Tuesday, January 17, 2012

போதை-பாதை மாறும் மாணவர்கள்!

“மது, ஹெராயின், கஞ்சா போன்றவை தான் போதை தரும்’ என கருதினால், நீங்கள் விவரம் தெரியாதவர்கள் என்று அர்த்தம்.
பள்ளி மாணவர்களிடம் கேளுங்கள், “பெட்ரோல், பஞ்சர் ஒட்டும் பேஸ்ட், இங்க்கை அழிக்கும் ஒயிட்னர்’ என, எந்தெந்த பொருட்களில் போதை இருக்கிறது என, “கிறக்கத்துடன்’ கூறுவர்.
மதுரை ஒத்தக்கடையில், அரசுப் பள்ளி 10ம் வகுப்பு மாணவர் ஒருவர், “கிறங்கி’ விழுந்தார். பல் உடைந்தும், முகத்தில் காயம் ஏற்பட்டும், தற்போது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவரது இந்நிலைக்கு காரணம், “ஒயிட்னர்!’.
பெட்ரோல் விற்கிற விலையில், அதை வாங்கி, “மோப்பம்’ பிடித்து, போதை ஏற்ற முடியாது என்பதால், இவரை போன்ற சில மாணவர்களுக்கு, மலிவான விலையில் கிடைக்கும், “ஒயிட்னர்’ போதையை தருகிறது.
பள்ளி இடைவேளையின்போது, வெளியே வந்து, மூக்கால் ஒரு இழுப்பு இழுத்துக் கொண்டு, பள்ளி முடியும் வரை, போதையுடன் இருக்கின்றனர். ஆசிரியர்கள் கண்டித்தும், மாணவர்கள் திருந்தவில்லை. போலீஸ் மிரட்டியும் பயப்படவில்லை. பெற்றோரும் கண்டிப்பதாக இல்லை.
இதுகுறித்து, அப்பகுதி எவர்சில்வர் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் வீரர்அலி கூறுகையில், “”பலமுறை மாணவர்களை கண்டித்து விட்டோம். திருந்துவதாக இல்லை. இவர்கள் மீது, பள்ளி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திருந்துவர்.
மாணவர்களுக்கு படிப்பை மட்டும் கற்றுத் தராமல், போதையால் ஏற்படும் விபரீதங்களையும், ஆசிரியர்கள் பாடம் எடுத்தால், மாணவர்கள் இதிலிருந்து விடுபட வாய்ப்புண்டு” என்றார்.
இந்த போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மூளை நரம்பியல் டாக்டர்கள் கூறுகையில், “”இதே போல் நகப் பூச்சு, பெயின்ட் போன்றவற்றை நுகர்ந்தும், போதை ஏற்றுகின்றனர். காரணம், அதில் உள்ள காரீயம். இது அதிகரிக்கும்போது, நரம்பு செல்களை பாதிக்கிறது.
தொடர்ந்து உடம்பில் இருந்தால்,  மூளை,  தண்டுவடமும்,  மனநலமும் பாதிக்கப்படும்.  இவர்களிடம், “கவுன்சிலிங்’ செய்வதன் மூலம் திருத்த முடியும்” என்றனர்.
எப்படி தடுப்பது?
டாக்டரின் மருந்து சீட் இருந்தால் மட்டுமே, மருந்துக் கடைகளில் தூக்க மாத்திரை தருகின்றனர். பெரியவர்கள் கேட்டால் மட்டும், மேற்கூறிய பொருட்களை கடை உரிமையாளர்கள் தர வேண்டும்.
அதே சமயம், தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், கண்காணித்து கண்டிக்க வேண்டும். சரியில்லாத நண்பர்களிடம் நட்பு வைக்க அனுமதிக்கக் கூடாது.
இப்படி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டும், அவர்களை ஒழுக்கம் உடையவர்களாக, இச்சமூகத்திற்கு அடையாளம் காட்ட முடியும்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::