Friday, February 5, 2010

டென்ஷன் ஆவது ஏன்?

ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை பலவிதமான இன்பங்களையும், துன்பங்களையும் சந்திக்கின்றான். இது மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. இதுபற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகையில், நிச்சயமாக கஷ்டத்துடனேதான் இலகு உள்ளது. (அல்குர்ஆன் 94:6)




மேலும் ஓரிடத்தில், நிச்சயமாக நாம் ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் உங்களைச் சோதிப்போம் பொறுமையாளர்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (2:155)



அல்லாஹ் ஒருவருக்கு நன்மையை நாடினால் அவரை அவன் சோதிக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் புஹாரி, முஸ்லிம்)



இவ்வாறு அல்குர்ஆனிலும், ஹதீதுகளிலும் ஏராளமாகச் சொல்லப்பட்டு விட்டது. இவைகளையெல்லாம் அதிகமானோர் பார்ப்பதுமில்லை, சிந்திப்பதுமில்லை. மாறாக எதற்கெடுத்தாலும் வீணான தடுமாற்றம், நிலைகுலைதல், உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றால் ‘டென்ஷன்’ எனும் நோய்க்குள்ளாகியே தனது வாழ்வில் பாதியை நரகமாக ஆக்கிக் கொள்கிறார்கள். பூமியிலோ உங்களிலோ எந்தவோர் துன்பம் நேர்ந்தாலும் அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னர் பதிவேட்டில் இல்லாமலில்லை. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும் (அல்குர்ஆன் 57:22)



ஆக ஒரு மனிதன் டென்ஷன் ஆகுவதற்கு முக்கிய காரணம் அவனிடம் உறுதியான ஈமானில்லாததுதான். இதில் அவன் உறுதியாக இருந்தால் எக்கவலையும் படத்தேவையில்லை. அதாவது அவனுடைய உள்ளத்தில் லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற அடிப்படையான கலிமா ஆழமாக அஸ்திவாரமிடப்பட்டிருக்க வேண்டும். எனவே முதலில் நீங்கள் உங்களை ஒரு நல்ல முஃமினாக மாற்றிக் கொள்ள வேண்டும். வெளித்தோற்றத்தால் மாத்திரமன்றி உள்தோற்றத்தாலும் (உள்ளம்) பரிசுத்தமாகி உறுதியான ஈமானை நிறைபெறச் செய்வதன் மூலம் ஒவ்வொரு செயலையும் செய்யும் முன் எம்மைப் படைத்த ரப்புல் ஆலமீனிடமே முதல் விண்ணப்பத்தைப் போட வேண்டும்.



எந்த நற்காரியமாக இருந்தாலும் அவன் பெயரில் ஆரம்பம் செய்யும்போது எங்களுக்கு எவ்வித சிக்கல்களும் வரப் போவதில்லை. அப்படி ஏதாவது தடங்கல்கள் வந்தாலும் அதிலும் ஏதாவது நன்மை இருக்கும் இது எம்மைப்படைத்தவன் எமது ஈமானைச் சோதிப்பதற்காக வைக்கும் பரிட்சையாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் கூட டென்ஷன் ஆகாமல் ஆக வேண்டிய காரியங்களைச் செய்யும் போது சுலபமாக எல்லாமே நிறைவேறிவிடும். இதுப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது, இறை நம்பிக்கையாளனின் நிலை வியப்புக்குரியது! அவன் எந்த நிலையில் இருந்தாலும் அதனால் நன்மைகளையே குவிக்கின்றான் இந்த நற்பேறு வேறு எவருக்கும் கிடைப்பதில்லை. (இறை நம்பிக்கையாளனைத் தவிர) அவன் வறுமை, நோய், துன்பம் ஆகிய நிலைகளில் இருந்தால் பொறுமையைக் கைக்கொள்கிறான். செல்வம், செழிப்பான நிலையில் இருக்கும் போது நன்றி செலுத்துகிறான். இந்த இரண்டு நிலைகளுமே அவனுக்கு நன்மைக்கான காரணங்களாய் அமைகின்றது. இந்த விஷயத்தில் தான் எம்மக்கள் பெரும் தவறு செய்கின்றார்கள். எப்படியான முஃமினாக இருந்தாலும் இது விஷயத்தில் கோட்டை விட்டு விடுகின்றனர். இன்பத்தில் நன்றி செலுத்துவதுமில்லை, துன்பத்தில் பொறுமையைக் கைக் கொள்வதுமில்லை. அதற்கும் பாளாய் போன இந்த டென்ஷன்தான் காரணம்.



டென்ஷன் அடிப்படை மையமே இந்த உள்ளம் தான். இது கெட்டு விட்டால் எமது உடலே கெட்டுவிடும். இதனால் இரத்த அழுத்தம், புற்று நோய், சக்கரை வியாதி போன்ற பயங்கரமான வியாதிகளையெல்லாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் எனவே இதிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் ‘திக்ர்’ பெரும் பங்கு வகிக்கிறது. எனவே நேரங்களை ஒதுக்கி நாம் திக்ர் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். இதனால் நம் உடலில் சகல பாக்கியங்களையும் பெறுவதுடன் உள்ளமும் அமைதி பெறும். காலையிலும் மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டிருப்பீராக என்று அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடுகின்றான். இப்படி எங்கள் வாழ்க்கையில் எந்த நேரமும் திக்ர் செய்யக் கூடியவர்களாக நாம் மாறிவிட்டால் டென்ஷன் என்ற வார்த்தைக்கே இடமிருக்காது.



ஒரு வகையான ஷைத்தானின் ஊசலாட்டம் தான் இந்த டென்ஷன் இதற்கு இஸ்லாம் நல்ல வழிமுறைகளைச் சொல்லித் தந்திருக்கிறது. காலையில் விழித்ததிலிருந்து தூங்கும் வரைக்கும் செய்யும் அனைத்து காரியங்களையும் தூய்மையான எண்ணத்துடன் இறைவனுக்காகச் செய்யும் பொழுது அது நன்மையை பெற்றுத்தரும் காரியமாக மாறுகிறது. எனவே காலை, மாலை துவாக்கள், சாப்பிடும்போது, கழிவறைக்குச் செல்லும்போது, வீட்டைவிட்டு வெளியேறும்போது, தூங்கும்போது போன்ற அனைத்து செயல்களிலும் ஓத வேண்டிய துவாக்களை ஓத வேண்டும். இப்படி செய்யும் பொழுது ஒவ்வொரு விநாடியும் எம்மிறைவனை நாம் நினைத்துக் கொண்டேயிருக்கிறோம். அத்துடன் நம்மை அவன் எந்த நிலையிலும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற இஹ்ஸான் நிலை எம்மில் ஏற்படுகிறது. இந்திலையில் எவ்விதமான கெட்ட செயல்கள் செய்வதற்கும் நாம் முன்வரமாட்டோம். இதனால் தேவையில்லாத டென்ஷனைவிட்டும் நம்மை நாம் காத்துக் கொள்கிறோம்.



டென்ஷனாவதற்கு அடுத்த முக்கிய காரணம் பேராசையாகும். எம் வாழ்வில் சகல நிலைகளிலும் எமக்கு மேல்மட்டத்திலுள்ளவர்களின் நிலையோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். இதனால் நம்மை அறியாமலே நாம் அவர்களைப் போலாக வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. பொறாமையுடனும், கர்வத்துடனுமான வீணான டென்ஷன்தான் வரும். மனிதனுக்கு ஒரு ஓடை நிரம்ப தங்கம் இருந்தாலும் தனக்கு (அது போல்) இரண்டு ஓடைகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். அவனது வாயை மண்தான் நிரப்பும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)



அல்லாஹ் அல்குர்ஆனில் பேராசைபற்றி இப்படிக் குறிப்பிடுகிறான். உங்களில் சிலரை மற்றும் சிலரைவிட அல்லாஹ் சிறப்பித்திருப்பதில் நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள் (அல்குர்ஆன் 4:32)



மேலும் நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை, அதிகமாகத் தேடும் ஆசை உங்களைப் பராக்காக்கிவிட்டது (அல்குர்ஆன் 102:1)



எனவே இவ்வுலக வாழ்க்கை வெறும் சோதனைக்களம்தான் இதில் கூடுதலாக பேராசைப்படாமல் இறைவன் எமக்குத் தந்ததை போதுமாக்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.



குடும்பப் பெண்கள் கூடுதலாக இந்த டென்ஷனுக்கு ஆளாகிறார்கள். தங்களது வீட்டு வேலைகளை உரிய நேரத்தில் முடிக்காமல் பிறகு செய்வோம் என்று தள்ளிப் போட்டுவிட்டு தேவையில்லாத சினிமாக்களைப் பார்ப்பதில் நேரத்தை வீணடிக்கிறார்கள். அது மட்டுமல்ல அதில் வருகிற அர்த்தமற்ற அழுகைக்குப் பின்னால் தாமும் உணர்ச்சி வசப்பட்டு அழுது பாவத்தைத் தேடிக் கொள்கிறார்கள். இந்தக் கண்களால் அல்லாஹ்விற்குப் பிடித்தமாதிரி நல்லதைப் பார்த்து நாம் செய்த பாவங்களுக்கு இறைவனிடத்தில் அழுது புலம்பி மன்னிப்புக் கேட்டிருக்கின்றோமா என்றால் இல்லவே இல்லை. இது ஒரு தேவையில்லாத டென்ஷன்தானே.



எனவே உரிய உரிய வேலைகளை உரிய நேரத்தில் செய்து முடிக்கும்போது எங்களுக்கு எந்த விதமான டென்ஷனும் வரப் போவதில்லை. அத்துடன் நமக்குக் கூடுதலான நேரமும் மிச்சப்படும். நமக்குக் கிடைக்கும் உடல் ஆரோக்கியமும், ஓய்வான நேரமும்தான் நமக்கு அல்லாஹ் வழங்கிய உண்மையான அருள் என்ற நபிமொழியை மனதில் எடுத்து எமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களையும் நல்ல விஷயங்களை சிந்தித்து செயல்பட பழகிக் கொள்வோமேயானால் டென்ஷன் தானாக ஓடிவிடும்.



நான்கு பேருக்கு விருந்து கொடுப்பதாக இருந்தாலும்கூட எம்பெண்களுக்கு டென்ஷன் ஏற்பட்டுவிடும். இது போக விருந்திற்கு வருபவர்கள் சமைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வந்துவிட்டாலோ அவர்கள் படும்பாட்டை பார்க்கத் தேவையில்லை. எனவே நாம் அப்படிப் போவதாக இருந்தால் ஒரு போன் செய்து அவர்களுக்கு முன் அறிவிப்பு செய்துவிட்டுச் செல்ல வேண்டும்.



ரமளான் மாதம் வந்துவிட்டாலே போதும் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் கூடுதலாக டென்ஷாவது வழக்கம் நோன்பு திறப்பதற்கு என்னென்ன வகையான உணவுப் பண்டங்களையெல்லாம் சமைக்க முடியுமோ அதையெல்லாம் சமைத்துக் கொண்டிருப்பது. அந்தந்த நேரத் தொழுகைகளைக்கூட உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில்லை. கடைசி நேரத்தில் டென்ஷனாகிக் கொண்டு லுஹர், அஸர் எல்லாம் சேர்த்து ஒன்றாகவே தொழுவார்கள். கடைசியில் நோன்பு திறப்பதில் கூட அக்கரை செலுத்துவதில்லை. அதான் சொன்ன பிறகுதான் அய்யோ நோன்பு திறக்க வேண்டுமே என்று பதறியடித்துக் கொண்டு நோன்பைத் திறப்பார்கள்.



அத்துடன் பெருநாளைக்குத் தேவையான துணிமனிகளை எடுப்பதில் கூட டென்ஷனாகித் திரிவார்கள். எந்தவகை டிசைனைத் தேர்வு செய்வது என்று தெரியாமல் கடைகடையாக ஏறி இறங்கி கடைசியில் வரும் அந்தப் புனிதமான லைலத்துல்கத்ரின் இரவைக்கூட அவர்களால் அடைய முடியாமல் போய்விடுகிறது. எனவே இப்படிபட்ட நிலைமைகளிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும் இந்தப் புனிதமான மாதத்தை வீணாக்காமல் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நேரம் தவறாமல் தொழுகையை நிறைவேற்றுவது, சுன்னத்தான தொழுகைகளையும் சேர்த்துக் தொழுவது, அல்குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டும் அத்துடன் பெருநாளைக்குத் தேவையான துணிமனிகளை ரமளான் மாதத்திற்கு முதல் வாரமே எடுத்து வைத்துவிட வேண்டும். இப்படி செய்தோமேயானால் நமது உள்ளமும் உடலும் தூய்மையடைவதுடன் புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது. எந்தவகையான டென்ஷனுக்கும் ஆளாக மாட்டோம்.



மாணவர்களுக்குப் பரீட்சை வந்தாலே முதலில் டென்ஷனாவது பெற்றோர்கள்தான். இது முற்றிலும் தவறானதாகும் எப்பொழுதாவது ஒரு நாள் அந்த வருடத்திற்கான பரீட்சை வரும் என்று எமக்குத் தெரியும்தானே எனவே அதற்குத் தகுந்த மாதிரி எம்மை ஆயத்தம் செய்து கொள்ள வேண்டும். எல்லாப் படிப்பையும் ஒரே நேரத்தில் படிக்க இருக்காமல், அந்தந்த நாட்களுக்குரிய படிப்பை உடனுக்குடன் படித்து அதில் முக்கியமான விஷயங்களை சிறு குறிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்யும் போது நாங்கள் கடைசி நேரத்தில் டென்ஷனாக வேண்டிய தேவையே ஏற்படாது. அத்துடன் மாணவர்கள் தேவையில்லாத இன்டர்நெட் தொடர்பு, டெலிபோன் தொடர்புகளை எல்லாம் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும். இது விஷயத்தில் பெற்றோர்களும் கூடுதலான கவனமெடுக்கத் தவறக்கூடாது.



டென்ஷனாவதற்கு அடுத்த முக்கியமான காரணம் எமக்கு ஏற்படும் மிருகத்தனமான கோபமாகும். இது ஷைத்தானின் குணங்களில் ஒன்றாகும் கோபம் வரும் போது நம்மை அறியாமல் செய்வதையெல்லாம் செய்துவிட்டு பின்புதான் இப்படிச் செய்துவிட்டோமே என்று யோசிப்பது. கோபம் வரும்போது தன்னை அடக்கி ஆள்பவன்தான் வீரனாவான் ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் கோபம் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள் (ஆதாரம் – புஹாரி, முஸ்லிம்) எனவே கோபம் வரும் போது டென்ஷனாகாமல் அஊதுபில்லாஹி மினஸ்ஷைத்தான்னிர்றஜீம் என்று சொல்லிக் கொண்டால் கோபம் அப்படியே தனிந்துவிடும்.



பணிப்பெண்கள் என்ற போர்வையில் வெளிநாடு வரும் பெண்கள் படும்பாட்டைக் கொஞ்சம் உற்று நோக்குவோமானால் அதுவும் கூட பருவக்கோளாறினால் ஏற்படுகின்ற டென்ஷன் என்றால் அது மிகையாகாது. இதனால் இவர்கள் வேலை செய்யவரும் வீட்டை விட்டு வெளியேறி இங்கு நம்மை கேட்க ஆளில்லைதானே என்று நினைத்துக் கொண்டு தம்பாட்டிற்கு வருபவர் போபவரோடெல்லாம் உறவு பிடித்து தனது கற்பையே பறிகொடுத்துவிட்டு நிற்கெதியாக நிற்கின்றனர். பிறகுதான் இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்டு வாழ்வதா சாவதா என்ற முடிவிற்கு ஆழாகின்றனர். எனவே இந்த விபச்சாரத்தில் வீழ்ந்து சீரழிந்து போவதைத் தடுப்பதற்குத்தான் இஸ்லாமிய மார்க்கம் பருவ வயதோடு திருமணம் செய்யும்படி பணிக்கிறது. இந்த வகையில் சீதனப்பிரச்சினையும் பெற்றோருக்கு பெரும் டென்ஷனை ஏற்படுத்துகிறது. இதனால்தானே அவர்கள் தம்பிள்ளைகளை வெளிநாட்டிற்கு உழைக்க அனுப்புகிறார்கள். இந்தப் பாவம் சீதனக் கொடுமைக்காரரை சும்மாவிடாது.



நம்மில் பெரும்பாலானவர்கள் கணவரை, பிள்ளைகளை அவரவர் வேலைகளுக்கு வாகனங்களில் அனுப்பிவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டு தேவையில்லாமல் டென்ஷனாவது. எங்கே போய் சேர்ந்திருப்பார்களோ அல்லது இடையில் ஏதாவது ஆகியிருக்குமோ என்றெல்லாம் தடுமாறுகிறார்கள் எனவே நாம் அவர்களை அனுப்பும் போது படைத்தவனை நினைத்து அவனுடைய துணையுடன் போய்வரும்படி வழியனுப்ப வேண்டும்.



(மனிதனாகிய) அவனுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடிய வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைப் பாதுகாக்கின்றனர் (அல்குர்ஆன் 13:11).



இந்த திருமறை வசனத்தின் மூலம் தெளிவாகக் கூடியதாக இருக்கிறது. எனவே எம் அனைவரையும் அல்லாஹ் நிச்சயமாக பாதுகாக்கக்கூடியவன் என்ற உறுதியான நம்பிக்கை எம்மில் ஏற்பட வேண்டும்.



ஆக மொத்தத்தில் மனோபாவம்தான் எல்லாவகையான டென்ஷனுக்கும் காரணமாக அமையும். இந்தக் குட்டிக்கதை எமக்கு நல்ல பாடமாக அமைகிறது. ஒரு பாலைவனத்தில் இருவர் ஒட்டகத்தில் போய்க் கொண்டிருந்தனர். சற்றுக் களைப்பு வரவும் இருவரும் ஓர் ஓரமாக சாய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டனர். திடீரென்று ஒட்டக ஓட்டியை மற்றவர் படாதபாடு படுத்துகிறார். அவரை உருட்டி, பிரட்டி, காலை இழுத்து, தலையை அசைத்து, இப்படிச் செய்யும் போது ஓட்டக ஓட்டிக்குக் கோபம் வந்தது. ஏன் என்னை நீ இந்தப்பாடு படுத்துகிறாய் என்று கேட்டால் நீ கொஞ்சம் சும்மா இரு என்று சொல்லிவிட்டு இவர் வேலையையே பார்த்தார். நீ சற்று நேரம் வாயைத் திறந்து கொண்டே தூங்கிவிட்டாய் உன் வாயில் குட்டிப்பாம்பு சென்றுவிட்டது அதை எடுத்துவிடவே இந்தப்பாடு படுத்தினேன் என்று பாம்பு வாயிலிருந்து வந்தபின் சொன்னார் ஏன் இதை முன்னமே சொல்லக்கூடாதா என்று அவர் கேட்டார் அதற்கு மற்றவர் முன்னமே சொல்லியிருந்தால் நீ டென்ஷனால் செத்தே போயிருப்பாய் என்று கூறினார்.



இது போலத்தான் வைத்தியர்களிலும் சிலர் இருக்கின்றனர். ஒரு நோயாளியைப் பார்த்ததும் உடனே சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் அப்படி, இப்படி என்று அவரை டென்ஷனாக்கி விடுகின்றனர். இந்நிலையில் அவரது நோய் இருந்ததைவிடவும் அதிகரிக்கிறது. எனவே முதலில் வைத்தியர்கள் நோயாளிகள் இப்படியான நிலையில் இருந்தாலும் அவர்களை டென்ஷனாக்காமல் ஆறுதலாகவும் அன்பாகவும் எடுத்துச் சொல்லும் போது பாதி நோய் போய்விடும். எனவே இவர்களுடைய பராமரிப்பிலேதான் நோயாளார்கள் கூடுதலாக டென்ஷன் இல்லாமல் மன உறுதியுடன் போராடி குணமடைகின்றனர்.



உன் மனம் உன்னை என்ன நினைக்கிறது என்று நீ உன்னைப்பார் பிறர் என்னை என்ன நினைக்கிறார் என்று நினைக்காதே. நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் உனக்கு துன்பம் ஏதும் வந்தால் நான் இப்படிச் செய்திருந்தால் இப்படி ஆகியிருக்கும் என்றெண்ணாதே மாறாக, அல்லாஹ் இதனை விதித்துள்ளான், அவன் விரும்பியதைச் செய்தான் என்று கருது. ஏனெனில் இப்படிச் செய்திருந்தால், அப்படிச் செய்திருந்தால் என்றெண்ணுவது ஷைத்தானின் செயற்பாட்டிற்கு வழிதிறந்து விடும் எனவே எது நடந்தாலும் இறைவனின் நாட்டப்படியே நடைபெறும் என்ற உறுதியான நம்பிக்கையை எம்மில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். உண்மை முஃமின் எந்த நேரமும் ஒரே நிலையில் இருப்பான் துக்கமோ சந்தோஷமோ இறைவன் பக்கம் விட்டுவிட்டு தைரியமாகவும் மனம் சஞ்சலப்படாமலும் மறுமையை நோக்கியதாகவே அவனுடைய பயணம் இருக்கும்.



ஆனால் வரவிருக்கும் இந்த மறுமையைப் பற்றி பெரும்பாலானவர்கள் சிந்திப்பதுமில்லை டென்ஷனாவதுமில்லை அந்த மஹ்ஷரில்தான் இப்படிப்பட்டவர்கள் போய் நின்று கொண்டு டென்ஷனாவார்கள் போலும் அங்கே போய் நின்று டென்ஷனாகி என்ன பயன் ஒன்றுமே ஆகப்போவதில்லை. நீயே ஒரு டென்ஷன் என்று அவன் நரகிலே வீசப்படுவான். எனவே உண்மை உள்ளம் கொண்ட மனிதர்களாக டென்ஷன் என்ற வார்த்தைக்கே இடம் வைக்காமல் எம் வாழ்க்கையை அல்குர்ஆன், ஹதீது பிரகாரம் அமைத்துக் கொண்டு சுபீட்சமாக, சுகமாக வாழ்ந்து இறையடி சேர எங்கள் அனைவருக்கும் அந்த வல்லோன் துணை புரியட்டும்.



- ஸஃபியா N.ஜமான்,

அர்ருவைஸ், ஜித்தா, சவூதி அரேபியா



நன்றி: சுவனம்.காம்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::