Friday, February 12, 2010

பொருளாதார வழிகாட்டல்

இணையத்தள வாசகர்களே... தமிழகத்தில் இஸ்லாமிய பிரச்சாரம் மிகத் தீவிரமாக முடுக்கி விடப்பட்டு இருபது ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையிலும் இதுவரை முறையாக கவனம் செலுத்தப்படாத ஒரு துறையாக பொருளாதார துறை உள்ளது. தொப்பிப் பற்றியும், விரலசைப்பதுப் பற்றியும், தராவீஹ் என்ற இரவுத் தொழுகைப் பற்றியும் பேசி எழுதி விவாதித்ததில் ஒரு பங்கு கூட வாழ்வின் மிக முக்கியத் தேவையான பொருளாதார வழிகாட்டலுக்கு நாம் ஒதுக்கவில்லை. களத்தில் நிற்கக் கூடிய இஸ்லாமிய அறிஞர்கள் பொருளாதார வழிகாட்டல் குறித்து ஏன் சிந்திக்கவேயில்லை, சிந்திப்பதேயில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.

பொருளாதார வழிகாட்டல் வாழ்விற்கான தலையான அம்சமாகும். தொப்பி போன்ற அற்ப விஷயங்களுக்காக சிதையும் இளைஞர்களின் கவனம், சமீபத்தில் அனல் பறக்க மோதிக்கொள்ளும் அரசியல் மற்றும் இயக்க போராட்டங்களில் ஈடுபடும் இளைஞர்களின் கவனம் பொருளாதார வழிகாட்டல், கட்டமைப்பு, சீர்திருத்தத்தின் பக்கம் திரும்ப வேண்டும். இஸ்லாமிய அறிஞர்களும் சமூக ஆர்வளர்களும் இதற்கு துணை நிற்க வேண்டும்.

உலகெங்கும் வங்கிகள் வியாபித்துள்ள நிலையில் வங்கி முதலீடு அதிலிருந்து வரும் வருவாய் போன்றவற்றில் அகில உலக முஸ்லிம்களுக்கும் சந்தேகங்கள் நீடித்தவண்ணமுள்ளன. வெளிநாடுகளில் இது பற்றிய ஆய்வுகளும், விளக்கங்களும் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாகவே இந்தக்கட்டுரை உங்கள் பார்வைக்கு.. இந்தக்கட்டுரையின் கருத்துக்களை இஸ்லாமிய (இறுதி) தீர்வாக நாம் வைக்கவில்லை. பலகோணங்களில் படித்து கேட்டு விளங்கி ஆய்வு செய்ததையே முதல் முறையாக உங்கள் பார்வைக்கு வைக்கின்றோம். முறையான விளக்கங்களும் ஆதாரங்களும் கிடைக்கும் போது இந்த கட்டுரையின் கருத்துக்களில் மாற்றங்கள் வரலாம்.

இதுபற்றிய ஒரு விரிவான ஆய்வுகளத்தில் உங்களையும் கலந்துக் கொள்ளுமாறு அழைக்கின்றோம். ஆதவான, எதிர்மறையான, சந்தேகமான அனைத்துக் கருத்துக்களையும் தயக்கமின்றி, அலட்சியமின்றி எழுதுங்கள்.

குர்ஆன் சுன்னா வழிகாட்டும் அந்த பொருளாதார அமைப்பு குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

அ) வட்டி என்றால் என்ன..?
ஆ) நம் விருப்பத்துடன் வட்டி நம் பொருளாதாரத்துடன் இணைய வேண்டுமானால் அதற்குரிய நிபந்தனைகள் என்னென்ன..?
இ) இன்றைக்கு உலகம் எதை வட்டி என்று சொல்கிறதோ இதைத்தான் இஸ்லாமும் வட்டி என்று சொல்கிறதா.. அல்லது இஸ்லாம் வட்டி என்று சொல்வது இன்னும் அழுத்தம் வாய்ந்தவையா..?

இவற்றிற்கான பதிலை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

முதலில் குர் ஆன் வட்டி என்று எதை குறிப்பிடுகிறது என்பதை விளங்குவோம்.

வட்டியின் வகைகள்.

ஒரு முறை லாபம் கிடைக்கும் வகை.

வியாபாரம் வட்டியைப் போன்றதே... என்ற வாதத்தை முன் வைத்து அன்றைக்கு பலர் தங்கள் பொருளாதாரத்தை பெருக்கிக் கொண்டிருந்தார்கள். இறைவன் இதை மறுத்து 'அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடை செய்துவிட்டான்' என்கிறான். 2:275

வட்டியும் வியாபாரமும் ஒன்று என்று கூறியவர்கள் 'இரண்டிலிருந்தும் லாபம் கிடைப்பதயே கருத்தில் கொண்டிருந்தார்கள்' இறைவன் இதை மறுக்கிறான். என்னக் காரணம்? வியாபரம் என்பது பணம் பொருளாக மாறும் அடிப்படையையும் - இயல்பையும் கொண்டதாகும். வட்டி என்பது பணம் பணமாகவே மாறும் இயல்பைக் கொண்டதாகும்.

பணம் பொருளாக மாறும் போது அது உற்பத்தி பெருக்கத்தையும் தொழில் அபிவிருத்தியையும் ஏற்படுத்தும். மக்களின் வாழ்வாதார தேவைகள் பூர்த்தியாகும். பணம் பணமாக மாறும் போது இதில் எதுவுமே சாத்தியமில்லை என்பது மட்டுமல்லாமல் பணம் முடங்கி கிடக்கும் சூழ் நிலையையும் உருவாக்கி விடுகிறது.

பொதுவாக செல்வம் ஒரே இடத்தில் முடங்கி கிடப்பதையோ அது ஒரு குறிப்பிட்ட சாராரிடம் மட்டும் சுற்றிக் கொண்டிருப்பதையோ இஸ்லாம் விரும்பவில்லை.

உங்களில் செல்வந்தர்களிடையே மட்டும் செல்வம் சுற்றிக் கொண்டிருக்கக்கூடாது. (அல் குர் ஆன் 59:7)

பணம் பொருளாக மாறாமல் பணமாக மாறும்போது அவை பணம் படைத்தவர்களிடமே பதுங்கி கிடப்பதை இயல்பாக கொண்டுவிடும். பான்மல் வகைறாக்கள் இதற்கு உதாரணம்.

தொழில் அல்லது வியாபாரம் செய்வதற்கு ஓரளவாவது பணம் தேவைப்படும். வட்டிக்கு இந்த முதலீடுகள் தேவையில்லை. 100 ரூபாயை வைத்து வியாபாரம் செய்ய முடியாத ஒருவனால் 100 ரூபாயை வட்டிக்கு விட்டு 105 ரூபாய் சம்பாதித்துவிட முடியும். இந்த வகையில் சில்லரையாகவும் பெருமளவு பணம் முடக்கப்படுவதால் பண வீக்கம் அதிகமாகி எத்துனையோ கெடுதிகள் முளைத்து நிற்கின்றன.

பணம் கொடுத்து கூடுதல் பணம் பெருவதே இங்கு வட்டியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை விளங்கலாம்.

வியாபாரத்தில் ஒரு பொருளுக்கு ஒரு முறை லாபம் ஈட்டுவது போன்று ஒரு தொகையை கொடுத்து விட்டு அதை திரும்ப பெறும்போது கூடுதலாக ஒருமுறை வட்டிப் பெறும் முறை 'வட்டி முறைகளில்' ஒன்றாக இருந்தது. அது இந்த வசனத்தின் வழியாக இறைவன் தடுத்துவிட்டான்.

தொடர் வட்டி.

இறை நம்பிக்கையாளர்களே..! பல மடங்காக பெருகும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். வெற்றிப் பெறுங்கள். (அல் குர் ஆன் 3:130)

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்ல. (அல் குர்ஆன் 30:39).

இவை் 'தொடர் வட்டி'க்கு எதிராக இறங்கியதாகும்.

'பல மடங்காக பெருகும் நிலையில்' என்பது. சேமிப்பு - முதலீட்டின் மீதான தொடர் லாபத்தை குறிப்பதாகும். தொடர் லாபம் என்பது வட்டிக்கு மட்டுமே உரிய வஞ்சனைத்தன்மையாகும்.

ஒரு பொருளுக்கு விற்பனையின் போது ஒரு முறை லாபம் ஈட்டுவது போன்றத் தன்மை கொடும் வட்டியான தொடர் வட்டிக்கு இல்லை.

தொடர் வட்டியின் மூலதனம் ஒரு நாடு அல்லது அந்த நாட்டு மக்களின் இயலாமையும் பலவீனமுமே காரணமாக அமைந்து விடுகின்றன.

நான் உனக்கு ரூ1000 கொடுப்பேன் அதை திருப்பி அடைக்கும் வரை மாதாமாதம் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது ஒரு குறிப்பிட்ட முதலீட்டின் மீதான தொடர் லாபத்தை ஈட்டித்தரும் வட்டியாகும். இந்த வட்டி முறை உலகலாவிய வலையைப் பின்னி பல நாடுகளை செல்லாக் காசாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த வட்டி முறை மிகப்பெரும் பொருளாதார அழிவை ஏற்படுத்த வல்லது என்பதால் இஸ்லாம் இதற்கு எதிராக முன்னணியில் நின்று போர் பிரகடனம் செய்கிறது. இத்தகைய வட்டி முறைகளை எந்த சமாதான வார்த்தைகளாலும் நியாயப் படுத்தவே முடியாது என்பதுதான் நமது நிலைப்பாடு.

அடுத்து,

வங்கி - வங்கியில் செய்யும் முதலீடு அல்லது சேமிப்பு- அவற்றிலிருந்து கிடைக்கும் (வருமானம்) வட்டி இவற்றை மேற்குறிப்பிட்டுள்ள வட்டி முறையோடு ஒப்பிடுவதும் - ஒதுக்கித்தள்ள வேண்டும் என்று சொல்லுவதும் எந்த அளவிற்கு நியாயமானது என்பதை பார்ப்போம்.

வங்கியும் - வட்டியும்.

வங்கி என்பது சிறு தொகை முதல் பெரும் தொகை வரை மக்கள் முதலீடு செய்யும் ஒரு நிருவனமாகும். இந்த நிருவனம் தேசிய அளவில் ஒரு வலையைப் பிண்ணிக் கொண்டு தன்னுடைய பணியை துவங்குகிறது. இதன் பணி முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்று மேட்டுக் குடி நடுத்தர வர்கம் வறுமைக்கோடு என்று வாழும் அனைத்து தரப்பு மக்களிடமும் அவர்களின் தேவைக்கு பணம் கொடுத்து மேலதிகமாக பணம் பெற்று முதலீட்டாளர்களையும் தன்னையும் வளப்படுத்திக் கொள்கிறது.

பணம் கொடுத்து கூடுதலாக பணம் பெறுவது வட்டிதான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனல் வங்கிகள் இந்த வேலையை மட்டும் தான் செய்கின்றனவா... என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விவசாயம் - தொழில் - வீட்டுவசதி போன்றத் தேவைகளுக்காக மட்டும் ஒரு வங்கி இயங்கினால் அந்த வங்கியில் கையிருப்பு என்பது மிக குறைந்த அளவைப் பெற்றுவிடும் வாய்ப்புள்ளது.

உதாரணமாக,
அன்னிய செலவாணி அறவே இல்லாத - உள் நாட்டு அளவில் மட்டுமே இயங்கும் ஒரு வங்கியை எடுத்துக் கொல்வோம். இதில் அன்னிய செலவாணி இல்லாததால் வட்டி சதவிகிதம் குறையும் என்பதால் முதலீட்டாளர்கள் குறைவாகவே இருப்பார்கள். இந்த வங்கி முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டையும் கடனாக கொடுக்கும் பட்சத்தில் வரும் வட்டி மட்டுமே கையிருப்பாக வைக்கும் சூழல் அந்த வங்கிக்கு உருவாகி வங்கி பெரும் பிண்ணடைவை அடைந்துவிடும். அதனால் கடனுதவி என்பதோடு மட்டும் நின்று விடாமல் நல்ல லாபம் ஈட்டும் நிலையில் உள்ள தொழில் மற்றும் வியாபாரத்திலும் வங்கிகள் முதலீடு செய்து வருவாயை பெருக்கிக் கொள்ளவே செய்யும்.

அன்னிய செலவானியைப் பெற்றிருக்கும் வங்கிகளும் தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரும் தொகையை முடக்கி லாபம் பெறவே செய்யும்.
வெறும் கடனுக்கு வட்டி என்ற நிலை மட்டும் வங்கிகளில் இருந்தால் அதன் கையிருப்பு குறையும் என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்

ஒரு வங்கி விவசாயம் - தொழில் - வீட்டு வசதி போன்றவற்றிற்கு மட்டும் கடன் கொடுத்து வட்டி வசூலிக்கிறது என்று வைத்துக் கொள்வோம் இப்போது கடனுக்காக அது ஒதுக்கும் தொகையின் அளவு என்ன..?

விவசாயத்திற்கென்று விவசாயிகள் அய்ம்பது லட்சம் பேர் (இவை மிக குறைந்த அளவே) வங்கியிலிருந்து நபர் ஒருவர் தலா ஒரு லட்சம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது வங்கி அதற்காக ஒதுக்க வேண்டிய தொகை மொத்தம் அய்னூரு ஆயிரம் கோடிகளாகும்.

தொழில் - வீட்டு வசதிக் கடன் ஆகியவற்றை கணக்கிடும் போது இவை இன்னும் பல மடங்காக உயரும். கடனுக்கு உத்திரவாதமாக வங்கி எல்லா ஏற்பாடுகளையும் செய்தாலும் ஒழுங்காக வட்டிக் கட்டப்படாமல் - திருப்பி அடைக்க வழியில்லாமல் போய் தள்ளுபடி செய்ய வேண்டிய கடன் பல ஆயிரம் கோடிகளை தொடும். (தேவைப்பட்டால் இதுபற்றி மேலும் விளக்கலாம்)

இந் நிலையில் பணம் கொடுத்து பணம் பெருவது என்ற அந்த ஒன்றை மட்டுமே வங்கி மூல்தனமாகக் கொண்டிருந்தால் அதன் கையிருப்பு மற்றும் வருவாயில் தடுமாற்றம் ஏற்படவே செய்யும். இதை சரிகட்டுவதற்காக வங்கிகள் பெரும் - பெரும் தொழில் நிருவனங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுகின்றன. பங்க சந்தை, பத்திரங்கள், உட்பட பணம் பண்ணும் வழிகளை வங்கிகள் தெளிவாகவே கண்டு வைத்துள்ளன. வாடிக்கையாளர்களின் பணம் பல நிலைகளில் முதலீடு செய்யப்படுகின்றன. அவற்றிலிருந்து வரும் லாபங்கள் கடனுக்கான வட்டியுடன் கலந்தே வாடிக்கையாளர்களை அடைகின்றன.

லாபமும் வட்டியும் கலந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை பேணுதல் அடிப்படையில் தவிர்த்துக் கொள்ளலாம் என்று கூறலாமே தவிர அவற்றை 'ஹராம்' என்று கூறுவது முறையல்ல என்றே கருதுகிறாம்..

'தவிர்த்துக் கொள்ளுதல்' என்பதின் பொருள் என்னவென்பதை இப்போது பார்ப்போம்.

இஸ்லாம் 'தவிர்த்துக் கொள்ளுதல்' என்பதை இரண்டு அர்த்தங்களில் முன்வைக்கிறது.
1) விலக்கப்பட்டவை என்று தெரிந்து அதை தவிர்த்துக் கொள்ளுவது.
2) ஒன்றின் மீது சந்தேகம் வரும் போது அதை தவிர்த்து விடுவது.

நம் தேவைக்காக வங்கியில் சேமிக்கப்படும் பணத்திற்கு மேலதிகமாக கிடைக்கும் தொகை 'வட்டியோ...' என்று சந்தேகம் வரும் போது அத்தகைய பணத்தை தன் சொந்த தேவைக்கு பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே 'தவிர்த்துக் கொள்ளுதல்' என்ற அர்த்தத்தில் இங்கு குறிப்பிடுகின்றோம்.

வங்கிகள் எத்தகைய தொழிலிலும் பணத்தை முடக்காமல் கடன் மட்டுமே கொடுத்து வட்டிப் பெறுகிறது என்று தெளிவாக நிருபிக்கப் படாதவரை அது மேலதிகமாக கொடுக்கும் தொகையின் மீது 'சந்தேகம்'மட்டுமே நிலைத்திருக்கும்.

'ஹலாலும் தெளிவானது - ஹராமும் தெளிவானது இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு. மனிதர்களில் அனேகமானோர் அதை அறியமாட்டார்கள். எவர் சந்தேகமானதிலிருந்து விலகிக் கொள்கிறாரோ அவர் தன்னையும் தன் மார்க்கத்தையும் பாதுகாதுக் கொண்டவராவார்' என்பது நபி மொழி. (புகாரி)

இந்த நபிமொழி முன் வைக்கும் கருத்து என்ன என்பதை நாம் ஆழமாக சிந்தித்து விளங்க வேண்டும்.

இஸ்லாத்தில் ஹராம், ஹலால் என்ற இரு நிலைகள் மட்டுமே உள்ளன அதை கடந்து எதுவுமில்லை என்று யாராவது புரிந்துக் கொண்டால் அவர்களுக்கு மறுப்பு இந்த செய்தியில் உள்ளது.

நபி(ஸல்) தூத்துவ பணியை செய்துக் கொண்டிருந்த காலத்தில் அன்றைய காலத்திற்குத் தேவையான அனைத்து சட்டங்களும் 'தெளிவாக' அறிவிக்கப்பட்டன. ஹராமோ - ஹலாலோ இரண்டையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அன்றைய மக்கள் விளங்கினார்கள். எது ஒன்றையும் சந்தேகம் கொள்ளும் நிலையில் அந்த மக்கள் இல்லை என்றால் 'இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு' என்று நபி(ஸல்) எதைக் குறிப்பிட்டார்கள்? அன்றைக்கு அந்த நிலை இல்லை என்றாலும் பிந்னையக் காலத்தில் இத்தகைய நிலைகள் உருவாகலாம் என்பதையே நபி(ஸல்) முன் குறிப்பாக்கியுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.

அன்றைக்கு அந்த மக்களிடம் இருந்த பொருளாதார திட்டம், வழக்கம், பொருள்மாற்று வழிமுறைகள் போன்ற அனைத்தும் அடுத்து வந்த சில நூறு ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை கண்டு விட்டது. இருபதாம் நூற்றாண்டில் அதற்கு முந்தைய நூற்றாண்டுகளிலிருந்த பொருளாதார பார்வை, மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் தலைகீழ் மாற்றமாகி போயின. ஊர் சந்தை வியாபாரம் என்ற நிலை உலக சந்தையானது. பொருளாதாரம் அகலமாக கண்களை விரித்து முழு உலகையும் பார்த்தது. விளைவு வங்கி உட்பட அனேக பொருளாதார நிருவனங்கள் உலகில் முளைத்து தன் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு வாழ்பவர்கள் புதிய பொருளாதார சிக்கல்களை சந்திக்கின்றார்கள். வைப்பதிலும், பெருவதிலும், கொடுப்பதிலும் புதிய பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். தான் ஒரு முஸ்லிமாக இருப்பதால் இந்த பொருளாதார வழிகளை எப்படி கையாள்வது என்பதில் அவர்களுக்கு சந்தேகம் வருகின்றது.

ஹலாலென்றோ ஹராமென்றோ தீர்மானித்து விட முடியாத இக்கட்டான நிலைகளில் கிடந்து மனம் தடுமாறுகின்றது. இத்தகையவர்களுக்கு ஆருதலளித்து வழிகாட்டுகிறது இந்த நபிமொழி. குறிப்பாக வங்கியில் நாம் சேமிக்கும் பணத்திற்கு மேலதிகமாக கொடுக்கப்படும் பணம் பற்றிய சந்கேத்திற்கு வழி காட்டுகிறது.

வங்கி கணக்கு நிர்பந்தமா..? என்று அடுத்துப் பார்ப்போம்

வங்கியின் வட்டியைப் (வட்டி என்று பேங்க் குறிப்பிடுவதால் நாமும் புரிவதற்காக அவ்வாறே குறிப்பிடுவோம்) பெறலாமா - கூடாதா என்பது வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளலாமா... என்பதிலிருந்து துவங்கும் பிரச்சனையாகும். எனவே வங்கி கணக்கு நிர்ப்பந்தமா... என்பது நாம் முதலில் அலச வேண்டும்.

வங்கியில் ' நிர்பந்தத்திற்காகவே' கணக்கு வைத்துள்ளோம் என்று பரவலாக முஸ்லிம் சகோதரர்கள் (அடிப்படையை உணர்ந்தவர்களும்) சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். உண்மையில் அதில் நிர்பந்தம் உள்ளதா என்பதை நாம் நிதானத்தோடும் - தூர நோக்கோடும் - ஆதார அடிப்படையிலும் அலசிப் பார்க்க வேண்டும்.

நிர்பந்தம் என்றால் என்ன..?
பொதுவாக நிர்பந்தம் என்பது மனிதர்களுக்கு மனிதர் மாறுப்படவே செய்யும். சிலர் கடினமான சூழ் நிலையைக் கூட இலேசாக எடுத்துக் கொண்டு சமாளித்து விடுவார்கள். இன்னும் சிலர் சிறிய அளவிலான பிரச்சனைகளையும் நிர்பந்தம் என்று கூறி தன்னை சமாதானப் படுத்திக் கொள்வார்கள். இது மனிதர்களின் மன உறுதியைப் பொறுத்து மாறுபடும்.

ஆனால் ஒரு முஸ்லிம் ' நிர்பந்தத்திற்குரிய அளவை' அவனாகவே தீர்மானித்துக் கொள்ள முடியாது. நிர்பந்தம் என்றால் என்ன என்பதற்கு இஸ்லாம் வழிகாட்ட வேண்டும்.

இஸ்லாம் எதை நிர்பந்தம் என்கிறது?

1) வலிய செல்லாமலும் - வரம்பு மீறாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எவ்வித குற்றமும் இல்லை. (அல் - குர் ஆன் 2:173 - 6:145 - 16:115)

2) பாவம் செய்யும் எண்ணமில்லாமல் பசியின் காரணமாக நிர்ப்பந்தத்திற்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பான் (அல் - குர் ஆன் 5:3)
நிர்ப்பந்தம் என்ன என்பதை விளக்கும் வசனங்கள் இவை.

வரம்பு மீறக்கூடாது - வலிய செல்லக்கூடாது என்று இரண்டு கடின நிபந்தனைகளை இஸ்லாம் நிர்ப்பந்தத்திற்கு அளவுகோலாக்கியுள்ளது.
வங்கி கணக்கு நிர்பந்தம் என்று கூறுவோர் இந்த நிபந்தனைகளுக்கு ஆட்பட்டவர்கள் தான் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் விளக்க முடியுமா..?

எந்த வங்கியும் 'எங்களிடம் கணக்கு வைத்துதான் ஆக வேண்டும்' என்று கட்டாயப் படுத்தாத போதும் 'வசதியான வங்கிக்கு வலிய சென்று கணக்கு வைத்துக் கொள்வதும் - வங்கி என்பது மிகப்பெரிய வட்டிக் கடை என்று மிகத் தெளிவாக தெரிந்த நிலையில் வரம்பு மீறி கணக்கு வைத்துக் கொள்வதும் நிர்பந்தம் தானா...

வலிய செல்லக் கூடாது - வலிய செல்லப் படுகிறது.
வரம்பு மீறக் கூடாது - வரம்பு மீறப் படுகிறது. 'எதை நிர்பந்தம் என்கிறீர்கள்..?'
வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை என்றால் வாழவே முடியாது என்ற இக்கட்டான சூழ் நிலை உருவாகி விட்டதா..?

வலிய செல்லுதல் - வரம்பு மீறுதல் விளக்கம் என்ன?

வலிய செல்லாமலும் - வரம்பு மீறாமலும் என்பது உணவு வசனங்களில் வந்தாலும் 'அந்த நிபந்தனை'ப் பொதுவானதாகும். விலக்கப்பட்ட எது ஒன்றை நோக்கியும் வலிய செல்லவும் கூடாது - வரம்பு மீறவும் கூடாது. அன்றைக்கு விவசாய - உணவுத் தட்டுப்பாடு அதிகம் இருந்ததால் அது குறித்து பேசும் வசனங்களில் அந்த நிபந்தனைகள் முன்வைக்கப் பட்டதே தவிர உணவுக்காக மட்டும் அவை முன் வைக்கப்படவில்லை.

இந்த நிபந்தனைப் பொதுவானதுதான் என்பதைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ள இன்னுமொரு வசனத்தைப் பார்ப்போம்.

'இறைவன் எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்தியைத் தாண்டி நிர்பந்திக்க மாட்டான்.' (அல் குர் ஆன் 2:286)

இங்கு குறிப்பிடப் படும் நிர்பந்தம் என்பது 'உணவுக்குரியது மட்டும் தானா.. அல்லது பொதுவானதா..' நிச்சயம் பொதுவானதுதான். இந்த பொதுவானதற்குரிய நிபந்தனைத்தான் - வலிய செல்லக் கூடாது - வரம்பு மீறக் கூடாது என்பதாகும்.

ஒருப் பெண் வலிய சென்று விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கும் - பிறரால் கட்டாயப் படுத்தப் பட்டு கற்பிழப்பதற்கும் வித்தியாசம் உண்டு. முன்னது வலிய செல்வது, பிந்தயது வலிய செல்லாமல் நிர்பந்திக்கப் படுவது. முந்தயதை செய்தால் குற்றம். பிந்தயதற்கு உட்படுத்தப் பட்டால் (2:173 - 6:145 - 2:285) ஆகிய வசனங்கள் அடிப்படையில் அவள் குற்றவாளியல்ல.

எனவே வலிய செல்லாமலும் - வரம்பு மீறாமலும் என்பது பொது நிபந்தனைத்தானே தவிர உணவு நிபந்தனை மட்டுமல்ல என்பது இப்போது விளங்கலாம்.

வங்கி கணக்கு எங்கள் வசதிக்காகத்தான் அந்த தேவையை தவிர்த்துவிட்டுக் கஷ்டப்பட முடியாது என்று சொன்னால் அந்த பிரச்சனையும் - விவாதமும் வேறாகும்.

தேவைக்காக வங்கியைப் பயன்படுத்திக் கொள்வதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அந்த பயன்பாடு வங்கி சார்ந்த பாவ புண்ணியங்களில் பங்கெடுத்துக் கொள்வோம் என்ற துணிச்சலுடன் வெளிப்பட வேண்டுமே தவிர 'இது நிர்பந்தமான நிலை' என்று பாசாங்கு பேசிக்கொண்டிருக்கத் தேவையில்லை.

வங்கி என்பது உலக முஸ்லிம் அறிஞர்களுக்கு மத்தியில் பெருத்த சர்ச்சையை கிளப்பியுள்ள சட்டப் பிரச்சனையாகும். அதை நாம் காலம் கடந்து நம் மொழியில் மிக - மிக - மிக குறுகிய அளவில் இப்போதுதான் பேசத்துவங்கியுள்ளோம். அதிலும் ஒரு சிலரே!

எந்த பிரச்சனை (வங்கி கணக்கு) வட்டிக்கு அடித்தளமாக இருக்கிறதோ அங்கிருந்து துவங்குவதுதான் அறிவுடமை என்பதால் நான் அங்கிருந்து துவங்கியுள்ளோம்.

வலிய செல்லுதலும் - வரம்பு மீறுதலும் இங்கு நடக்கத்தான் செய்கின்றன. எனவே இஸ்லாம் எதை நிர்பந்தம் என்கிறதோ அந்த நிர்பந்த நிலையை வங்கி கணக்கு பெறவே பெறாது.

அல்லாஹ்வின் வசனங்களை விளங்கும் விஷயத்தில் அச்சம்மும், பேணுதலும், ஆழ்ந்த சிந்தனையும் இருக்க வேண்டும். 'ஒரு கருத்தை நேரடியாக ஒரு வசனம் சொல்லும் போது அதை நாம் நேரடியாகதான் விளங்க வேண்டும். 'வலிய செல்லாமலும் - வரம்பு மீறாமலும்' என்பது மாற்றுக் கருத்துக் கொள்ள வழியில்லாமல் இரண்டு தனித்தனி நிபந்தனைகளை முன் வைக்கும் வசனமாகும். இதற்கு எதிர் மறையான பொருளோ - குத்துமதிப்பான பொருளோ கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. அந்த வசனமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

வங்கி என்பது கஷ்டமில்லாத ஒரு வாழ்வியல் தேவைக்கு வழிகாட்டியாக இருக்கிறது அதை தவிர்த்து விட்டு கஷ்டப்பட முடியாது என்று சொல்வதற்கு மனம் கூசுவதால் தான் இஸ்லாம் சொல்லாத ஒரு நிர்பந்தத்தை நாமாக நிர்பந்தமாக்கிக் கொண்டு சமாளிக்கிறோம்.

வங்கியும் - வங்கியின் வட்டியும் 'என்ன செய்யலாம்?'

பொருமை இழந்து போய் அவசரமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் அதோடு சேர்ந்து படு வேகமாக இயங்க மனிதன் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டதால் நேற்றைய - அதற்கு முந்திய நாள் வாழ்க்கையெல்லாம் இவனுக்கு மறந்து போய் நாளைய - அதற்கு அடுத்த நாட்களுடைய வாழ்க்கையே மனதில் பூதாகரமாக விரிந்து இவனை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இதன் விளைவுதான் 'அவசர உலகம் எதிலெல்லாம் இவனை பிணைத்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அதிலெல்லாம் இவன் தன்னைப் பிணைத்துக் கொண்டு அதிலிருந்து விடுபட முடியாமல் அதுதான் வாழ்க்கை என்று தீர்மானிக்கவும் பிறரிடம் நியாயம் கற்பிக்கவும் தலைப்பட்டு விடுகிறான். இவண் தன்னைப் பிணைத்துக் கொண்ட மோசமான வாழ்க்கை முறைகளில் ஒன்றுதான் 'வங்கி'

சிந்தனைக்கு எட்டிய தூரம் வரை மாற்று வழி கிடைக்கவில்லை. வேறு வழியும் இல்லை என்ற வாதமே பெருவாரியான முஸ்லிம் செல்வந்தர்களை வட்டி தன்னுள் கதகதப்பாக அணைத்துக் கொள்வதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

வங்கியின் தேவை பலக் கோணங்களில் நியாயப் படுத்தப் பட்டாலும் அவற்றில் முக்கியமானது 'பணத்திற்கு பாதுகாப்பு'

பணத்திற்கான பாதுகாப்பு என்பது பணம் வைத்துள்ள செல்வந்தர் அவர் குடும்பம் ஆகியவற்றின் மானம் - மரியாதை - வாழ்வியல் தேவை ஆகியவற்றின் உள்ளடக்கமாகும். தன் செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றால் அது தன்னையும் தன் குடும்பத்தையும் பல வழிகளில் பாதிக்கும் என்ற எச்சரிக்கை உணர்வே 'வட்டிக் கடையாக இருந்தாலும் பரவாயில்லை அதன் உதவியை நாடிவிடுவோம்' என்று வங்கியை நோக்கி அவரை தள்ளி விடுகிறது. வங்கி கணக்கு திறந்தவுடன் அது கொடுக்கும் வட்டி விஷயத்தில் தடுமாறுகிறார்.

இஸ்லாம் வட்டி வாங்கக் கூடாது என்று சொல்லுவதால் 'வங்கி வட்டியை வேண்டாம் என்று சொல்லி விடலாம்' என்பது சிலரின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு எந்த விதத்திலும் நியாயமானதாகத் தெரியவில்லை.

இஸ்லாம் வட்டி வாங்க வேண்டாம் என்று மட்டும் சொல்லவில்லை மாறாக வட்டியோடு உள்ள அனைத்துத் தொடர்புகளையும் அறுத்துக் கொள்ளச் சொல்கிறது. அப்படி இருந்தும் 'தனி மனித பாதுகாப்பு' கருதி வட்டியோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்பவர்கள் 'சமூக பாதுகாப்பை' கண்டுக் கொள்ளாமல் தன்னை 'தக்வாதாரியாக'க் காட்டிக் கொள்வது பொருத்தமானது தானா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

'தன் சொத்து - செல்வம் பிறரால் அழிக்கப் பட்டு தன்னை நிற்கதியாக ஆக்கிவிடக் கூடாது' என்பதில் ஒரு முஸ்லிம் எவ்வளவு எச்சரிகையாக இருக்க வேண்டுமோ அதே போன்று பிறரை அழிக்க தனது செல்வமோ - செயலோ எந்த வகையிலும் துணைப் போகக் கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முஸ்லிம்களை கருவறுப்பதற்கும் - முஸ்லிம் பெண்களை எழுத கூசும் விதத்தில் படு கேவலமாக மானப்பங்கப்படுத்தி கொலை செய்வதற்கும் - வழிபாட்டுத்தலங்களையும் வாழ்வுரிமையையும் இல்லாமலாக்குவதற்கும் பன்னெடுங்காலமாக பன்முக திட்டம் தீட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கும் தீய சக்திகளுக்கு ஊக்கமளிப்பதற்கும் - பாதுகாப்பு அளிப்பதற்கும் அள்ளிக் கொட்டப்படும் மில்லியன் கணக்கான பணத்தில் 'வங்கியின் வட்டிப் பணம்' அளப்பறிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் விளங்கிதான் வைத்துள்ளோம்.

வங்கியை அணுகி பாதுகாப்பிற்காக பணத்தைப் போடும் முஸ்லிம்களின் பணம் ஹராமான வழியில் பயன்படுத்தப் படுவதோடு மட்டுமல்லாமல் வட்டி வேண்டாம் என்று சொல்வதன் மூலம் அவர்களிம் பணத்தின் மீது வந்து விழும் வட்டி பல வழிகளில் பகிர்ந்தளிக்கப்பட்டு அதில் ஒரு பகுதி அவர்களின் சமூகத்தை அழிப்பதற்கே செலவிடப்படுகிறது. தன் செல்வத்தின் மீது அக்கறை செலுத்தும் முஸ்லிகள் தன் சமூகத்தின் மீது அக்கறை செலுத்தாமல் பின் வாங்குவது இஸ்லாமிய வாழ்க்கை முறையா..?

'இந்த மாதமும் - இடமும் எவ்வளவு புனிதமானதோ அதே போன்று ஒவ்வொரு முஸ்லிமின் பொருளும், மானமும், இரத்தமும் புனிதமானதாகும் என்று நபி(ஸல்) கடைசி ஹஜ்ஜின் போது எச்சரித்து சென்ற வார்த்தைகளை நாம் எப்பொழுதும் நினைவில் வைக்க வேண்டும்.

தனி மனித சொத்தை ஹராமான வழியில் பாதுகாப்பது நிர்பந்தம் என்றால் சமூகத்தின் மானத்தையும் சொத்தையும் பாதுகாப்பது அதைவிட நிர்பந்தம் இல்லையா..? இதற்கு பதில் என்ன?

நம் பணத்திற்கு வரும் வட்டியை வங்கியோடு விட்டு விடுவது பற்பல கெடுதிகளுக்கு வழி வகுக்கும் என்பதால் அதை வங்கியோடு விட்டு விடுவது நியாயமில்லை.

தனது சுய நிர்பந்தத்தை காரணம் காட்டி வங்கியில் கணக்கைத் துவங்குவோர் சமூகத்தின் மீது நிலவிக் கொண்டிருக்கும் நிர்பந்தத்தையும் - பதிப்பையும் கருத்தில் எடுக்க வேண்டும் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தோம். வட்டியோடு தொடர்ப்பு வைத்துக் கொண்டுள்ள நிலையில் வட்டி வேண்டாம் என்று பேசுவது சமுதாய அழிவிற்கு ஒரு வகையில் துணைப் போகும் என்பதையும் சுட்டிக் காட்டி இருந்தோம்.

வங்கியோடு வட்டியை விடக் கூடாது என்றால் நம்மீது வட்டி ஹராமான நிலையில் அதை என்ன செய்வது என்ற கேள்விக்கு இப்போது வருவோம்.

வட்டி குறித்து வரும் வசனங்களை சற்று ஆழமாக சிந்தித்தால் இதற்கு விடைக் கிடைத்து விடும்.
2:275 வது வசனத்தில் 'வட்டியை உண்பது' பற்றியும்,
3:130 வது வசனத்தில் ' பெருகும் வட்டியை உண்ணக் கூடாது' என்பது பற்றியும்,
30:39 வது வசனத்தில் 'செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக வட்டி வாங்கக் கூடாது' என்பது பற்றியும்,
2:278 வது வசனத்தில் ' எஞ்சியுள்ள வட்டியை வாங்கக் கூடாது' என்பது பற்றியும் இறைவன் சுட்டிக் காட்டியுள்ளான். வட்டியின் மூலம் (அதை வாங்குபவர்கள்) தன்னை வளப்படுத்திக் கொள்வதே இங்கு முழுமையாக தடைச் செய்யப் பட்டுள்ளது என்பதை அந்த வசனங்களின் பொருளை சிந்தித்தாலே விளங்கலாம்.

வங்கி கொடுக்கும் வட்டியை ஒருவன் தன் சொந்த தேவைக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக வாங்குகிறான் என்றால் அவன் இறைவனோடு போர் தொடுக்கும் அளவிற்கு பெரும் குற்றவாளியாகிவிடுவான். தன் தேவைக்காக இல்லாமல் பிற தேவைகளுக்கு இதைப் பயன்படுத்திக் கொள்ள இஸ்லாம் ஏதாவது வழிகளை காட்டியுள்ளதா.. என்று சட்டங்களை அலசும் போது 'ஒருவருக்கு ஹராமான பொருள் பிறருக்கு ஹலாலாகும் நிலை இருந்தால் அதைப் பெற்று அவருக்கு கொடுக்கலாம்' என்பதற்கு ஆதாரம் கிடைக்கின்றது.

ஆண்களுக்கு பட்டுத்துணியை ஹராம் என்று அறிவித்த நபி(ஸல்) அவர்கள் ஒரு பட்டுத்துணியை உமர் (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள். 'ஆண்களுக்கு பட்டு ஹராம் என்றீர்கள் இப்போது அதையே எனக்கு கொடுக்கிறீர்களே...' என்று உமர்(ரலி) கேட்க 'அது ஹலாலான பெண்கள் இருக்கிறார்களே அவர்களுக்குக் கொடுங்கள்' என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (புகாரி)

ஒருவருக்கு ஒரு பொருள் கிடைக்கிறது ஆனால் அது அவருக்கு ஹராமானப் பொருள் அதை அவர் பாழ்படுத்தி விடாமல் - வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளாமல் - அது பிறருக்குப் பயன்படுமா என்பதை கண்டறிந்து அவர்களுக்கு கொடுத்து விட வேண்டும் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும்.

வங்கியின் வட்டி (வட்டி என்றே வைத்துக் கொண்டாலும்) நமக்கு ஹராம் என்றாலும் 'இதுப் போன்றப் பணங்களில் எதுவும் ஹராமில்லை' என்ற நிலையில் வறுமைக் கோட்டிற்கு மிக மிகக் கீழ் நம்மைச் சுற்றி லட்சக்கணக்கான ஏழைகள் வழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பணத்தைக் கொடுக்கலாம். இதன் மூலம் அவர்களின் வயிற்றுப் பசியும் போக்கப்படும் - சதி திட்டங்களுக்கு இந்த பணம் போவதும் தடுக்கப்படும். வட்டி தின்ற குற்றத்திற்கும் நாம் ஆளாக மாட்டோம்.

நாம் வட்டி வேண்டாம் என்றாலும் வட்டி வரத்தான் செய்யும் என்பதை இனி பார்ப்போம்.

வட்டி கட்டாயமே..!

பணத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது இன்ன பிற தேவைகளுக்காகவோ வங்கியை நாடுபவர்கள் தங்களுக்கு வட்டி வேண்டாம் என்ற நிலையில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். வங்கியின் சட்ட விதியைப் பொருத்தே இதற்கு நாம் பதில் தேட வேண்டும்.

வங்கியில் கணக்கு வைப்பவர்கள் 'வட்டி வேண்டாம்' என்றால் இத்தகையோர் குறித்து வங்கியின் விதி என்ன கூறுகிறது என்பதை பார்க்கும் போது 'ஒன்றுமே கூறவில்லை' என்பதுதான் பதிலாகக் கிடைக்கும். அதாவது வங்கி சேமிப்பாளர்கள் விஷயத்தில் அவர்களின் பணத்திற்கு ஒதுக்கப்படும் வட்டி விகிதத்தில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாம். வட்டியே வேண்டாம் என்று சொல்லுபவர்களின் தொகைக்கு வட்டி ஒதுக்கப்படாது என்று வங்கி விதி ஏதாவது இருக்கிறதா..? என்றால் அப்படியெல்லாம் எந்த வங்கியிலும் சட்டம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் சட்ட திருத்தம் என்று ஒன்று வங்கி விதியில் வந்தாலும் அப்போதும் இந்த ஆலோசனை நிராகரிக்கப் பட்டுவிடும் ஏனெனில் 'வட்டி என்பதே வங்கியின் உயிர் மூச்சாகும்' என்பதால் அதற்கு எதிராக எந்த தத்துவத்தையும் அது ஏரிட்டுக் கூட பார்க்காது.

வங்கி சேமிப்பு மீது 'வட்டி கொடுக்கப் படாது' என்ற விதி விலக்கான சட்டம் எதுவும் இல்லை எனும் போது ஒரு முஸ்லிம் வட்டி வேண்டாம் என்கிறார் இப்போது என்ன நடக்கும்?

உதாரணமாக வைப்புத்தொகை 5 லட்சம் உள்ள ஒரு முஸ்லிம் தனக்கு வட்டி வேண்டாம் என்ற நிலையில் உள்ளார் என்று வைத்துக் கொள்வோம். இவர் வட்டி வேண்டாம் என்பதால் 'இவரது தொகை மீது வட்டி வந்து விழாமல் இருக்காது.' ஏனெனில் அப்படியெல்லாம் சட்டம் ஒன்றும் இல்லை. வட்டித் தொழிலில் முடக்கப் பட்ட இவரது 5 லட்சத்திற்கான வட்டித்தொகை அந்த பணத்திற்காக ஒதுக்கப்படவே செய்யும். அதாவது அவரது அசல் தொகையுடன் சேர்ந்து வட்டியும் அவரது பணமாகவே கருதப்படும். இன் நிலையில் 'எனக்கு வட்டி வேண்டாம் என்று அவர் அறிவித்தால் 'என் வட்டி பணத்தை என் விருப்பத்தோடு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்' என்ற கருத்தே அங்கு உருவாகும்.

பணத்தின் மீது வட்டி சேராமலிருந்தால் தான் வட்டி வேண்டாம் என்று சொல்வதின் அர்த்தம் சரியாக இருக்கும். வட்டி வந்து சேரும் நிலையில் எனக்கு வட்டி வேண்டாம் என்றால் 'என் வட்டியை நான் உனக்கு கொடுக்கிறேன் நீ எடுத்துக் கொள்' என்று வட்டி வாங்கி அதைதான் வங்கிக்கு கொடுக்கிறோம்.

வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளும் போது நம் பணத்திற்கான வட்டியை நாம் வாங்குகிறோம் என்பதில் மாற்றுக் கருத்துக் கொள்ள வழியில்லை ஏனெனில் நம் பணத்திற்கு வட்டி வந்து சேரத்தான் செய்கிறது. இப்போது அந்த வட்டியை நாம் யாருக்கு கொடுக்கிறோம்? என்பதில் தான் பிரச்சனை.

வங்கியோடு விடும்போது அது நம் சமூகத்திற்கு எதிராக பயன்படுவதோடு மட்டுமல்லாமல் வங்கி அதிகாரிகளும் ஊழியர்களும் கூட அதை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளும் வாய்ப்புக் கூட இருக்கலாம். அல்லது முறையாக வங்கி தணிக்கையாளர்கள் தணிக்கை செய்யும் போது மேலதிகமாக கிடைக்கும் இந்த வட்டித் தொகையை அரசு வங்கிகளாக இருந்தால் அரசு கருவூலங்களிலோ, தனியார் வங்கியாக இருந்தால் அவர்களின் லாபத்தொகையிலோ சேர்ப்பிக்கப்படும் நிலைத்தான் உருவாகும். நமக்காக நமது பணத்திற்கு ஒதுக்கப்படும் வட்டியை வங்கியிலிருந்து எடுத்தால், ஹராம் ஹலாலாகும் நிலையிலுள்ள ஏழை மக்கள் ஓரளவு பயன் பெறுவார்கள். அதனால் தான் வட்டியை கண்டு அஞ்சும் உள்ளங்கள் அதை தம் தேவைக்கு பயன்படுத்தாமல் அதன்பால் தேவையுள்ளவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறோம்.

வங்கி வட்டி வேண்டாம் அதை பிறருக்கும் கொடுக்கக் கூடாது என்று ஒரு குர்ஆன் வசனம் கருத்தை முன் வைப்பதாக சில சிந்தனையாளர்கள் விளங்குகிறார்கள். அந்த வாதம் நியாயமானதா.. பார்ப்போம்.

2:267வது வசனம். நம்பிக்கையாளர்களே! நீங்கள் சம்பாதித்தவைகளில் நல்லவற்றையும், நாம் உங்களுக்கு வெளிபடுத்திக் கொடுத்தவற்றில் நல்லவற்றையும் செலவு செய்யுங்கள். கெட்டவற்றைத் தேடி அதிலிருந்து செலவு செய்யாதீர்கள். அத்தகைய பொருள் உங்களுக்கு கிடைத்தால் (வெறுப்புடன்) கண்ணை மூடிக்கொண்டுதான் அதை வாங்குவீர்கள்.

இது மிக ஆழமான அறிவுரை என்பதால் இந்த வசனத்தைப் பார்க்கும் எவருக்கும் 'வங்கியின் வட்டியை' செலவிடக் கூடாது என்ற சிந்தனையே தோன்றும். ஏனெனில் 'கெட்டவற்றை செலவு செய்யாதீர்கள்' என்ற அறிவுரை இந்த வசனத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது.

வங்கியோடு தொடர்பு கொண்டுவிட்டால் வட்டி கட்டாயம் நம் முதலோடு வந்து சேரும் என்பதையும், அதை நாம் பெறாவிட்டால் நம் அனுமதியுடன் அது மோசமான காரியங்களுக்கு செலவிடப் படுகிறது என்பதையும் மிக அழுத்தமாக முன்னரே விளக்கியுள்ளோம்.

2:267வது வசனப்படி 'நல்லவற்றை செலவிட வேண்டும் என்றால் கட்டாயம் நாம் வங்கி கணக்கை தவிர்த்துத்தான் ஆக வேண்டும்' நாம் வங்கியில் தொடர்பு வைத்துக் கொள்வதால் நம் பொருளாதாரத்தில் ஒரு பகுதியில் தீயது வந்து கலக்கவே செய்கிறது. அதை நாம் வேண்டாம் என்றாலும் நம் அனுமதியுடன் பல தீயக் காரியங்களுக்கு அது செலவிடவே படுகிறது. அதாவது வங்கியில் கணக்கு வைப்பதின் வாயிலாக 2:267 வசனத்திற்கு மாற்றமாக தீயதை சம்பாதித்து தீயவற்றிற்கு செலவிடத்தான் செய்கிறோம்.

இப்படி நாம் கூறும் போது வங்கி கணக்கை நியாயப் படுத்துவோர் 'அது எங்களுக்கு நிர்பந்தம் ' என்ற வாதத்தையே முன் வைப்பார்கள். (வங்கி கணக்கில் எத்தகைய நிர்பங்தமும் இல்லை என்பது நமது நிலைப்பாடு என்றாலும்) உண்மையிலேயே அதை நிர்பந்தமாக வைத்துக் கொண்டாலும் தனி மனித நிர்பந்தத்தை விட சமூக நிர்பந்தம் இன்னும் ஆழமான பிரச்சனைகளைக் கொண்டதாகும் என்பதை சுட்டிக் காட்டி இருந்தோம்.

' நிர்பந்தம் என்ற நிலையில் நாம் இந்த பிரச்சனையை அணுகினால் 2:267 வது வசனத்தை இங்கு பொருத்திப் பார்க்க முடியாது ஏனெனில் ' நிர்பந்தம் வரும் போது ஹராமானவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு.

நிர்பந்தம் இல்லை என்றால் வங்கியிலிருந்து விடுபட்டு விட்டு இந்த வசனத்தை நடைமுறைப் படுத்த வேண்டும்.

இந்த வசனத்தை நாம் இன்னும் தெளிவாக புரிந்துக் கொள்வோம்.

நம்மை நம்முடைய நண்பர் விருந்துக்கு அழைத்து சென்று 'தண்ணீர் ஊற்றிய பழைய சோற்றை' நமக்கு கொடுத்தால் நாம் முகம் சுழிப்போம். ஆனால் நாமே சில நேரங்களில் பசியினால் பழையதை சாப்பிடும் நிலை ஏற்படும்.

'முகம் சுழித்தல் என்பதும் - கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்ளுதல் என்பதும்' நாம் நல்ல நிலையில் இருக்கும் போது நமக்கு வரும் கெட்டவற்றைக் குறிப்பதாகும்.

'நெருக்கடியில் இருக்கும் போது யாரும் தமக்கு வருவதை பரிசீலித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் - பரிசீலிக்கத் தேவையில்லை. 2:267 வது வசனத்தில் 'கண்ணை மூடிக் கொண்டேயல்லாமல்' என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து அது நல்ல நிலையை குறிக்கும் வசனம் என்பதை விளங்கலாம்.

'சோமாலியா உட்பட வறுமையில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் போரினால் சிதைக்கப் பட்ட பகுதிகள். உள் நாடுகளிலேயே வறுமையின் கோரப் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள் இவர்களில் எவரும் தமக்கு வருவதை கண்டு முகம் சுளிக்க மாட்டார்கள். நல்ல நிலையில் இருக்கும் நாம் 'சிலதைக் கண்டு' முகம் சுளிக்கலாம். அதை எல்லோருக்கும் பொருத்திக் காட்டக் கூடாது.

வங்கி வட்டியை வங்கிக்காரர்களிடம் கொடுப்பதா... வறுமையில் உழர்பவர்களிடம் கொடுப்பதா.... என்பதுதான் பிரச்சனை. அது நல்லதா.. கெட்டதா என்பதல்ல பிரச்சனை. கெட்டது என்று தெரிந்துதான் அதில் இணைகிறோம். கெட்டதை என்ன செய்யலாம் என்பது பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

எனவே நிர்பந்தம் என்றெண்ணி வங்கியில் கணக்கு வைப்பவர்கள் தமது வங்கி இருப்பில் வந்து சேரும் வட்டியை எடுத்து தமது சொந்தத் தேவைகளுக்கு பயன்படுத்தாமல் பசி பட்டினியில் உழன்றுக் கொண்டிருக்கும், ஒதுங்குவதற்கு ஒரு இடம் கூட இல்லாமல் ரோட்ரோடங்களில், நடைப்பாதைகளில் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கும் பார்ப்பதற்கே பரிதாபப்பிறவிகளாக வாழும் அந்த மனித சகோதர, சகோதரிகளுக்கு கொடுத்து விடலாம். இதனால் நமக்கு நன்மை கிடைக்காவிட்டாலும் கூட அந்த மக்களின் வாழ்க்கை சில நாட்கள் (தொகையை பொருத்து சில மாதங்கள், வருடங்கள்) சந்தோஷமாக கழியும். (இறைவன் மிக்க அறிந்தவன்)

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::