Friday, August 1, 2014

காஸா படுகொலைகளும்-அரபு நாடுகளும்...


இஸ்ரேலின் காஸா கொலைகளை அரபு நாடுகள் வாய் மூடி மெளனமாக வேடிக்கை பார்ப்பதேன்?
 
தங்களது, இனம், மொழி, மார்க்கத்தையே சார்ந்த பாலஸ்தீன மக்களை, அதிலும் குறிப்பாக சின்னஞ்சிறு சிறார்களை கொத்துக்கொத்தாக கொல்லப்படுவதை அரபு நாடுகள் சிறிதும் சஞ்சலமின்றி வேடிக்கைப்பார்த்துக்கொண்டு அசைவற்றிருப்பது உலகமக்களை வியப்பிலாழ்த்தியிருப்பது என்னவோ உண்மை.
ஆம்! அதுவும் தங்களது பரம எதிரி நாடான இஸ்ரேலாலேயே இந்த கொடூரம் நடைபெறுவதை அவைகள் கண்டும் காணாமல், குறைந்த பட்சம் நீலிக்கண்ணீர் கூட வடிக்காமல் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருந்தாலும் இதற்குப் பின்னால் ஒவ்வொரு அரபு நாட்டின் அப்பட்டமான சுயநலமே காரணம் என்பது பட்டவர்த்தனமான உண்மையாகத் தெரிகிறது.
இஸ்ரேலின் ''கொலைவெறி''யாட்டத்தை அரபு நாடுகள் சொல்லி வைத்தாற் போல அமைதியாக கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகின்றன. இன்னும் சொல்லப் போனால், ''கொலைவெறி''இஸ்ரேலுக்கு ஆதரவாக அவை ஓரணியில் நிற்கின்றன. காரணம் ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் எவ்வளவோ பரவாயில்லை என்று அரபு நாடுகள் நினைப்பதால்தான் இப்படி அமைதி காப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்படியாவது ஹமாஸை ''கொலைவெறி''இஸ்ரேல் அழித்தொழிக்கட்டும் என்று அரபு நாடுகள் நினைப்பதாகவும் கூறப்படுகிறது. நம்மால்தான் ஹமாஸை தட்டி வைக்க முடியாது. இஸ்ரேலாவது அதைச் செய்யட்டும் என்று அரபு நாடுகள் கருதுவதாகத் தெரிகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்தபோது அதற்கு அரபு நாடுகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் இம்முறை அப்படி எந்த எதிர்ப்பும் இல்லாமல் போனதால்தான் இஸ்ரேலின் ''கொலைவெறி'' மூர்க்கத்தனம் குதியாட்டம் போடுகிறது..
எகிப்துதான் இந்த இஸ்ரேல் ஆதரவு அரபு நாடுகளின் தலைவர் போல திகழ்கிறது. கடந்த ஆண்டு எகிப்தில் முபாரக்கின் ஆட்சியை கிளர்ச்சியாளர்கள் கவிழ்த்தனர். அவர்களுக்குத் துணையாக ராணுவமும் இருந்தது. இப்போது எகிப்து ராணுவத்தின் வசம்தான் உள்ளது. தற்போது எகிப்து தான் இஸ்ரேலுக்கு முழு ஆதரவாக இருந்து வருகிறது.
அதேபோல ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான் ஆகிய நாடுகளும் எகிப்துடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக மாறியுள்ளன. சவூதி அரேபியாவும் இந்தப் பட்டியலி்ல் இடம் பெற்றுள்ளது.
ஹமாஸ் தலையெடுத்து விட்டால், வலுவடைந்து விட்டால் தங்களது நாட்டையும் அது பாதிக்கலாம் என்ற அச்சத்தால்தான் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை இந்த அரபு நாடுகள் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வில்சன் மையத்தின் ஆய்வாளரும், முன்னாள் மத்திய கிழக்கு சமரசப் பேச்சுக் குழுவில் இடம் பெற்றவருமான ஆரோன் டேவிட் மில்லர் கூறுகையில், இது வரலாறு காணாத அமைதி. இப்படி ஒரு நிலையை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை இந்த நாடுகள் வேடிக்கை பார்க்க காரணம் உள்ளது. ஹமாஸ்தான் அவற்றின் முக்கிய பயம். அதுதான் இஸ்ரேலுக்கு ஆதரவாக இவர்கள் திரும்பக் காரணம்.
உண்மையில் எகிப்துதான் ஹமாஸுக்கு முக்கிய ஆதரவாளராக ஒரு காலத்தில் திகழ்ந்த நாடாகும். ஆனால் இந்த முறை இஸ்ரேலுக்கு சாதகமான முறையில் அது ஒரு போர் நிறுத்த உடன்பாட்டை அறிவித்தபோது ஹமாஸ் அதிர்ந்து போனது. அந்த திட்டத்தை அது உடனடியாக நிராகரித்தது. அந்தத் திட்டத்தில் இஸ்ரேலின் கோரிக்கைகள்தான் அதிக அளவில் இடம் பெற்றிருந்தன. ஹமாஸின் பரிந்துரை எதுவுமே இடம் பெறவில்லை.
18 மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் அரசியல் ஆய்வாளர்கள் ஒரு எச்சரிக்கையை வெளிப்படுத்தினர். அதாவது அரபு நாடுகளில் ஹமாஸ் அமைப்பு வலுவாகிக் கொண்டு அந்த நாடுகளின் மூலம், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளைத் திருப்ப முயற்சிக்கிறது என்பதுதான் அது. ஆனால் இந்த எச்சரிக்கையைக் கண்டு இஸ்ரேல் கூட அவ்வளவாகப் பயப்படவில்லை. மாறாக அரபு நாடுகள்தான் பயந்து போயின. காரணம், அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு எங்கே தங்களுக்கு எதிராக மக்கள் திரும்பி விடுவார்களோ என்ற அச்சம். எனவேதான் இந்த முறை இஸ்ரேலின் தாக்குதலை அவர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
இஸ்ரேலைக் கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் ஹமாஸ் வலுவடைந்து விட்டால் அது தங்களுக்குத்தான் பெரும் ஆபத்து. இஸ்ரேலை விட ஹமாஸ்தான் பெரும் மிரட்டல் என்றும் அரபு நாடுகள் கருதுகின்றனவாம்.
தற்போது காஸாவில் அப்பாவி மக்கள் பலியாகி வருவதற்கு ஹமாஸ்தான், அதன் பிடிவாதம்தான் முக்கியக் காரணம் என்று எகிப்து அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் இஸ்ரேலைக் குறை சொல்வதில்லை.
அதை விட மோசமாக எகிப்து நாடு தனது எல்லையை மூடி விட்டது. அங்கிருந்து பாலஸ்தீனத்திதற்குள் உணவு, மருந்து, குடிநீர் என எதையுமே அது அனுமதிக்கவில்லை. இதுவும் காஸா மக்களை அதிர வைத்துள்ளது. கிட்டத்தட்ட யாருமே இல்லாத அநாதைகளின் நிலையில் காஸா மக்கள் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர்.
யூதர்களை விட மோசமானவர்கள் எகிப்தியர்கள் - காஸா மக்கள்
இதுகுறித்து காஸாவைச் சேர்ந்த சல்ஹான் அல் ஹிரிஷ் கூறுகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதான்யஹுவை விட மோசமானவர் எகிப்து தலைவர் சிஸ்ஸி. யூதர்களை விட மிகக் கொடூரமானவர்கள் எகிப்தியர்கள். எங்களை அழிக்க அவர்கள் சதி செய்து விட்டனர் என்றார் கோபத்துடன்.
எகிப்துக்கு ஹமாஸ் பெரும் பிரச்சினை என்றால் ஐக்கிய அரபு எமிரேட்ஸும், சவூதி அரேபியாவும் வேறு கணக்கில் ஹமாஸை எதிர்க்கின்றன. அதாவது அவர்களின் பரம்பரை வைரியான ஈரான், ஹமாஸுக்கு பெருமளவில் பொருளுதவி, ஆயுத உதவியை அளித்த நாடாகும். எனவே ஈரான் கை ஓங்குவதைத் தடுக்க அவர்கள் ஹமாஸை எதிர்க்க முடிவெடுத்தன.
அரபு நாடுகளின் இந்த மாற்றம் காரணமாக சமரசம் பேச வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியே கூட குழம்பிப் போய் விட்டார். காரணம், ஹமாஸுடன் பேச யாருமே முன்வராத நிலை. இஸ்ரேலும் சொல் பேச்சைக் கேட்பதாக இல்லை. இதனால்தான் சமரசம் பேச வந்த கெர்ரி மீண்டும் அமெரிக்காவுக்கேத் திரும்பிப் போய் விட்டார்.
இப்படி ஹமாஸ், இஸ்ரேல், அரபு நாடுகளின் மோதலால், கடைசியில் அப்பாவி பாலஸ்தீன மக்கள்தான் செத்து விழுந்து கொண்டுள்ளனர். இந்த அவலம் நிற்கப் போவது எப்போதோ... தெரியவில்லை.
ஒருபுறம் பாலஸ்தீனம் அழிவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது... அழிவுகளுக்குப்பிறகு அவர்களுக்கு புணர்வாழ்வு அளிப்பதாக உதவி செய்வது என்பன போன்ற முனாஃபிக் தனம் இன்றைய அரபு நாட்டு அரசுகளுக்கு ராஜதந்திரம்போல் தோன்றலாம். ஆனால் அனைத்து அதிகாரத்திற்கும், ஆட்சிக்கும் அதிபதியான அல்லாஹ்வை இவர்கள் ஒருபோதும் ஏமாற்றவே முடியாது. கேள்விகணக்கு கேட்கப்படும் அந்த மறுமை நாளில் இவர்களின் கதி என்னவாகும் என்பதை அவர்கள் சிந்திப்பது நல்லது.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::