Tuesday, July 16, 2013

ரமழானின் மேன்மை......!

புண்ணியம் பூத்துக் குலுங்கும், நன்மையும் நற்செயலும் செழிக்கும், இறையச்சமும் தியாகமும் வளர்க்கும் புனித ரமளான் வந்துவிட்டது. ஈடு இணையற்ற நன்மைகளை வாரிச் சொரியும் ரமளான் கிடைத்து விட்டது. மனிதருள் ரமளான் தரும் வாழ்க்கை மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. அல்லாஹ் தந்த அருட்கொடைகளில் ரமளான் மாதம் மறக்க முடியாததாகும்.
ரமளானின் மேன்மையையும், சிறப்பையும் அறிந்தவர்களெல்லாம் காலம் முழுதும் ரமளானாக இருக்கக் கூடாதா? என ஏங்கித் தவித்தார்கள். ஸஹாபாக்களும், இறை நேசர்களும், ஞானிகளும் ரமளானில் நோன்பு வைப்பத்திலும் திருக்குர்ஆன் ஓதுவதிலும் இரவெல்லாம் நின்று வணங்குவதிலும் அவர்களுக்கிருந்த பேரானந்தமும், பேராசையும் சொல்லில் வடிக்க முடியாதவையாக இருந்தன.

ரமளான் மனிதனுடைய செயல்பாடுகளையும், அவனுடைய நித்திய வழக்க முறைகளையும் அல்லாஹ்வின் அன்பிற்காக மாற்றி அமைக்கிறது. தினமும் நேரம் தவறாமல் மிகச்சரியாக உண்டு பருகியவன், சாப்பிட்டு மகிழ்ந்தவன்; மற்ற காலங்களில் மறந்தும் சாப்பிடாத, பருகாத ஒரு நேரத்தில் உண்ணுகிறான் பருகுகிறான் என்றால் யாருக்காக – அல்லாஹ்வின் கட்டளைக்காகத் தானே...!
ரமழானின் மேன்மை......!ஸஹர் நேரம் என்ற அந்த அதிகாலை வைகறைப் பொழுது என்பது மனிதரெல்லாம் ஆழ்ந்து உறங்குகின்ற அதி அற்புத நேரம். இரவெல்லாம் உறங்காதவர் கூட தன்னை மறந்து மறந்தே உறங்கிப் போகின்ற நேரம். உலகின் எந்த மூலையில் வாழுகின்ற மனிதனும் சாப்பிடாத – சாப்பிடப் பிடிக்காத – மனம் ஒப்பாத ஒரு நேரத்தில் அல்லாஹுவுக்காக – அல்லாஹ்வின் ரஸுலுக்காக – அவர்களின் கட்டளைக்காக தங்களை முழுமையாக அர்பணித்தவனாக சாப்பிடுகிறான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

"அல்லாஹுதஆலாவும், அவன் மலக்குகளும், ஸஹர் சாப்பிடுவோரின் மீது அருள் புரிகின்றனர்".(அறிவிப்பாளர்: ஹள்ரத் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: அத்தர்ஙீப்)

ஹள்ரத் ஹாபிஸ் இப்னு ஹஜர் ரஹ்மதுல்லாஹி அலைஹி புகாரி ஷரீபின் விரிவுரையில் எழுதும் போது; "ஸஹர் சாப்பிடுவதால் பல வகையான பரக்கத்துகள் கிடைக்கின்றன. சுன்னத்தைப் பின்பற்றுதல், வேதக்காரர்களுக்கு மாறு செய்தல் இன்னும் வணக்கங்கள் செய்ய சக்தியற்றவருக்கும், வணக்கத்தால் உற்சாகம் அதிமாகுதல், பசி அதிகமானால், உண்டாகும் தீய குணத்தைத் தடுத்தல், அந்த நேரத்தில் தேவையுள்ள யாசகன் வந்தால் உதவி செய்தல், பக்கத்து வீட்டார் ஏழ்மையுடைவராக இருந்தால் அவருக்கு உதவி செய்தல், அந்த நேரத்தில் து ஆ ஏற்கப்படுதல், ஸஹரின் பரக்கத்தால் துஆ செய்யும் நல்லுதவியும் கிடைத்து விடுதல், அந்நேரத்தில் திக்ரு செய்வதற்குரிய வாய்ப்பு கிடைத்தல் போன்ற பலவகை நன்மைகள் கிடைக்கின்றன" என எழுதுகிறார்கள்.

ஸஹர் நேர உணவிற்கு அல்லாஹ் தரும் அதி அற்புத ஆற்றல் இது. அன்டைம் எனச் சொல்லப்படும் காலம் கடந்த ஒரு நேரத்தில் சாப்பிடும் உணவிற்கு செரிமானத்தையும் தந்து – குடலின் இயக்கத்தை சீராக்கி நோன்பாளிக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் ஆக்குகிறான் அல்லாஹ்.

பசி வந்தால் பத்தும் பறந்து விடும், பசித்தால் புலியும் புல்லை திண்ணும் எனச் சொல்லுவார்கள். ஆனால் நோன்பு வைத்திருக்கும் பசியாளிகள் கொஞ்சமும் நிதானம் இழக்காமல் கட்டுப்பாட்டுடன் செயல்படுகிறார்கள். பசி நேரத்தில் மனிதன் எதைக் கொடுத்தாலும் உண்டு விடுவது பழக்கம். நல்லதா? கெட்டதா? ஹலாலா? ஹராமா? ருசியானதா? இல்லையா? என்றெல்லாம் பார்ப்பது கிடையாது. கிடைத்ததும் விழுங்கத்தான் எத்தனிப்பான். அதே சமயம் ஒரு நோன்பாளி நோன்பின் மயக்கம், தாகம் மேலிட்ட போதும் கமகமவென மணக்கும் மிகருசியான அறுசுவை உணவுகளும், மனம் லயிக்கின்ற விருப்பமான பதார்த்தங்களும் பரப்பிவைக்கப்பட்ட போதிலும் நாவும் கரமும் சுவைக்கத் துடிதுடித்த போதிலும், மனதை ஒருநிலைப்படுத்தி நஃப்ஸை அடக்கி அல்லாஹ் தடுத்து விட்ட நேரத்தில் ஹலாலான உணவுகளைக் கூட ஹராமாக்கிக் கொள்கிறான். பசி இல்லாத நேரத்தில் சாப்பிட வைத்து பசிக்கின்ற நேரத்தில் சாப்பிட தடை விதிக்கும் இந்த விந்தையான கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து அல்லாஹ்வை மனமுவந்து ஏற்றுக் கொள்கின்ற நிறைவான தன்மையை உலகில் அல்லாஹ்வைத் தவிர யாரால் ஏற்படுத்திட முடியும்?

எனவே தான் நோன்பிற்குரிய கூலியை தானே நேரடியாகத் தருவதாகவும், தானே கூலியாக ஆகிவிடுவதாகவும், அல்லாஹ் வாக்களிக்கின்றான். ஆத்மார்த்த ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் மனிதனை மாற்றும் சக்தி நோன்பிற்கு இருக்கிறது. மனிதனின் மனோ இச்சைகளை முறியடிக்கும் சக்தி இறையச்சத்தின் அடிப்படையில் நோற்கும் நோன்பைத் தவிர வேறெதிலும் இருக்க முடியாது. பசியின் கொடுமையால் நல்லவர்கள் கூட திருட முனைவார்கள். நோன்பு என்ற பெயரிலுள்ள பசியாளியான திருடனைக் கூட நல்லவனாக மாற்றும் சக்தி இறையச்சமிக்க நோன்பிற்கு இருக்கிறது.

"ஷைத்தான் மனிதனின் உடலில் இரத்தம் போன்று ஊடுருவிச் சென்று கொண்டிருக்கின்றான். அவனுடைய வழிகளைப் பசித்திருப்பதின் மூலம் தடை செய்யுங்கள்" என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாமா தஹ்தாவீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பசியின் கசப்பைக் கொஞ்சம் உணர வேண்டும். அதுதான் அதிகமான நன்மைகள் கிடைப்பதற்கும் ஏழை, எளியோரின் மீது இரக்கம் ஏற்படுவதற்கும் காரணமாகும் எனக் குறிப்பிடுகிறார்கள். ஸஹாபாக்களும், வலிமார்களும், ஞானிகளும் பசி மூலமாக மனோ பலத்தைப் பெற்றார்கள். பசித்திருந்து தான் இறை ஞானங்களைப் பெற்றார்கள். பசியின் மூலம் தான் ஞானப் பசியை தீர்த்துக் கொண்டார்கள். குடலை நிரப்புவது – ஞானத்தை விட்டும் மனிதனை காலியாக்கி விடும் என்பதை உடலை வளர்ப்பவர்கள் அறிந்திருக்கவில்லை என்று மெளலானா ஸஃதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல நாட்களாக தொடர்ந்து நோன்பு வைத்திருக்கிறார்கள். இடையில் எதுவுமே சாப்பிட்டதில்லை என ஹதீதுகளில் காண்கிறோம். ஒரு பேரித்தம் பழத்தையும், ஒரு மிடர் தண்ணீரையும் கொண்டு பல நாட்கள் இது போலவே நோன்பு வைத்தார்கள் – நோன்பு திறந்தார்கள் என்று பல வலிமார்களின் வரலாற்றில் பார்க்க முடிகிறது.

ஒரு பெரியாரிடம், இப்படியே எதுவும் சாப்பிடாமல் நோன்பு வைத்துக் கொண்டிருந்தால் உடல் பலகீனம் அடைந்து விடுமே என சீடர்கள் கேட்டதற்கு; அதில் தான் சொர்க்கத்தின் இன்பம் உண்டாகிறது என பதில் அளித்தார்களாம் என்றால் அல்லாஹுவுக்காக பசித்திருப்பதால் எவ்வளவு பெரிய விசித்திரங்கள் நடக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-

"நோன்பு ஒரு கேடயம் அதனை உடைக்காமலிருக்கும் வரை" (அறிவிப்பாளர் : ஹள்ரத் உபைதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்)

கேடயத்தின் மூலம் தன்னை தற்காத்துக் கொள்வது போல நோன்பின் மூலம் மனிதன் ஷைத்தானிய உணர்வுகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்கிறான். எனவே தான் நோன்பின் ஆழிய உணர்வுகளைப் பெற்றவர்களெல்லாம் காலமெல்லாம் ரமளானாக இருந்திருக்க வேண்டாமா? என பேராவல் கொண்டார்கள்.

ஆனால் நாம் காலமெல்லாம் ரமளான் வராமல் இருந்திருக்கக் கூடாதா? என நினைக்கிறோம். நோன்பை ஒரு கடினமான செயலாக நினைத்துக் கொண்டதால் ஆன விளைவு இது. நோன்பு வைப்பது என்றால், ஸஹருக்கு அது செய்ய வேண்டுமே இது செய்ய வேண்டுமே செலவுகள் அதிகமாகுமே, நோன்பு திறக்க பல பதார்த்தங்கள் செய்ய வேண்டுமே என, ஒரு பக்கம் செலவுகளையும் சிரமங்களையும் எண்ணிப் பார்க்கின்றோம். மற்றொரு பக்கம் ரமளான் வந்தால் வியாபாரம், விவசாயம், தொழில் தடைபடுமே என்றெல்லாம் தவறான கற்பனைகளை உண்டாக்கிக் கொண்டு அலைகின்றோம். தேவையில்லாத பயணங்களை காரணம் சொல்லிக் கொண்டும், நோய்களை காரணம் காட்டிக் கொண்டும் தட்டிக் கழிக்க முயற்ச்சிக்கின்றோம். ஸஹாபாக்கள் நோன்பு வைத்துக் கொண்டே வியாபாரம் செய்யவில்லையா? உழைக்கவில்லையா? சம்பாதிக்கவில்லையா? என்பதனை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இஸ்லாத்திம் முதல் போர் களமாம் பத்ர் போர் ரமளானின் 17 ம் நாள் தானே நடைபெற்றது! உணவில்லாமல் பட்டினியாக பல நாட்கள் நோன்பிருந்து முன்னூறுக்கும் அதிகமான நபித்தோழர்கள் எதிரிகளை திக்கு முக்காடச் செய்யவில்லையா? பசியோடும், தாகத்தோடும், மயக்கத்தோடும் எதிரிகளை பந்தாடி சூறையாடி வெற்றிவாகை சூடினார்களே! அவர்களுக்கு பசியின் கொடுமையும், தாகத்தின் தன்மையும் எப்படி பறந்தோடியது? அல்லாஹுவுக்காக என்று நாம் இறங்கிவிட்டால் எல்லாவற்றையும் இலகுவாக நமக்கு மாற்றித்தரும் வல்லமை மிக்கவன் அல்லாஹ்.

ரமளானுடைய நோன்புகளை காரணங்கள் கூறி தட்டிக் கழிப்போமேயானால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து ஒருக்காலும் தப்பமுடியாது. எந்த மனிதன் தகுந்த காரணமின்றி ரமளான் மாதத்தில் பகிரங்கமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாரோ அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என மார்க்க சட்ட விற்பன்னர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

ரமளானின் சிறப்புக்களும், மேன்மைகளும், அதற்கு அல்லாஹுவால் அளிக்கப்படும் வெகுமதிகளும் எண்ணிலடங்காதவை. பர்ளான கடமைகளுக்கு எழுபது மடங்கு நன்மைகள் அதிகரிக்கும் போது, மற்ற வணக்கங்களுக்கு அதிகரிக்கும் நன்மையை அல்லாஹ்வே அறிவான். நோன்பு நோற்பதின் மூலம் உங்களில் ஓர் உயர்வான மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அது உங்களை ஆன்மீக ரீதியான படித்தரங்களை உயர்த்துவதாக இருக்கட்டும். நீயே விரும்பவில்லையானால் சாக்கு போக்குகள் ஆயிரம் இருக்கின்றன என ஓர் உர்துப்பாடல் கூறுவது போல, நாம் விரும்பவில்லையானால் எதுவும் நடைபெறாது.

நன்றி : குர்ஆனின் குரல், ஜுலை 2013

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::

Post a Comment