனையை கண்டு கொள்வதேயில்லை “குடி’ தனி மனித-குடும்ப-பிரச்சனையாகவே குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. இது தவறு; குடியினால் நாட்டின் அறிவு, செல்வம் அழிகிறது; உழைக்கும் திறன் ஏழு முதல் பத்து சதவீதம் குறைந்து போய் விடுகிறது. தனி நபர் சேமிப்பு செல்லா காசு. வாழ்க்கை வளமும்-நலமும் நசுக்கப் படுகிறது. தனி மனித ஒழுக்கம் ஒழிந்து சமூக விரோதச் செயல்கள் அதிகரிக்கின்றன.
புதிய புதிய போதைப் பொருட்களை நுகரும் பழக்கம் ஏற்படுகிறது. இப்படிப் பழகியவர்கள் உலக மக்கள் தொகையில் சுமார் பதினெட்டரை கோடி பேர்; இதில் பெரும் பகுதியினர் பதினெட்டு வயதிலிருந்து முப்பத்தைந்து வயதிற்குட்பட்டவர்கள். பகிரங்கமாக அரசுகள் விற்கும் மதுவை தவிர்த்து, கள்ளச் சந்தையில் விற்கும் போதை பொருட்களின் விற்பனை வருவாய் ஆண்டுக்கு சுமார் நாற்பதாயிரம் கோடி டாலராகும். இது எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையில் புழங்கும் தொகையை விட கூடுதல் ஆகும். இதை உலக வர்த்தகத்தில் எட்டு சதவீதத்துக்கு ஈடாகப் புரிந்து கொள்ளலாம். தனி நபர் பிரச்சனையல்ல; சமூகம் சார்ந்தது குடி.
அண்ணா வழியில் அயராது உழைப்போம் என சொல்லி ஆட்சிக்கு வந்த கருணாநிதி அவர்களே! “”நிதிப்பற்றாக்குறை இருப்பதைக் காரணம் காட்டி மது விலக்குக் கொள்கையை நான் தளர்த்தி விட்டேன் என்றால், சாமான்ய மக்கள் குடிகாரர் களாக மாறி தமிழகத்தின் எதிர்காலமே இருண்டு விடும். எனவே மதுவிலக்கை ரத்து செய்ய மாட்டேன். எனக்குப் பின்னால் வரும் இளைய சமுதாயத்தினரும் குடி என்றால் என்னவென்றே தெரியாமல் இருப்பார்கள்” என்றார் அண்ணா. இதுதான் அவர் வழியில் நடக்கும் லட்சணமா? இறந்து இவ்வளவு காலத்துக்குப் பிறகும் நெஞ்சில் நிறைந்திருக்கிறார் அண்ணா; ஆனால் நீங்கள்?
ஒவ்வொரு வருடமும் குடிகாரர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் ஆதாரம் தருகிறார்கள் இப்படி.
இந்த புத்தாண்டு தினத்தில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 7432 டாஸ்மாக் கடைகளில் மட்டும் ரூபாய் 47 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. இது கடந்த வருடத்தை விட பத்து சதவீதம் அதிகமாகும். (2.1.10 தினந்தந்தி).
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என அடிக்கடி அடுக்கு மொழி பேசும் கருணாநிதி அவர்களே! உங்களால் இறைவனைக் காணவே முடியாது. குடிகார மனிதனையே காண முடியும். அவன் வறுமை அகழவில்லை. வாழ்க்கை தரம் உயரவில்லை. மலர் விற்ற காசு மணப்பதில்லை தான்; ஆனால் மது விற்ற காசு மயக்கம் தருகிறதே!
பல ஆண்டுகளாய் குடித்துக் குடித்து குடல் வெந்து உள்ளுறுப்புகளும் கெட்டு ஒருவன் எந்த நோயில் பாதிக்கப்பட்டாலும் இருக்கவே இருக்கு கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என வக்காலத்து வாங்கும் கழகக் கண்மணிகளே! அடுத்த தலைமுறை உங்களை ஏற்க மறுக்கும்; இலவசங்களை ஏற்பதை இழிவாகக் கருதும்; கல்லாமை ஒழியும் போது கழக ஆட்சி காணாமல் போகும்; அந்த காலம் வெகு தூரத்தில் இல்லை.
பெங்களூர்
M.S..கமாலுத்தீன்
அந்நஜாத் மார்ச்2010
அபுநபீலா
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment