Saturday, November 19, 2011

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குக் காவல் நீட்டிப்பு!




பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரை பாதையில் குண்டு வைத்ததாக கைது செய்யப்பட்ட இருவருக்குக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கடந்த மாதம் 27-ந்தேதி மதுரையில் ஊழல் ஒழிப்பு யாத்திரை மேற்கொண்டார். 28-ந்தேதி திருமங்கலம் வழியாக தென்காசி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கவுண்டன் ஆற்று பாலத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த “பைப்” வெடிகுண்டு கண்டுபிடித்து கைப்பற்றப்பட்டது. இதனால் அத்வானியைக் கொலை செய்ய திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக திருமங்கலம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சிறப்பு புலனாய்வுக்கு மாற்றப்பட்டது. காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த அப்துல்லா மற்றும் இஸ்மத் ஆகியோரைக் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அப்துல்லா, இஸ்மத் ஆகியோரைத் திருமங்கலம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு அவர்கள் 2 பேரையும் 18-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.



அவர்களின் காவல் முடிந்ததைத் தொடர்ந்து டி.எஸ்.பி. கோவிந்தராஜன் தலைமையில் அப்துல்லா, இஸ்மத்தைக் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் மதுரை சிறையில் இருந்து திருமங்கலம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர்.

மாஜிஸ்திரேட்டு ராதாகிருஷ்ணன் 2 பேருக்கும் டிசம்பர் 2-ந்தேதி வரை காவலை நீடித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அப்துல்லா மற்றும் இஸ்மத்தை மீண்டும் மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனர்.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::

Post a Comment