Monday, December 12, 2011

இணையம்....!

சகோதரி ருக்கையா அப்துல்லாஹ்

என் இணைய தள சகோதரிகளே! பொழுதுப்போக்கிற்காக உலாவரும் இவ்விணையத்திலும் மார்க்கம் குறித்து பேசுவது மகிழ்வளிக்கிறது.இன்றைய கால கட்டத்தில் சுதந்திரம் -பெண்ணுரிமை- நாகரீகம் என பேசி ஆண்களுக்கு சமமாக பெண்களையும் வழி நடத்தி செல்வதாக போலி நட்புறவில் தங்கள் வாழ்க்கை பயணத்தில் வாழ்வை தொலைக்கும் அநேகம் பெண்கள்.
உண்மை நிலை உணராமல் அஃது விபரீத பாதைக்கு இன்று பயணம் மேற்கொள்கின்றனர்.

எனினும் அதனால் ஏற்படும் இழப்பை அடையும்போது தான் தங்களின் பாதை பயனற்றது என அறிகின்றனர். பெண்களே! அஃதில்லாமல் அல்லாஹ்வும் அவன் தூதரும் கூறிய வழியில் வாழ்வை அமைக்க வல்லோன் நமக்கு நற்கிருபை புரிவானாக!

"ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)" என்று கேட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 3006.)
ஃபழ்ல் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது 'கஸ்அம்' எனும் கோத்திரத்தை சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் என்னுடைய வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஆம்!" என்றார்கள். இது இறுதி ஹஜ்ஜில் நிகழ்ந்தது.(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 1513.)

"மணமுடிக்கத்தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மண முடிக்கத் தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும்போதே ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் இன்னின்ன ராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?' என்று கேட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக! என்றனர் (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 1862)


''இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் '(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்.. (உக்பா இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 5232)

• மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; (அல்குர்அன் 24:31)

(நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான். (அல்குர்அன் 33:55)
அல்லாஹு, ஹராம் ஆக்கியதை ஹலால் ஆக்கும் உரிமை எவருக்கும் இல்லை.

அல்லாஹுவை பயந்து கொள்ளுங்கள்.
அல்லாஹு நம் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்
• மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்குர்அன் 24:31)

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::

Post a Comment