Friday, May 3, 2013

குழந்தை பிறப்பு இயற்கையே...!


பேறுகாலத்தில் மரணமடையும் பெண்களின் எண்ணிக்கை ஆசிய நாடுகளில்தான் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில், 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி ஒரு லட்சம் குழந்தை பிறப்புகளில், கர்ப்பிணிப் பெண்களின் மரணம் 254 ஆகவும், தமிழ்நாட்டில் இதன் அளவு 111 ஆகவும் இருந்தது. இந்த விகிதாசாரம், வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது 25 விழுக்காடு அதிகம் என்கிறது உலக வங்கி.
ஆந்திரம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் இத்தகைய மரணம் பல மடங்கு குறைவு. இருப்பினும்கூட, தொடர்ந்த முயற்சிகள் காரணமாக 2009-ம் ஆண்டு 79 கர்ப்பிணிகள் மரணம் எனக் குறைந்துள்ளது.
பேறுகாலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மரணம் என்பது மருத்துவ வசதிகள் சென்றடையாத கிராமங்களில்தான் அதிகம் என்கிற நம்பிக்கை நம்மிடையே வேரூன்றி இருக்கிறது. ஆனால் அண்மையில், ஐஏஎஸ் அதிகாரியான ஷீலாராணி சுங்கத் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தெரிவித்த கருத்து ஒரு மாற்றுச் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது.
""மகப்பேறு தொடர்பான பாரம்பரிய அறிவை நாம் தக்க வைத்துக்கொள்ளவில்லை.
அதை வளர்க்கத் தவறிவிட்டோம்.
இன்று மருத்துவமனையை நம்பி இருக்கிறோம்.
பாதுகாப்பான பிள்ளைப்பேறு என்ற கருத்தில், சிசேரியன் மூலம் பல குழந்தைகள் பிறக்கின்றன.
மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தால்தான் தாய் சேய் நலம் என்ற எண்ணம் உள்ளது.''
இது எந்த அளவுக்கு உண்மை?
குழந்தை பிறப்பு இயற்கையே...!தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் குழந்தை பிறப்புகளில் 40 விழுக்காடு மட்டுமே மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. கோவை மாவட்டத்தில் குழந்தை பிறப்பு 80 விழுக்காடு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. ஆனால் இரு மாவட்டங்களிலும் பேறுகாலத்தில் மரணமடையும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை ஒரே அளவாகத்தான் இருக்கிறது. அப்படியானால் இதன் பொருள் என்ன? என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறார் அவர்.
சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமங்களில் பெண்களே சக பெண்கள் பிள்ளைபெற உதவி செய்வது மிகமிகச் சாதாரண சம்பவமாக இருந்தது. கிராமங்களில் வயல்வெளிகளில் வேலை செய்துகொண்டிருந்தபோதே பிரசவ வலி ஏற்பட்டு, மரத்தடியில் பிள்ளை பெற்ற சம்பவங்கள் ஏராளம். கிராமங்களில் மருத்துவச்சி எனும் வயதான பெண்மணிகள் அடிவயிற்றைத் தடவிப் பார்த்தே தலை எங்கே இருக்கிறது என்பதைச் சொல்லிவிடுவார்கள்.
அண்மையில், மதுரை அருகே உள்ள மலைவாழ் பழங்குடியினர் குடும்பம் பற்றிய செய்திக் கட்டுரையில் அந்த இனக்குழுவில் இருக்கும் யாருமே மருத்துவமனைக்கு வந்து பிள்ளை பெற்றதே இல்லை என்றும், அவர்களில் ஆண்-பெண் இருவருமே பேதமற்று இதில் திறமை பெற்றிருக்கிறார்கள் என்றும் படிக்கின்ற போது ஆச்சரியமாக இருந்தது. அவர்களைப் பொருத்தவரை தாம்பத்யம் எத்தனை இயல்பானதோ அத்தனை இயல்பானது பிள்ளை பெறுவதும்!
மருத்துவமனைகளை மட்டுமே நம்பிக்கொண்டு, நமது பாரம்பரிய மருத்துவமுறைகளை நாம் மறந்துபோகிறோம். கர்ப்பத்தை உறுதி செய்வதில் தொடங்கி, மூன்றாவது மாதத்திலேயே ஸ்கேன் செய்யத் தொடங்கி, டானிக்குகள் சாப்பிடச் சொல்லி அலோபதி மருத்துவத்தால் மட்டுமே குழந்தை நலமாகப் பிறக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டார்கள். கிராமத்துக் குடும்பங்கள்கூட நகரங்களுக்கு வந்து தனியார் மருத்துவமனைகளில் ரூ. 5,000-க்கு குறைவுபடாமல் செலவு செய்து பிள்ளை பெற்றுச் செல்லும், அல்லது ரூ. 25,000 வரை செலவு செய்து சிசேரியன் செய்துகொள்ளும் அவல நிலை உள்ளது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் குழந்தைகள் வீடுகளில்தான் பிறந்தார்கள். பனிக்குடம் உடைந்தும் பிள்ளைப்பேறு நிகழாத நிலையில்தான் மருத்துவமனையை நாடும் வழக்கம் இருந்தது. அத்தகைய சம்பவங்களில் மட்டுமே சில கர்ப்பிணிப் பெண்கள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இறந்தனர் என்பதும் உண்மை.
இன்று பெண்கல்வியும், போக்குவரத்து வசதியும், கைப்பேசி வசதியும், 108 அவசர ஊர்தி போன்ற வசதிகளும் பெருகியுள்ள இந்த நாளில் பாரம்பரிய மருத்துவத்தைக் கடைப்பிடிக்கவும், பிரசவம் கடினமானதாக இருக்கும்போது மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்வதும் மிக எளிது. மகப்பேற்றில் பாரம்பரிய முறைகளைக் கையாளுதல், தேவைப்பட்டால் ஆங்கில மருத்துவத்தின் துணை நாடுதல் என்ற இரண்டும் இணையும் ஒரு நிலைமை உருவானால், அனைத்து கர்ப்பிணிகளுக்குமே பயனுள்ளதாக அமையும். இன்றைய சூழ்நிலையில் இதற்கான மருத்துவச்சியை அடையாளம் காண்பது அரிது. ஆனால், அங்கன்வாடி பணியாளர்கள், கிராமச் சுகாதார அலுவலர்களுக்கு இத்தகைய பாரம்பரிய மருத்துவ அறிவைப் புகட்டி, பயிற்சியும் அளிக்க முடியும்.
கர்ப்பிணிப் பெண்களின் நலனைக் கருத்தில்கொண்டுதான் உலக வங்கியும் தமிழகத்துக்கு நிதியுதவி வழங்குகிறது. 2010 ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின் மருத்துவச் சேவையை மேம்படுத்துவதற்காக 117 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது. இது ஏற்கெனவே தமிழ்நாடு ஹெல்த் சிஸ்டம் புராஜக்ட்டுக்காக வழங்கிய 110 மில்லியன் டாலர் நீங்கலாக வழங்கப்படும் கூடுதல் தொகை என்கிறது உலக வங்கி. 1999-லிருந்து சிசுமரணம், பேறுகால மரணம் இரண்டும் தமிழ்நாட்டில் கணிசமாகக் குறைந்து வருகிறது என்பதைப் பாராட்டி வழங்கப்பட்ட தொகை இது.
கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதிஉதவி ரூ. 6 ஆயிரத்தை ரூ 10 ஆயிரமாக உயர்த்துவதாக தி.மு.க.வும், ரூ.12,000 ஆக உயர்த்துவதாக அ.தி.மு.க.வும் வாக்குறுதி அளிக்கிறது என்றால் அது உலக வங்கிப் பணத்தை நம்பித்தான்.
தேவையில்லாமல் அறுவைச்சிகிச்சை, மருத்துவமனைச் செலவு என்று பணவிரயம் செய்ய வேண்டியது அவசியம்தானா? நாம் ஏன் பாரம்பரிய மருத்துவமுறைகளைப் பாதுகாத்துக் கொள்ள மறுக்க வேண்டும்? ஷீலாராணி சுங்கத் எழுப்பி இருக்கும் விவாதம் சிந்தனைக்கு உகந்தது. இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிக்க முயற்சிப்பானேன்...
நன்றி: தினமணி

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.