Monday, August 5, 2013

பித்ரா(பெருநாள் தர்மம்)...

நம்மிடையே ஏழைகள், செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினர் எனும் ஏற்றத்தாழ்வு வாழ்க்கை அமைப்பில் இருந்தாலும், இஸ்லாம் இந்த வேறுபாடான மக்களை ஒன்று சேர்க்கும் விதமாக சில வணக்கங்களை விஷேசமான முறையில் ஏற்படுத்தித் தந்துள்ளது. அதில் பித்ரா(பெருநாள் தர்மம்)...ஒன்றுதான்'ஸதக்க‌துல் ஃபித்ர்' அல்லது 'ஜகாத்துல் ஃபித்ர்' என்று சொல்லப்படும் தர்மமாகும். இஸ்லாம் கூறும் இந்த ஃபித்ரா தர்மத்தின் முக்கியத்துவத்தையும் அதன் சட்டங்களையும் இப்போது பார்ப்போம்.

யார் யாரெல்லாம் நோன்புப் பெருநாள் தர்மம் கொடுக்கவேண்டும்?

பொருளாதாரக் கடமையான 'ஜகாத்' எவ்வாறு பொருள் வளத்தைத் தூய்மைப்படுத்தி இஸ்லாமிய சமூகத்தின் பொருளாதாரத் தேவையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கின்றதோ, அதேபான்று இந்த 'ஜகாத்துல் ஃபித்ரு'ம் ஏழைகளின் சந்தோஷத்தில் பெரும் பங்காற்றுகிறது. பொருள்கள் மீதான கட்டாயக் கடமையான 'ஜகாத்' குறிப்பிட்ட செல்வ வளமுள்ள‌ முஸ்லிம்களில் யார் அதற்குரிய 'நிஸாப்' எனும் எல்லை அளவையை எட்டுகின்றனரோ அவர்கள் மீது மட்டுமே கடமையாகின்றது. ஆனால் இந்த ஜகாத்துல் ஃபித்ர் அவ்வாறல்ல! நோன்பாளிகள், நோன்பு நோற்க இயலாமல் இருந்தவர்கள், வசதியில் குறைந்தவர்கள் யாராக இருந்தாலும், தன் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர் சார்பாகவும் கட்டாயம் கொடுக்க‌ப்பட வேண்டிய ஒன்றாகிவிடுகின்றது. எனவே த‌ன் குடும்பத்தின் பெருநாள் செலவு போக இதைக் கொடுக்கச் சக்தியுள்ள அனைத்து முஸ்லிம்களும் இந்த தர்மத்தை கொடுக்க வேண்டும். பெரும் செல்வந்தர்கள் தான் கொடுக்க வேண்டும் என்பது இதில் கிடையாது.

-:பெருநாள் தர்மம் கொடுப்பதின் நோக்கம்:-

ரமலானைத் தொடர்ந்து வரும் ஈகைத் திருநாள் எனும் இஸ்லாமிய பண்டிகையின்போது எந்தவொரு முஸ்லிமும் அப்பண்டிகை நாளின் மகிழ்ச்சியிலிருந்து தூரமாகி நிற்கக்கூடாது எனும் பரந்த நோக்கமும் இந்த தர்மத்தின் மூலம் வியாபித்து நிற்கின்றது! இதனால் நோன்பு நோற்றவர்களில் பணக்காரர்கள் ஏழைகளுடனும், ஏழைகள் அவர்களைவிட வறிய‌ ஏழைகளுடனும் நேரடியாக தொடர்புகொண்டு பெருநாளின் சந்தோஷத்தை பகிர்ந்துக்கொள்ள முடிகிறது. இதனால் அவர்களிடையே மகிழ்ச்சியின் தாத்பர்ய அம்சம் சகோதரத்துவ வாஞ்சையுடன் மிளிர்கின்றது.

இந்த நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கிய நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள், ஏழை மக்கள் பெருநாள் பொழுதை மகிழ்வுடன் கழிப்பதற்காகவும், நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி ஏதாவது வீணான காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அதற்கு பரிகாரமாகவும் இந்த தர்மம் அமைவதாக‌ கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி,"இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்"என்றும் கூறினார்கள்.
         அறிவிப்பாளர்:இப்னு உமர்(ரலி); நூல்கள்:பைஹகீ,தாரகுத்னீ

ஸதக்க‌துல் ஃபித்ர் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளின் (அன்றைய உணவுக்கு வழியாக இருப்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
         அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்கள்:அபூதாவூத்,இப்னுமாஜா,தாரகுத்னீ,பைஹகீ

பெருநாள் தர்மம்(ஸதக்க‌துல் ஃபித்ர்) எப்போது வழங்க வேண்டும்...?

இந்த தர்மமானது புனித ரமலானின் முடிவில், ஈகைத் திருநாள் தொழுகைக்கு முன்பே வழங்கப்படுவதாகும். ஒவ்வொரு முஸ்லிமான ஆண்-பெண்கள், அன்று பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவரின் சார்பாகவும் வழங்கப்படவேண்டும்.

ஃபித்ர் ஜகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படும் முன்பே வழங்கிவிடவேண்டுமென நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள்.
         அறிவிப்பாளர்:இப்னு உமர்(ரலி); நூல்கள்:புகாரி,முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ

நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக பெருநாள் தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர்.
         அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி); நூல்:புகாரி

எனவே பெருநாள் தர்மத்தினைப் பெறக்கூடிய மக்கள் பெருநாளைக்கான‌ உணவுகளை தயார்படுத்திக்கொள்ள‌ வசதியாக ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாக கொடுத்துவிடவேண்டும்.

-:பெருநாள் தர்மத்தின் அளவு:-

முஸ்லிமான ஆண்கள் பெண்கள், பெரியவர் சிறியவர், அடிமை, சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் தலா ஒரு 'ஸாவு' என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தனர்.
         அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி); நூல்கள்:புகாரி,முஸ்லிம்,அஹ்மத்,நஸயீ,அபூதாவுத்,திர்மிதீ,இப்னுமாஜா

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் உணவுப் பொருட்களில் ஒரு 'ஸாவு' ஃபித்ர் தர்மம் வழங்குவோம். அன்றையதினம் எங்களின் உணவாக கோதுமையும் உலர்ந்த திராட்சையும் இருந்தது.
         அறிவிப்பாளர்: அபூஸயீத்(ரலி); நூல்:புகாரி

குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்காகவும் ஒரு "ஸாவு" அளவுக்கு கொடுக்கவேண்டும் என்று இந்த ஹதீஸ்க‌ள் கூறுகின்றன.

(குறிப்பு:- இரு கை கொள்ளளவின் நான்கு மடங்கே ஒரு "ஸாவு" என்பதாகும். அதாவது இருகைகளையும் ஒன்று சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்கு முறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும். கிராம் கணக்கில் சொல்வதாக இருந்தால் சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.)

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும். உதாரணமாக, நமது பராமரிப்பில் 3 நபர்கள் இருந்தால் தன்னையும் சேர்த்து தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் (4 x 2.5 கிலோ) 10 கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா தர்மத்தின் அளவாகும்.

எதைக் கொடுக்கலாம்......? 
பித்ரா(பெருநாள் தர்மம்)...



நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் காலத்தில் பெருநாளின் ஃபித்ரா தர்மமாக உணவுப் பொருள்கள்தான் திரட்டி விநியோகிக்கப்பட்டது. அவர்கள் காலத்தில் தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள் புழக்கத்தில் இருந்தாலும் நோன்புப் பெருநாள் தர்மமாக காசுகள் கொடுக்கப்பட்டதில்லை. உணவுப் பொருட்கள் தான் கொடுக்கப்பட்டன. நபித்தோழர்களின் அன்றைய உணவாக இருந்த பேரீத்தம்பழம், தீட்டப்படாத கோதுமை (தோல் நீக்கப்படாதது) ஆகியவற்றைத் தான் கொடுத்து வந்தனர். ஆனால் நபி(ஸல்) காலத்தில் கோதுமை, பேரீத்தம்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைதான் தர்மமாக கொடுக்க வேண்டும். ஏழைகளுக்குப் பயன்படும் விதத்தில் எந்த ஒரு உணவுப் பொருளையும் கொடுக்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உணவில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு "ஸாவு', பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு, பாலாடைக் கட்டியில் ஒரு 'ஸாவு', உலர்ந்த திராட்சை(கிஸ்மிஸ்)யில் ஒரு 'ஸாவு' என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்.
             அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி(ரலி); நூல்: புகாரி 1506

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு "ஸாவு' உணவை நோன்புப் பெருநாளில் வழங்கி வந்தோம். எங்களின் அன்றைய உணவு, தீட்டப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக் கட்டி, பேரீச்சம் பழம் ஆகியவை தான்.
            அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி); நூல்: புகாரி 1510

ஆக, மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களிலிருந்தும் பொதுவாக உணவுப் பொருட்கள் வழங்குவதுதான் முக்கியம் என்றும் அன்றைக்கு எது உணவாக இருந்ததோ அதைதான் வழங்கினார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம். எனவே நமது உணவாக எது இருக்கின்றதோ அதை பெருநாள் தர்மமாக கொடுக்க வேண்டும். ஏழைகளுக்கு உணவாக இருப்பதை நபியவர்கள் காரணம் காட்டியுள்ளதால் அந்தந்தப் பகுதிகளில் எது மக்களுக்கு உணவாக அமைந்துள்ளதோ அவற்றைக் கொடுக்கலாம். அப்போது தான் இந்த நோக்கம் நிறைவேறும். நமது உணவுப் பழக்கத்தில் முதன்மையானதாக‌ அரிசி இருப்ப‌தால் அதை ஒரு 'ஸாவு' அளவு கொடுக்கவேண்டும். இதர உணவுப் பொருள்களுக்கும் இது பொருந்தும்.

ஆனால், வெறும் அரிசியைப் பெற்றுக் கொள்பவர்களின் தேவைப் பூர்த்தியாகிவிட்டது என்று நம்மால் சொல்ல முடியாது. ஏனெனில் அரிசி சோறு சாப்பிட வேண்டுமானால் குழம்பு போன்றவை தேவைப்படுகிறது. அப்போதுதான் உணவு என்ற அந்தத் தேவைப் பூர்த்தியாகும். அன்றைய மக்கள் பேரீத்த‌ம் பழத்தை மட்டுமே உணவாக உட்கொண்டார்கள். ஆனால் வெறும் அரிசியை மட்டும் உணவாகச் சாப்பிட முடியாது. அதனால் அரிசியையும், உணவிற்கு தேவையான இதர பொருட்களையும் அதனுடன் சேர்த்து கொடுக்கலாம். அதே சமயம்,

அரிசிக்குப் பதிலாக அதற்கான பணத்தைக் கொடுக்கலாமா? ன்றால்,

தாராளமாக கொடுக்கலாம். அன்றைக்குப் பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்ததால் உபரியாக உள்ள பேரீத்த‌ம் பழத்தைக் கொடுத்துவிட்டு கோதுமையை வாங்கிக்கொள்ள முடிந்தது. அதுபோல் உபரியாக கிடைக்கும் எந்த பொருளையும் கொடுத்து தேவையான மற்ற எந்த பொருட்களையும் வாங்கிக்கொள்ள முடியும். இன்றைக்கு நம்மிடம் உள்ள அரிசியைக் கொடுத்து விட்டு தேவையானதை எந்தக் கடையிலும் வாங்க முடியாது.

'அன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்' என்பது நபிமொழி. எல்லோரும் அரிசியை தர்மமாக வழங்கும்போது அன்றைய தினம் ஏழைகள் வீட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடில்லாமலிருக்கும். அன்றைக்கு துணைத் தேவையே அதிகரித்து நிற்கும் என்பதால் பணமாக கொடுப்பது ஹதீஸுக்கு மாற்றமானதல்ல என்பதை நாம் புரிந்துக் கொள்ளலாம். எனவே தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்வதற்குரிய‌ மொத்த‌ பணமாக கொடுக்கலாம். பணமாகக் கொடுத்தால்தான், தன் குடும்பத்திற்கு தேவையான அளவுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கிக் கொள்ளவும் மக்களுக்கு வசதியாக இருக்கும். எனவே ஏழைகள் மகிழ்வோடு அந்த நாளைக் கொண்டாட அரிசியைவிடப் பணமே சிறந்ததாகும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக, பணமாகக் கொடுத்தாலும் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் என்பதால் ரூபாயாகக் கொடுப்பதைத் தடுக்க எந்த நியாயமும் இல்லை. அப்படி பணமாகக் கொடுக்கும்போது நாம் எதைப் பிரதான‌ உணவாக உட்கொள்கிறோமோ அந்த அரிசியின் விலையைதான் அளவுகோலாகக் கொண்டு, மேலே சொன்ன அளவில் கொடுக்கவேண்டும். அல்லது அரிசியும் அதனுடன் சேர்த்து தேவையான மற்ற பொருட்களையும் கொடுக்கலாம்.

அப்படி கொடுக்கும்போது அன்றாடம் நாம் எந்த வகையான தரத்தில் உணவைப் பயன்படுத்துகிறோமோ, அந்த தரத்திலிருந்து குறைந்துவிடாமல் தரமானதாக கொடுக்கவேண்டும். சிலர், தான் மட்டும் உயர்தர அரிசியை பயன்படுத்திவிட்டு இதுபோன்ற ஸதகாவுக்காக விலை மலிவான, தரம் குறைந்த அரிசியை வாங்கி விநியோகிப்பார்கள். இது கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டியதாகும். 

எனவே பரிவுடன் ஏழைகளுக்கு உதவுவது, குறைந்த பட்சம் அவர்களைப் பெருநாளன்று பிறரிடம் கையேந்திக் கேட்காதிருக்கச் செய்வது போன்ற உன்னத மனிதம் கலந்திருக்கும் இந்த உயரிய நோன்புப் பெருநாள் தர்மத்தின் தத்துவத்தை உணர்ந்து, உரிய நேரத்தில் அலட்சியமின்றி அனைவரும் இந்த பெருநாள் தர்மத்தை ஈந்து, நாம் நோற்ற‌ நோன்பைத் தூய்மைப்படுத்திக் கொள்வோம்! அதன்மூலம் நாம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் இந்த‌ பண்டிகை நாளில், வறண்ட பாலையிலிருந்து ஏழை எளிய மக்களை வெளியேற்றி சோலைவன சுகந்தத்தை ந‌ம்முடன் பகிர்ந்திடச் செய்வோம்!இறைவனின் முழு திருப்பொருத்தத்தையும் நாம் அடைவோம், இன்ஷா அல்லாஹ்!

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::