மனித
இனம் தோன்றியதிலிருந்தே அவனுக்கான தத்துவத்தேடலும் தோன்றியது. புரியாத
விஷயங்களை அறிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற மனிதனின் தீராத தாகம், இந்தத்
தத்துவத் தேடலை வளர வைத்தது. இப்படியான தேடல்களின் வெளிப்பாடுகளே மதம்.
என்னவென்று புரியாத இயற்கையை கடவுளாக வணங்கிக்கொண்டிருந்த மனிதன் புரியாத
விஷயங்களுக்கு வசதியான தத்துவ விளக்கங்களையும் அளிக்கத் தொடங்கினான்.
இந்த தத்துவத் தேடல்களுக்குக் கிடைத்த விளக்கங்கள், மதமாக வடிவெடுத்தன. தனக்குக் கிடைத்த விளக்கங்களும், விடைகளும் மட்டுமே உண்மை என்பதை மற்றவர்களையும் நம்பவைக்க, அந்த மதங்களை ஒருமுகப்படுத்தி அனைவர் மீதும் திணிக்கத் தொடங்கினான். இப்படி உலகில் மனிதன் இருந்த அத்தனை இடங்களிலும் மதங்கள் தோன்றி, அந்த மதத்தினை மற்றவர்கள் மீது திணிக்கும் போக்கு பரவியது. மதம் அதிகாரத்தின் அடையாளமாக மாறியது. மனிதனும் நாகரீகமும் வளர வளர, மதங்களுக்குள்ளான முரண்பாடுகள் அதிகமாகின. விஞ்ஞான வளர்ச்சியோ மனிதனின் மதங்களையும், அவனின் நம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்கியது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி மதங்களுக்கு நடத்திய சோதனைகளில் அனைத்து மதங்களும் தோல்வியைத் தழுவின.
அறிவியல் எழுப்பிய கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் மதம் ஓடி ஒளிந்தது. அறிவியலால் மதத்தின் வீச்சை ஒழிக்க முடியாவிட்டாலும், அதன் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்ய முடிந்தது. அறிவியலுக்கும், மதத்துக்குமான போராட்டங்களின் விளைவாக உருவானவர்களே ஆன்மீக குருக்கள். அறிவியல் மதத்தின் மீது வைத்த விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் விடை கிடைக்காத நிலையில், அதற்கான மழுப்பலான பதில்களைச் சொல்லி, விஞ்ஞானமும், ஆன்மீகமும் ஒன்றே…. விஞ்ஞானத்தால் கண்டு பிடிக்க முடியாத விஷயங்களையும் விளக்குவதே ஆன்மீகம் என்று புதிய விளக்கம் கொடுத்து, தங்களுக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கினார்கள் ஆன்மீக குருக்கள். தொடக்க காலத்தில் சூரியனையும், மழையையும் விபரம் தெரியாமல் வணங்கிப் பழக்கப் பட்ட மனிதனுக்கு, வணங்குவதற்கென்று ஏதாவதொன்று தேவைப்பட்டுக் கொண்டே இருந்தது. அறிவியல் வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட ஐயங்களால் மதத்தின் மீது சந்தேகம் கொண்டிருந்தவர்கள், ஆன்மீக குருக்களிடம் ஐக்கியமானார்கள். இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் பல்வேறு நாடுகளில் இது போன்ற நவீன ஆன்மீக குருக்கள் தோன்றியபடியே இருந்துள்ளார்கள்.
இந்தியாவிலும் இது போன்ற மதகுருக்களுக்கு துளியும் பஞ்சம் இல்லை. புட்டபர்த்தி சாயிபாபா, கல்கி பகவான், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி, அரபிந்தோ, மகரிஷி மகேஷ் யோகி என்று பல்வேறு ஆன்மீக குருக்கள் தோன்றிக் கொண்டேதான் இருந்திருக்கிறார்கள். இந்த ஆன்மீக குருக்களில் யு.ஜி.கிருஷ்ணமூர்த்தியைத் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் நிறுவனமாக உருமாறி, சொத்துக்கள் சேர்த்து, தங்களுக்கென்று மூளைச்சலவை செய்யப்பட்ட அடிமைகளை உருவாக்கி வந்திருக்கிறார்கள். இந்த ஆன்மீக குருக்களின் வளர்ச்சி தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட தொண்ணூறுகளுக்குப் பிறகு ஒரு பிரம்மாண்டமான வீச்சோடு வளர்ந்தது. தொண்ணூறுகளுக்கு முன்பு இருந்த சாமியார்கள், கார்ப்பரேட்டுகளின் தந்திரங்களைக் கையாளவில்லை. அவர்களிடம் மூளைச்சலவை செய்யப்பட்ட பக்தகோடிகள் தாங்களாகவே சென்று சரணடைந்தார்கள். இந்த ஆன்மீக குருக்களைப் பற்றிய ஒரு நல்ல ஆய்வுக் கட்டுரை, வினவுத் தளத்தில் வெளியாகியுள்ளது.
இன்று இந்தியாவில் பிரபலமான ஆன்மீக குருக்கள் என்று எடுத்துக் கொண்டால், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவ், நித்யானந்தா மற்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ், மாதா அமிர்தானந்த மயி ஆகியோரைச் சொல்லலாம். இந்த ஆன்மீக குருக்களிடையே உள்ள ஒற்றுமை, அவர்களின் பேச்சுத் திறமை மட்டுமே. அற்புதமாக, குட்டிக் கதைகளோடு, உலக சமாதானம், உள்ளுர் அரசியல் வரை வசியப்படுத்தும் வகையில் பேசுவார்கள். பகவத் கீதை, விவிலியம், குரான், என்று மத நூல்களைப் பற்றி விரிவாக விளக்கவுரை அளிப்பார்கள்.
பின்னாளில் உருவான இந்த ஆன்மீக குருக்கள், அதிக வட்டி தரும் சீட்டுக் கம்பெனிகள் விளம்பரப்படுத்தி ஆட்களைப் பிடிப்பது போலவும், பிடிக்கத் தொடங்கினார்கள். இந்த சாமியார்களின் தந்திரத்தை, மல்டி லெவல் மார்க்கெட்டிங் நடத்தும் மோசடி நிறுவனங்களின் தந்திரத்தோடு ஒப்பிடலாம். மல்டி லெவல் மார்க்கெடிங் நடத்தும் பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் நடைபெறுவனவும், தற்காலத்திய ஆன்மீக குருக்களின் யோகா மற்றும் தியான வகுப்புகளில் நடைபெறுபனவும், ஏறக்குறைய ஒரே தந்திரத்தை கடைபிடிப்பன. சில ஆண்டுகளுக்கு முன், வீ கேன் என்றொரு நிறுவனம் காந்தப் படுக்கைகளை விற்பனை செய்தது. அந்த நிறுவனத்தில் சேர்ந்து 5500 ரூபாய் கட்டி உறுப்பினர் ஆனால், காந்தப்படுக்கை ஒன்றை தருவார்கள். அது என்ன படுக்கை என்றால், சாதாரணமான மெத்தையில் நாணய வடிவில் உள்ள சில காந்தங்களை பதித்து தருவார்கள். இப்படி 5500 கட்டி சேர்ந்து விட்டு, நீங்கள் மேலும் சில நபர்களைச் சேர்த்து விட்டீர்கள் என்றால், உங்களுக்கு அவர்கள் கட்டும் பணத்திலிருந்து ஒரு பகுதி வரும், அவர்கள் தங்களுக்குக் கீழே ஆட்களைச் சேர்க்க சேர்க்க, ஒரு பிரமிட் போல நீங்கள் உயரத்துக்கு சென்று கொண்டே இருப்பீர்கள் என்று அறிவிப்பார்கள். இந்த காந்தப்படுக்கை நிறுவனமான வீ கேன் சார்பாக, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும். அந்நிகழ்ச்சியில் சேர்ந்து கொள்ள, ஏற்கனவே சேர்ந்தவர்கள், தங்கள் நண்பர்கள், உறவினர்கள் என்ற ஆடுகளை மஞ்சள் நீர் தெளித்து அழைத்து வருவார்கள். அந்நிகழ்ச்சிகளில், மிக மிக சிறப்பான பேச்சுத் திறன் உடைய பேச்சாளர்கள் அந்த நிறுவனத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைப்பார்கள். அவர்கள் பேசி முடித்ததும், ஏற்கனவே வெட்டப்பட்ட ஆடுகளை அழைத்துப் பேசவைப்பார்கள். அவ்வாறு மேடைக்கு வந்து பேசும் நபர்கள் பேசுவதைக் கேட்டால், மடியில் இருக்கும் பிள்ளை நழுவி விழுந்து விடும். அப்படி ஒரு மீட்டிங்கில் கலந்து கொண்டபோது, வந்து பேசிய நபர்களின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. முதலில் வந்த நபர் ”நேத்து வரைக்கும் நான் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன்… இன்னைக்கு என் கிட்ட இருக்கறது ஒரு ஃபோர்ட் ஐகான் கார் தேங்க் யூ வீகேன்…” என்றார். அடுத்து வந்த நபர் ”எனக்கு வீடு கட்டுவது பல ஆண்டு கனவாக இருந்தது… எப்போது வீ கேனில் சேர்ந்தேனோ, மறுமாதமே வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டு., வீட்டுக் கடன் வாங்கி விட்டேன். இது வீகேன் எனக்கு தொடர்ந்து சம்பாதித்துக் கொடுக்கும் என்ற நம்பிக்கையே” என்றார். இது போல வரிசையாக வந்தவர்கள் புளுகிக் கொண்டே இருந்தார்கள். கூட்டத்துக்கு வந்து, இந்த பொய்களைப் பார்த்துக் கொண்டிருந்த பல ஆடுகள், வெட்டுவதற்கு தங்கள் தலையைக் கொடுக்கும்.
இந்த ஆன்மீகத் தொழிலில் பாபா ராம்தேவ், ஜக்கி வாசுதேவ், நித்யானந்தா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மாதா போன்றவர்களுக்கு ஏர்டெல் உரிமையாளர் சுனில் மிட்டல், ரிலையன்ஸின் அனில் மற்றும் முகேஷ் அம்பானி போன்றவர்கள் என்றால், மற்ற சிறு சிறு சாமியார்களுக்கு .ஊறுகாய் பொட்டலம் தயாரிக்கும் சிறு தொழில் அதிபர்கள். யாகவா முனிவர், சிவசங்கர் பாபா போன்றவர்கள், ரவிசங்கர் மகரிஷியிடமிருந்து பிரிந்து வந்து, “வாழும் கலை” என்ற அமைப்பை தொடங்குகிறார். வாழும் கலை என்பதாகப்பட்டது, மனித குலம் தோன்றியதிலிருந்தே யாருக்கும் வாழத் தெரியவில்லை, எப்படி வாழுவது என்று சொல்லிக் கொடுக்கிறேன் என்று அவர் தனது பிசினெஸை விரிவாக்கிக் கொண்டுள்ளார். பாபா ராம்தேவ் யோகா பயிற்சி மையம் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மருத்துவமனைகளை நடத்தி அவரது கம்பெனியையும் சிறப்பாக நடத்தி வருகிறார். அமிர்தானந்த மயி சாமியாரின் சிறப்பு கட்டிப்பிடி வைத்தியம். அவரது வியாபாரமும் கடல் கடந்து பிரபலமாகி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பெரும் தொழில் அதிபர்கள் வரிசையில் உள்ள நித்யானந்தா மற்ற சாமியார்களை விட, வசீகரமான பேச்சும், மொழி நடையும் உள்ளவர். ஆனால் துரதிருஷ்ட வசமாக வீடியோ கேமரா தொழில்நுட்பத்தின் வீச்சை அறிந்து கொள்ளாமல் போனதால், பட்டாபட்டியோடு சிக்கினார். அதன் பிறகு அவர் என்னென்னவோ முயற்சிகள் செய்தும் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முடியவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, இப்படிப்பட்ட ஆன்மீக வியாபாரிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து, தமிழக மக்களிடையே இந்த ஆன்மீக வியாபாரத்தைப் பிரபலமாக்கி, திருபாய் அம்பானிக்கு ராஜீவ் காந்தி போல, பின்புலமாக இருந்து இயக்கியது தமிழகத்தின் முன்னணி வாரப்பத்திரிக்கைகளான ஆனந்த விகடன் மற்றும் குமுதம்.
இந்தப் போக்கை தொடங்கி வைத்த முதல் ஊடகம், ஆனந்த விகடேனே… சுவாமி சுகபோதானந்தா என்பவர் எழுதிய மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ். இந்தத் தொடர் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்று, புத்தகமாக வெளிவந்த ஒரு சில மாதங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இந்த தொடரின் வெற்றி குமுதத்தையும் யோசிக்க வைத்தது. ஒரு காலத்தில் ஜெயகாந்தன், சுஜாதா, பிரபஞ்சன் போன்றோரின் தொடர்கதைகளை விளம்பரப்படுத்தி தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொண்ட விகடன் மற்றும் குமுதம் இதழ்கள், தொடர்கதைகளுக்கு வரவேற்பு குறைந்ததை உணர்ந்து ஆன்மீகத் தொடர்களில் கவனம் செலுத்தத் தொடங்கின. விகடனுக்குப் போட்டியாக குமுதம் தன் பங்குக்கு நித்யானந்தாவை வைத்து, “கதவைத் திற காற்று வரட்டும்” என்ற தொடரைத் தொடங்கினார்கள். நித்யானந்தாவின் சுவையான மொழி நடை காரணமாக இத்தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. குமுதம் அதிபர் ஜவஹர் பழனியப்பனோடு நெருக்கமான நித்யானந்தாவுக்காக குமுதம் தன் கதவுகளைத் திறந்தது. இந்தத் தொடர் நித்யானந்தாவை, அண்ணாமலை ரஜினிகாந்த் போன்ற வளர்ச்சியடைய வைத்தது.
நித்யானந்தாவின் தொடர் அடைந்த வளர்ச்சியைக் கண்டதும் விகடன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான், கோயம்பத்தூரில், லிங்கம் ஒன்றை நிறுவி வசூல் செய்து கொண்டிருந்த ஜெகதீஷாக இருந்து, பின்னாளில் ஜக்கி வாசுதேவாக மாறிய ஜக்கி விகடனை அணுகுகிறார். விகடனுக்கும் இந்த ஏற்பாடு வசதியாகவே இருக்கிறது. குமுதத்துக்கு போட்டியாக இத்தொடரைத் தொடங்குகிறது விகடன். நித்யானந்தாவைப் போலவோ, ஓஷோ போலவோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போலவோ, விரிவான அறிவும், வாக்கு சாதுர்யமும், மொழி நடையும் இல்லாதவர் ஜக்கி. இதனால் மற்றவர்களைப் போல, ஜக்கி இத்தொடரை எழுதாமல், ஜக்கியின் பொன்மொழிகளை தொகுத்து தொடராக வெளியிடப்பட்டது. இத்தொடரை தொகுத்தது, சுபா என்ற இரட்டை எழுத்தாளர்கள். இந்தத் தொடருக்காக, ஜக்கி பல கோடி ரூபாய் மதிப்புள்ள விளம்பரங்களை, விகடன் நிறுவனத்தின் பல்வேறு பத்திரிக்கைகளுக்கு தந்ததாகத் தெரிகிறது.
மற்ற ஆன்மீக வியாபாரிகளோடு ஒப்பிடுகையில் தன்னிடம் உள்ள குறையான வசீகரமான பேச்சு இல்லாதததை வேறு வகையில் சரி செய்தார் ஜக்கி. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று சொன்ன உலகின் மூத்த தத்துவ ஞானிக்கு நேர் முரணாக “அத்தனைக்கும் ஆசைப்படு” என்ற வாதத்தை முன்வைத்தார். வழக்கமான ஆன்மீக குருக்கள் ஒரு நீண்ட அங்கியைப் போட்டுக் கொண்டு அருள் வாக்கு கொடுப்பதைப் பார்த்து பழக்கப்பட்ட மக்களுக்கு, ஜீன்ஸ் பேன்டும், கூலிங் கிளாஸும் அணிந்து ஹம்மர் காரிலும், ஹோண்டா பைக்கிலும் வலம் வந்து கொண்டு, தத்துவமும் அருள்வாக்கும் அளிக்கும் சாமியாரைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது.
இந்தத் தொடர் ஜெகதீஷ் என்கிற ஜக்கி வாசுதவ் என்கிற நபரை சத்குருவாக மாற்றியது. ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் அதிருஷ்டக் கல் விற்கும் நபர் எப்படி பின்னாளில் கோடீஸ்வரராகிறாரோ அதே போல, ஜக்கியும் கோடீஸ்வர சாமியாராக பணக்காரர்கள் க்ளப்பில் இடம்பிடித்தார். ஜக்கி எவ்வளவு பெரிய அப்பாடக்கர் என்பதை அவர்களே விளக்குகிறார்கள் பாருங்கள்.
“யோகியும் நம் காலத்தின் ஆழ்ந்த மெய்யறிவாளருமான சத்குரு அவர்கள் தொலைநோக்குடைய மனிதநேயரும் முதன்மையான ஆன்மீகத் தலைவரும் ஆவார். உள்ளார்ந்த அனுபவம் மற்றும் ஞானம் இவற்றில் ஊன்றி நிற்பது போல சாதாரண அன்றாட வாழ்வுசார் விஷயங்களிலும் ஈடுபாடு உடையவரான சத்குரு, அனைத்து மக்களதுமான உடல் மன ஆன்மீக நலத்துக்காக இடையறாது உழைப்பவர். சுயம் பற்றியதான ஆழ்ந்த ஞானத்திலிருந்து அவர் அடைந்த வாழ்வியல் இயங்கு முறைகள் குறித்த அறிவு, வாழ்வின் நுட்பமான பரிமாணங்களை ஆய்வதில் அவருக்கு வழிகாட்டுவதாயுள்ளது.
நீலநிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருக்கையில் எப்படி வசதியாக உணர்வாரோ, அப்படியே இடுப்பில் வெறும் துணியைக் கட்டியிருப்பினும் உணரக் கூடியவர். பிரம்மாண்ட இமயமலையில் வெறுங்காலில் நடப்பது, நெடுஞ்சாலையில் பி.எம்.டபிள்யூ மோட்டார் சைக்கிளில் விரைவது என ஒருவர் சந்திக்கக்கூடிய மிக வித்தியாசமான மெய்யறிவாளர் சத்குரு அவர்கள். வெற்று வழக்கங்கள் சடங்குகள் இவற்றிலிருந்து பெரிதும் விலகி நிற்கும் சுய மாற்றத்துக்கான சத்குரு அவர்களின் அறிவியல் செயல் முறைகள் நேரடியானவை, சக்தி மிக்கவை. எந்தக் குறிப்பிட்ட பாரம்பரியத்தையும் சார்ந்திராமல் சமகால வாழ்வுக்கு உகந்தவற்றை யோக முறைகளிலிருந்து பெற்று ஒருங்கிணைத்து வழங்குகிறார் சத்குரு அவர்கள்.
உலகின் முக்கியமானவையாக விளங்கும் சர்வதேச மன்றங்கள் சிலவற்றில் உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் சத்குரு. 2007ம் ஆண்டு உலகப் பொருளாதார மன்றத்தின் நான்கு குழுக்களில் பங்குபெற்று அரசியல் விஷயங்கள், பொருளாதார முன்னேற்றம் முதல் கல்வி, சுற்றுச்சூழல் வரை பல பிரச்சினைகள் குறித்துப் பேசினார். 2006ல் உலகப் பொருளாதார மாநாடு, ஸ்வீடனில் நடந்த தால்பெர்க் மாநாடு, ஆஸ்திரேலியாவில் நடந்த தலைவர்களுக்கான மாநாடு ஆகியவற்றில் உரையாற்றினார். ஐக்கிய நாடுகள் சபையின் புத்தாயிரத்தாண்டு அமைதிக்குழு மற்றும் உலக சமாதான அமைப்பு இவற்றிலும் பிரதிநிதியாக இருந்து செயல்பட்டிருக்கிறார்.
சத்குரு அவர்களின் தொலைநோக்கும் நவீன சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் மீதான புரிதலும் பிபிசி, ப்ளூம்பெர்க், சிஎன்பிசி, சிஎன்என் மற்றும் நியூஸ்வீக் இன்டர்நேஷனல் ஆகிய தொலைக்காட்சிகளில் அவரது நேர்காணல்கள் வெளியாகக் காரணமாக அமைந்திருக்கின்றன. அவரது சிந்தனைகள் இந்தியாவின் முன்னணி தேசிய நாளேடுகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. 'சத்சங்கங்கள்' எனப்படும் அவரது கூட்டு தியானங்களுக்கு 3,00,000க்கும் குறையாமல் மக்கள் பங்கேற்கும் அளவுக்கு பிரபலமானவராக சத்குரு விளங்குகிறார். பழமையிலிருந்து மிகப் புதுமை வரையிலான விஷயங்களின் ஊடே தடையற்றுப் பயணிக்கும் சத்குரு அவர்கள் அறிந்தவற்றுக்கும் அறியாதவற்றுக்குமிடையே பாலமாக நின்று, தம்மைச் சந்திப்பவர்கள் வாழ்வின் ஆழ்ந்த பரிமாணங்களை ஆய்ந்தறியவும் அனுபவிக்கவும் உதவுகிறார்.”
சத்குருவைப் பற்றிய இந்த அறிமுக உரையைப் படிப்பவர்களுக்கு, இவர் கடவுளின் அவதாரம் என்றே தோன்றும். ஆனால் இந்த சத்குரு, ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி. கருணாநிதியையே விஞ்சும் அளவுக்கான ஒரு சிறந்த அரசியல்வாதி.
ஆனந்த விகடன் தொடருக்குப் பிறகு, இவரின் மதிப்பு தங்கத்தை விட பல மடங்கு கூடுகிறது. ஆனந்த விகடன் போன்ற இதழ்களுக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பும் மரியாதையும், ஜக்கிவாசுதேவின் ஆன்மிக வியாபாரத்தை, பல மடங்கு உயர்த்தின. இவ்வாறு வளர்ந்த அந்த வியாபாரத்தின் ஒரு பகுதிதான் இந்தியா முழுக்க, குறிப்பாக தமிழகமெங்கும் நடத்தப்படும் ஈஷா யோகா தியான வகுப்புகள். கடந்த மாதம் இப்படியான ஒரு தியான வகுப்புக்கு நண்பரின் வற்புறுத்துதலால் செல்ல நேர்ந்தது.
இவர்கள் சொல்லித் தரும் யோகா பயிற்சிகள், உண்மையிலேயே உடலுக்கு நன்மை பயப்பவை. ஆனால் வெறும் யோகப்பயிற்சிகளை மட்டும் சொல்லித்தந்தால், ஜக்கியின் சாம்ராஜ்யம் இப்படி விரிவடைந்திருக்காது. முதல் இரண்டு நாட்கள் பயிற்சியைச் சொல்லித் தந்து விட்டு, மூன்றாம் நாள் முக்கிய யோகப்பயிற்சி செய்வதற்கான பூஜை என்று தொடங்குவார்கள். அந்த பூஜையின் போது, ஜக்கி வாசுதேவின் பெரிய படத்தை வைத்து, அரை மணி நேரம் பூஜை செய்வார்கள். இந்த இடத்திலிருந்துதான் தொடங்குகிறது மூளைச்சலவை. இதற்குப் பிறகு, உருத்திராட்ச மாலை அணிவதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன என்று சொல்லி விட்டு, இந்த உருத்திராட்ச மாலைகள் வெளியில் கிடைக்காது என்று சொல்லுவார்கள். வகுப்பு முடிந்ததும் பார்த்தால் 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விலையிருக்கும் உருத்திராட்ச மாலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். அதற்கு அடுத்தபடியாக வகுப்பு முடிந்ததும் சத்துமாவுக் கஞ்சி தயாரித்து அருந்துவதற்கு தருவார்கள். தரும்போதே, இந்த சத்துமாவு ஈஷா மையத்தால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளது என்று கூறுவார்கள். நான்கு நாட்கள் வகுப்பு முடித்தவர்கள் உங்களின் அனுபவங்களைக் கூறுங்கள் என்று பேசச் சொல்லுவார்கள். ஏற்கனவே வீ கேன் நிறுவனத்தின் மல்டி லெவல் மார்க்கெடிங் நடந்தது அல்லவா… அதே போல வகுப்பில் வந்தவர்களும் பேசுவார்கள். நான்கு நாட்கள் யோகா பயிற்சி செய்து முடித்ததும், எனக்கு உலகமே புதிதாக தெரிகிறது….. அனைவர் மீதும் அன்பு செலுத்துகிறேன்.. சிகரெட் பிடிப்பதை குறைத்திருக்கிறேன்…. மனைவியோடு சண்டை போடுவதில்லை என்று கூறுவார்கள். அப்படியெல்லாம் எதுவும் நமக்குத் தோன்றாவிட்டாலும், இத்தனை பேர் சொல்லும்போது, நமக்கு எதுவும் தோன்றவில்லை என்று எப்படி சொல்லுவது என்று யோசித்துக் கொண்டு, நாமும் “எனக்கு நான்கு நாட்களாக… உலகமே பளிச்சென்று நன்றாக தெரிகிறது..” என்று ஏதாவது உளறி விட்டு வருவோம்.
தற்போது இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள், இதற்கான அடுத்த கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளுங்கள். அதற்காக பதிவு செய்பவர்கள் பெயரை கொடுக்கலாம் என்று கூறுவார்கள். ஈஷா மையம், பல்வேறு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்கிறது என்று கூறுவார்கள். இலவச ஆம்புலன்ஸ் சேவைகள், இலவச மருத்துவமனைகள் போன்றவற்றை சத்குரு செய்து வருகிறார் என்பார்கள். இதற்கான நன்கொடைகளை நீங்கள் வழங்கினால், மேலும் பல்வேறு ஏழைகள் பயன்பெறுவார்கள், அவர்களுக்கு சத்குருவால் மேலும் பல சேவைகளைச் செய்ய முடியும் என்று கூறுவார்கள்…. யோகா வகுப்புக்கு வந்த அடிமைகளுக்குத்தான் உலகமே புதிதாகத் தெரிகிறதே… முதலில் தங்களை வாலண்டியராகப் பதிவு செய்து விட்டு, ஒரு பராரிக் குழந்தையை சத்குரு கட்டிப்பிடிக்கும் வீடியோவை பார்த்து விட்டு அந்தக் குழந்தைக்கு சத்குரு மூலமாக உதவலாம் என்று உடனே செக் எழுதித் தருவார்கள். வகுப்பின் இறுதியில், நீங்கள் வாலண்டியராக சேர வேண்டும், இந்த யோகப்பயிற்சியின் பலன்களை உலகெங்கும் எடுத்துச் செல்ல சத்குருவுக்கு உதவுங்கள், என்று மூளைக்குள் அடிமைத்தனத்தையும், போதையையும் விதைப்பார்கள். இந்த போதைக்கு அடிமையானவர்களின் வாழ்வு அதோகதிதான்..
ஏழைக் குழந்தைகளுக்காக உங்களின் ஒரு நாள் உணவை தியாகம் செய்யுங்கள் என்று கூறுகிறார் சத்குரு. நீங்கள் ஒரு நாள் உணவைத் தியாகம் செய்வதால் வரும் தொகையை அப்படியே ஈஷா மையத்துக்கு நன்கொடையாக வழங்கினீர்கள் என்றால், அதனால் மேலும் பல ஏழைகளுக்கு சத்குரு உதவுவார் என்று அதே வகுப்பின் இறுதியில் உங்களுக்கு ஓதப்படும்.
உங்களை ஒரு நாள் உணவைத் தியாகம் செய்து நன்கொடை தாருங்கள் என்று வற்புறுத்தும் சத்குரு வைத்திருக்கும் ஹம்மர் வாகனத்தின் விலை என்ன தெரியுமா ? 40 லட்சம். சத்குரு சொந்தமாக வைத்திருக்கும் R22 வகை ஹெலிகாப்டரின் விலை என்ன தெரியுமா ? 14 கோடி. இந்த ஹெலிகாப்டருக்கான தேவை என்ன என்பதை சத்குருவே விளக்குகிறார்.
“தென்னிந்தியாவில் ஈஷா யோகா பல மடங்கு வளர்ந்து விட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 20 மடங்கு வளர்ந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சிக்கல் எனது நேரக்குறைபாடு. நேரக்குறைபாடு பெரிய சிக்கலாகி விட்டது. இதை நான் ஆராய்ந்தபோது நான் சாலை வழியாக பயணிப்பதில்தான் அதிக நேரத்தை செலவிடுகிறேன் என்பதை உணர்ந்தேன்.
இன்று ஈஷாவுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பில், இந்தியாவில் உள்ள அனைத்துக் கதவுகளையும் நமக்காக திறந்திருக்கிறது. ஒரு ஊருக்கு நான் வருகிறேன் என்றால் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஆனந்த அலை நிகழ்ச்சியின் போது சென்னையில் மட்டும் ஒரு லட்சம் பேர் கூடினார்கள். மற்ற ஊர்களில் தலா 30 ஆயிரம் பேர் கூடினார்கள். நான் அவ்வாறு கூடியவர்களுக்கு ஒரு சவால் விட்டேன். ஈஷாவின் இன்னர் இன்ஜினியரிங் நிகழ்ச்சிக்கு 10 ஆயிரம் பேரை எந்த ஊரில் பதிவு செய்கிறீர்களோ, அந்த ஊருக்கு நானே நேரில் வருவேன். சிறிய ஊர்களில் 5 ஆயிரம் பேரை பதிவு செய்யுங்கள் என்று கூறினேன். இவர்களுக்குள் போட்டி உருவானது. ஒருவர் நான் 5 ஆயிரம் பதிவு செய்தேன் என்றார். மற்றொருவர் நான் 8 ஆயிரம் பேரை பதிவு செய்துள்ளேன் அதனால் எனது ஊருக்குத்தான் வர வேண்டும் என்றார்.
இப்படி பல ஊர்களிலும் என்னை வரவைப்பதற்கு கடுமையான முயற்சி நடப்பதால் ஒரு முடிவுக்கு வந்தேன். அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் ஈஷா பயிற்சி எடுக்காத நபரே தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். அதனால் ஹெலிகாப்டர் ஓட்டக் கற்றுக் கொள்வது என்று முடிவு செய்தேன்” என்று கூறுகிறார் ஜக்கி. இணைப்பு. இந்த ஹெலிகாப்டரை மெயின்டெயின் செய்ய ஆண்டுதோறும் தேவைப்படும் தொகை 15 லட்சம்.
சரி… சத்குரு எப்படிப்பட்ட நபர் என்பதை புரிந்திருப்பீர்கள். ஏமாந்தவனிடம் ஏமாற்றிப் பிழைப்பது உலகில் பலர் ஈடுபடும் மோசடிச் செயல்தான். சத்குருவும், தன்னிடம் ஏமாறுபவர்களிடம் வசூல் செய்து சம்பாதிக்கிறார். இது ஏமாற்றுபவனுக்கும், ஏமாறுபவனுக்குமான பிரச்சினை. இதைக் கூட மன்னித்து விடலாம்…. ஆனால், இயற்கையை அழிக்கும் சத்குருவை எப்படி மன்னிப்பது ? சத்குரு எப்படி இயற்கையை அழிக்கிறார் என்பதைப் பார்க்கும் முன்… சத்குரு நாட்டில் பசுமையை வளர்ப்பதற்கு என்னென்ன செய்திருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
“இயற்கையைப் பாதுகாப்பதில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டிய, அதைப் பற்றி குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய பெரியவர்களுக்கே எடுத்துக் காட்டாக விளங்குகிறார்கள் இளவரசனைப் போன்ற பள்ளி செல்லும் பல சிறார்கள். இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் செயல்திட்டமான பசுமைப் பள்ளி இயக்கம்.
சத்குரு அவர்களின் வழிகாட்டுதலோடு துவங்கப்பட்டிருக்கும் இந்த பசுமைப் பள்ளி இயக்கம், பள்ளிக் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை மரக்கன்றுகளை உற்பத்தி செய்வது மற்றும் மரம் நடுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.”
இதற்கு அடுத்த பகுதிதான் சிறப்பு.
“மரம் வளர்ப்பதற்கு எனக்கு அதற்குப் போதுமான நேரம் இல்லையே, அதற்கான சரியான சூழ்நிலை இல்லையே” என்று நினைப்பவர்கள் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் மூலமாக உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
மேலும் விவரங்களுக்கு: ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் –http://www.giveisha.org/pgh”
50 ரூபாய் செலுத்தினீர்கள் என்றால், உங்கள் பெயரில் ஒரு மரக்கன்று நடப்படுமாம். அதன் மூலம் பசுமையை வளர்க்கிறார்களாம். இப்படி சத்குரு நடத்திய இந்த பசுமை இயக்கம் மூலமாக ஒரே நாளில் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டதற்காக, மத்திய அரசின் இந்திரா காந்தி விருது சத்குருவுக்கு வழங்கப்பட்டது.
இப்படியெல்லாம் சத்குரு இயற்கை ஆர்வலாக இருக்கிறாரே என்று மனமகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள். அவசரப்படாதீர்கள். மீதம் உள்ள கட்டுரையைப் படித்தால், சத்குரு, கோட்டா சீனிவாசராவ் நடிக்கும் கேரக்டர்களில் உள்ளதைவிட மிக மோசமான வில்லன் என்பது புரியும்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில், கோவை, தொண்டாமுதூர் பஞ்சாயத்தில் உள்ள இக்கரை பொலுவாம்பட்டி கிராமத்தில் தனது ஆசிரமத்தை தொடங்குகிறார் ஜக்கி. அந்த கிராமம் ஒரு அடர்ந்த வனப்பகுதி. வனப்பகுதிக்கு மிக மிக அருகாமையில் அமைந்துள்ள அந்த கிராமத்தில் விவசாயம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் தன் கடையை விரித்த ஜக்கி, மெல்ல மெல்ல, அவ்விடத்தில் இருந்த விவசாய நிலங்களை விலைக்கு வாங்குகிறார். இப்படி வாங்கிய நிலத்தில் 26.11.1999 அன்று தியான லிங்கம் என்ற ஒரு லிங்கத்தை நிறுவுகிறார்.
தொடக்கத்தில் தான் ஒரு ஆன்மீக குருவாக உருவாகுவோம் என்பதை அறியாத ஜக்கி லிங்க சிலையை வைத்து, அதன் மூலம் வசூல் வேட்டையில் இறங்கலாம் என்ற அடிப்படையிலேயே தொடங்குகிறார்.
இந்த லிங்க விவகாரத்திலும் ஜக்கி தான் ஒரு மோடிப் பேர்விழி என்பதை வெளிப்படுத்துகிறார். ஈஷா மையத்தின் இணையதளத்தில் இப்படி இருக்கிறது
The entire structure is a vision of Sadhguru Jaggi Vasudev. The entire design was conceived by Sadhguru and executed by Bhramhachari engineers with the help of about 300 local unskilled labourers. இணைப்பு
அதாவது, தியானலிங்கத்தின் மொத்த உருவாக்கமும் ஜக்கி வாசுதேவின் எண்ணத்தில் உதித்தவை. மொத்த வடிவத்தையும் சத்குரு உருவாக்கினார். பிரம்மச்சாரி பொறியாளர்களின் உதவியோடும், அப்பகுதி மக்களில் 300 வேலையாட்களின் துணையோடும் அந்தத் திட்டத்தை செயல்படுத்தினார் ஜக்கி என்று கூறுகிறது ஈஷா.
ஆனால் இந்த லிங்க கோயிலுக்கான வரைபடம், திட்டம், செயல்படுத்துதல், கட்டுமானம் என்று அனைத்தையும் செய்தது, பாண்டிச்சேரியில் உள்ள ஆரோவில் எர்த் இன்ஸ்ட்டிடியூட். இணைப்பு. இப்படி ஒரு சாதாரண கட்டுமான வேலைகளில் கூட, பொய்யுரைக்கும் சத்குருவின் உண்மை முகத்தை புரிந்து கொள்ளுங்கள்.
ஜக்கி வாசுதேவ் பேசுகையில், தன்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவராகக் காட்டிக் கொள்வார். கடவுளைப் பற்றிக் குறிப்பிடுகையில், “உங்கள் கடவுள்” இப்படிச் சொல்லுகிறார் என்றுதான் குறிப்பிடுவார். ஆனால் அவர் கட்டியது லிங்கம். லிங்கம் என்றால் என்ன என்பது விபரமறிந்தவர்களுக்குப் புரியும். அது சிவபெருமானின் சின்னம். லிங்க சிலையைக் கட்டி விட்டு, அது மதம் சார்ந்ததல்ல என்று கூறுவது ஜக்கியின் மற்றொரு மோசடி. தற்போது தஞ்சை சிவன் கோயிலில் இருப்பது போலவே வாசலில் ஒரு நந்தி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
மலைத்தளப் பாதுகாப்புக் குழு (Hill Area Conservation Authority) என்று ஒரு குழுவை தமிழக அரசு 1990ம் ஆண்டு உருவாக்குகிறது. இந்தக் குழுவில் வனத்துறை அதிகாரிகள், பஞ்சாயத்து அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட கிராமங்களில் எவ்விதமான கட்டுமானம் செய்வதாக இருந்தாலும், இந்தக் குழுவின் அனுமதி பெறாமல் செய்ய முடியாது. இந்தக் குழுவின் அனுமதி பெறுவதும் எளிதான காரியம் அல்ல. ஒரு சிறிய கட்டிடம் கட்டுவதாக இருந்தால் கூட, இந்தக் குழுவிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் குழுவின் உறுப்பினராக உள்ள, மாவட்ட ஆட்சியர், கட்டிடம் கட்டப்படும் பகுதியை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். வனத்துறை அதிகாரியும் இதே போல நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். அந்த கிராமம் அமைந்துள்ள பஞ்சாயத்து அமைப்பின் கூட்டத்தில் இதற்கு அனுமதி அளிக்கும் தீர்மானம் இயற்றப்பட வேண்டும். இப்படி அதிகாரிகள் அளிக்கும் அறிக்கைகள், மலைத்தளப் பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில் வைக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்படும். இதற்குப் பிறகே கட்டுமானப் பணிகளையே தொடங்க வேண்டும்.
1994ல் தன் மோசடி வேலைகளைத் தொடங்கிய ஜக்கி வாசுதேவ், எந்த அனுமதியும் பெறாமல், தனது கட்டுமானப் பணிகளைத் தொடங்குகிறார். பணம் சேரச் சேர, அந்த லிங்கக் கோயிலைச் சுற்றி, பல்வேறு கட்டிடங்களை எழுப்புகிறார். அப்போது இருந்த வனத்துறை அதிகாரிகளோ, மற்ற அதிகாரிகளோ எவ்விதமான கேள்வியும் எழுப்பவில்லை.
நாளாக நாளாக சத்குருவின் அரசியல் தொடர்புகள் வளர்ந்து கொண்டே போகிறது. 2006ல் திமுக ஆட்சி வந்ததும், சத்குருவுக்கு சுக்கிர திசை. திமுகவின் முக்கியக் கூட்டணிக் கட்சித் தலைவரான தொல் திருமாவளவன், சத்குருவின் யோகா வகுப்பில் சேர்கிறார். ஒரு கைதேர்ந்த பிசினெஸ் மேனான சத்குரு, திருமாவளவன் சத்குருவின் புகழைப் பாடுவதை வீடியோவாக தொகுத்து விஜய் டிவியில் வெளியிடுகிறார். ஆனந்த விகடன் தொடர் சத்குருவின் வளர்ச்சிக்கு உதவியது போலவே, இந்த விஜய் டிவி நிகழ்ச்சியும் சத்குருவுக்கு பெரிய அளவில் கை கொடுக்கிறது.
இந்தச் சூழலில்தான், நக்கீரன் காமராஜ் சத்குருவிடம் யோகா பயிற்சி எடுக்கிறார். சத்குருவிடம் யோகா பயிற்சி எடுத்த காமராஜ், ஏறக்குறைய சத்குருவின் அடிமையாகவே மாறிப்போகிறார். சத்குருவையும் கருணாநிதியையும் சந்திக்க வைக்கிறார் காமராஜ். அப்படி சத்குருவும் கருணாநிதியும் சந்தித்ததின் உடனடி விளைவு, அத்தனை நாள் காட்டுப்பகுதிக்குள் ஒற்றையடிப் பாதையாக இருந்த சாலை, தார்ச்சாலையாக மாறுகிறது. ஜக்கியின் ஆசிரமத்துக்கு தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. வாகன நடமாட்டத்துக்கு தடை இருந்த வனப்பகுதிக்குள், சர்வ சாதாரணமாக கார்கள் நுழைகின்றன. எவ்விதமான வாகனம் நுழைவதாக இருந்தாலும், கட்டணம் செலுத்திய பின்னரே வனப்பகுதிக்குள் நுழையவேண்டும் என்று இருந்த விதி கருணாநிதியால் விலக்கப்படுகிறது.
அதற்கென வெளியிடப்பட்ட அரசாணையில் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“எனவே வனச்சாலைகளைப் பயன்படுத்த உரிமக்கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்தால் அவைகளைப் பெரும்பாலும் பயன்படுத்துகின்ற விவசாயிகள், பழங்குடி சமூகத்தினர், வனங்களில் வாழ்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் போன்றவர்களுக்கு பெருமளவில் நன்மை பயக்கும் என்பதால் வனச்சாலைகளை உபயோகிக்க வாகன உரிமையாளர்களிடமிருந்து உரிமக் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்யலாம் என்று முடிவு செய்து அவ்வாறே ஆணையிடப்படுகிறது.”
ஜக்கிக்காக வெளியிடப்பட்ட இந்த அரசாணையால், தமிழகம் முழுக்க அரசுக்கு வரவேண்டிய வருமானம் ரத்து செய்யப்பட்டள்ளது.
2008ல் கருணாநிதியின் தொடர்பு கிடைத்த பிறகு ஜக்கி தனது சாம்ராஜ்யத்தை பல மடங்கு விரிவுபடுத்துகிறார். அது வரை, யோசித்துக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடங்கள், எவ்விதமான தயக்கமும் இன்றி, சகட்டுமேனிக்கு கட்டப்படுகின்றன.
வனத்துறையினரின் ஆய்வறிக்கையின் படி, 1994 முதல் 2005 வரையிலான 9 ஆண்டு காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களின் மொத்த பரப்பளவு 37424.32 சதுர மீட்டர். 2006 முதல் 2011 வரையிலான 5 ஆண்டுகளில் கட்டப்பட்ட கட்டிடங்களின் மொத்த பரப்பளவு 55944.82.
கருணாநிதி ஆட்சியில் காமராஜ் இருந்த திமிரில், தெனாவட்டாக இருந்த ஜக்கிக்கு, 2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் கிலி பிடிக்கிறது. அதுவும், ஜெயலலிதா வந்ததும், யானைகளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தியதையும், ஜெயலலிதாவுக்கு விலங்குகள் மீதான பாசத்தையும் தெரிந்த ஜக்கி வாசுதேவுக்கு, இனியும் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டினால், தனது ஆன்மீக வியாபாரத்துக்கு சிக்கல் என்பதால், 06.07.2011 ஜுலை அன்று வனத்துறையிடம் கட்டிடம் கட்ட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கிறார்.
ஈஷா மையத்தின் கடிதத்தில், “நிலையில் உள்ள கட்டிடங்களுக்கும், உத்தேசிக்கப்பட்ட கட்டிடங்களும் முறையாக அனுமதி பெற, நகர ஊரமைப்புத் துறை மூலம் மலையிடப்பாதுகாப்புக் குழு கூட்ட நிகழ்வுக்கு சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. எனவே துறை சார்ந்த தடையின்மை சான்றிதழ் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும் வழங்கப்படும் நிபந்தனைகளையும் செயல்படுத்த உள்ளோம் என இதன் மூலம் உறுதி அளிக்கிறோம்”
ஈஷா மையத்தின் விண்ணப்பத்தை ஆய்வு செய்த, வனச்சரக அலுவலர் 19.01.2012 அன்று அறிக்கை அளிக்கிறார். அவர் தனது அறிக்கையில், “ஈஷா அறக்கட்டளை அமைந்துள்ள புலங்கள் சாடிவயலிலிருந்து தாணிக்கண்டிக்கு யானைகள் செல்லும் முக்கியமான வழித்தடத்தில் அமைந்துள்ளது. இதனால் யானைகள் செம்மேடு நரசீபுரம் வரையிலான பகுதியில் அடிக்கடி காட்டை விட்டு வெளியே வந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
மேற்படி நிலங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்ட கட்டிடங்களில் அமைந்துள்ள யோகா மையத்தில் லட்சக்கணக்கான மக்கள் வனச்சாலையைப் பயன்படுத்தி வந்து செல்வதால், வனத்திற்கும், வன விலங்குகளுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் நூற்றுக்கணக்கான பணியாட்கள், கனரக வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி புதிய புதிய கட்டிட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இதன் மூலம் வனத்திற்கும் வன உயிரினங்களுக்கும் மற்றும் யானை வழித்தடத்திற்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.” என்று கூறி, இதனால் ஈஷா மையத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று எழுதுகிறார்.
அறிக்கை அளித்ததோடு அல்லாமல், உடனடியாக பிப்ரவரி 2012ல், கட்டுமானப் பணிகளை உடனே நிறுத்துமாறு ஈஷா மையத்திற்கு அறிவிப்பு அளிக்கிறார். ஒரு அரசாங்கத்தையே நடத்தி வரும் ஜக்கி வாசுதேவ் இதற்கெல்லாம் மசிவாரா என்ன…… போங்கடா………………………. என்று தனது கட்டுமானப் பணிகளை நிறுத்தாமல் தொடர்கிறார்.
ஆகஸ்ட் 2012ல், திருநாவுக்கரசு என்ற மாவட்ட வன அலுவலர், விரிவான ஆய்வறிக்கையை, வனத்துறைத் தலைவருக்கு அனுப்புகிறார். அவர் தனது அறிக்கையில் “வறட்சியாக காணப்படும் கோடை மாதங்களான மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி திருவிழாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 2 லட்சத்திற்கும் மேல் வருகை புரியும் பக்தர்கள் பயன்படுத்தும் வாகனத்தின் இரைச்சல், திருவிழாவிற்கு பயன்படுத்தும் ஒளி / ஒலி அமைப்பினால் ஈஷா யோகா மையத்திற்கு அருகாமையில் உள்ள போலாம்பட்டி ப்ளாக் 2 ஒதுக்கு வனத்தினுள் வாழும் யானைகளின் இயல்பு வாழ்க்கைக்கு அதிக இடையூறு ஏற்பட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி அதிக எண்ணிக்கையில் வரும் பக்தர்கள் கூட்டத்தை தாக்கத் தொடங்கினால் யானைகளினால் ஏற்படும் பெரிய சேதத்தை குறைந்த எண்ணிக்கையில் உள்ள வனப்பணியாளர்களால் தடுப்பது என்பது இயலாத காரியமாகும். மேலும் மேற்படி புலங்களில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது” இதனால் ஈஷா மையத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று அறிக்கை அளிக்கிறார்.
நவம்பர் 2012ல் நகரமைப்புத் துறை, ஈஷா மையத்திற்கு உடனடியாக கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு நோட்டீஸ் அனுப்புகிறது. அந்த நோட்டீஸுக்கு பதிலும் இல்லை, கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை. இதனால், சட்டவிரோதக் கட்டிடங்களை இடிக்க ஆணையிடும், மற்றொரு நோட்டீஸ் டிசம்பர் 2012ல் அனுப்பப்படுகிறது. ஆனால், நோட்டீஸுக்கு பதில் சொல்லாத ஈஷா மையம், கட்டிடம் கட்ட அனுமதி வேண்டி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறார்கள். எந்த அளவுக்கு திமிரும், இறுமாப்பும் இருந்தால், அனுமதி கேட்டு அளித்த விண்ணப்பத்தைக் கூட திரும்பப் பெறுவார்கள் ? உலக சமாதானம் பேசும் ஜக்கியின் யோக்கியதையைப் பார்த்தீர்களா ?
ஈஷா மையத்திற்கு சிறுவாணி ஆற்றின் ஊற்று அருகிலேயே வனப்பகுதி வழியாக நாள் ஒன்றுக்கு 5000 லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. கட்டிட அனுமதி பெறாமல் உங்களால் தண்ணீர் இணைப்பு பெற முடியுமா ? கோவையில் மொத்த மின்வெட்டின் நேரம் 6 மணி நேரம். ஆனால் ஈஷா மையத்திற்கு 24 மணிநேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்கப்படுகிறது. இணைப்பு.
கடந்த வாரம் ஈஷா மையத்திற்கு சென்று என்னதான் நடக்கிறது என்று ஆய்வு மேற்கொண்டபோது, கண்ட காட்சிகள் கண்களில் கண்ணீரை வரவைத்தன தோழர்களே…. எந்த விதமான சட்ட விதிகளையும் மதிக்காமல், கனரக இயந்திரங்களின் உதவியோடு 24 மணி நேரமும் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டுள்ளன.
இது மட்டுமல்ல தோழர்களே…. ஈஷா மையம் அதிக அளவிலான கட்டுமானப்பணிகளை கட்டத் தொடங்கிய பிறகு, 2006 முதல் 2011 வரையிலான காலத்தில் மட்டும் 50 யானைகள் இறந்திருக்கின்றன. ஈஷா மையத்தின் வளர்சசியாலும், அது ஏற்படுத்தும் சுற்றுச் சூழல் மாசாலும், நிலப்பகுதிக்குள் நுழைந்த யானைகள் 2006 முதல் 2012 வரையிலான காலத்தில் மிதித்துக் கொன்ற மனிதர்களின் எண்ணிக்கை மட்டும் 57.
நெஞ்சு கொதிக்கிறதா இல்லையா….? ஈஷா மையத்திற்கு அருகே, பல ஆண்டுகள் பழமையான புளிய மரம் ஒன்று உள்ளது. அந்த புளியமரத்தை யானைக்கட்டி புளியமரம் என்று அழைக்கிறார்கள். ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்திற்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் உள்ளுர் பக்தர்களிடம் ஜக்கி, அந்த புளியமரம் தான் வைத்தது என்றும், அதற்கு சிறப்பு சக்தி உள்ளது என்றும் கூறுகிறார். இதை நம்பிய வெளிநாட்டினர் பலர், அந்த புளியமரத்துக்கு வந்து, மரத்தை நக்கிப் பார்க்கின்றனர். இந்த புளிய மரம், பல ஆண்டுகளுக்கு முன் அந்தப் பகுதியில் குடியிருந்த தம்பிய கவுண்டர் என்பவரால் வளர்க்கப்பட்டது. அந்த புளிய மரத்தில் ஒரு யானைக் குட்டியை கட்டி வளர்த்து வந்தார் தம்பியக் கவுண்டர். அவருக்குப் பின் அவர் மகன் நஞ்சப்ப கவுண்டர் அந்த யானையை வளர்க்கிறார். அவருக்குப் பின் அவருடைய மகன் சண்முக சுந்தரம் அந்த யானையை பராமரிக்க முடியாமல், பழனி கோவிலுக்கு தானமாகத் தருகிறார். இதை வைத்துத்தான் அந்த புளிய மரத்துக்கு யானைக்கட்டி புளியமரம் என்ற பெயர் வந்தது... ஜக்கி எப்படிப்பட்ட புளுகுமூட்டை என்பது இப்போது புரிகிறதா ?
ஈஷாவின் கட்டுமானப் பணிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் வாகனத்தில் பின்தொடர்ந்தபடியே இருந்தார். அவர் செக்யூரிட்டியிடம் சென்று சொன்னதும், செக்யூரிட்டி “சார்.. இங்கே புகைப்படம் எடுக்கக் கூடாது என்றார்… அவர் சொன்னதை காதிலேயே வாங்காமல் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததும் அவர் சென்று ஒரு சாமியாரை அழைத்து வந்தார். சாமியார், “அண்ணா… இங்க போட்டோ எடுக்கக் கூடாது அண்ணா” என்றார்… “ரோட்டிலிருந்து போட்டோ எடுக்க எனக்கு உரிமை இருக்கிறது அண்ணா” என்றதும், அண்ணாவையெல்லாம் விட்டு விட்டார்… “யாருங்க நீங்க எங்கேர்ந்து வர்றீங்க“ என்றார்…. அதெல்லாம் உன்னிடம் சொல்ல முடியாது… உங்கள் இடத்திற்குள் வந்தால் கேள்வி கேளுங்கள்.. இது சாலை… என்றதும்… “நீ இந்த எடத்த விட்டு எப்படிப் போறன்னு பாக்கறேன்“ என்றார். கேமராவில் மெமரி கார்டை எடுத்து ஒளித்து வைத்து விட்டு, அவர் சொன்ன இடத்திலேயே 15 நிமிடம் காத்திருந்த போதும் யாரும் அடிக்க வரவில்லை. வந்து அடித்தால், இதை வைத்து புகார் கொடுத்து, எப்ஐஆர் போட்டு, ஒரு சாமியாரையாவது உள்ளே வைக்கலாம் என்றால் எதிரில் சென்று நின்று கொண்டு, நம்மை போட்டோ எடுக்கிறார்கள்…. 15 நிமிடம் கழித்தும் யாருமே அடிக்க வரவில்லை என்பதால், அங்கிருந்து கிளம்ப நேர்ந்தது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த சுப்பையா என்பவர், 2001ம் ஆண்டு ஈஷா மையத்துக்கு தனது நிலத்தை ஒரு ஏக்கர் 2.5 லட்சம் என்ற விலைக்கு விற்கிறார். அவ்வாறு அவர் விற்பனை செய்கையில், அந்த நிலத்துக்கு செல்ல பாதையே இல்லாமல் இருக்கிறது. இதனால் அந்த நிலப்பத்திரத்திலேயே கூடுதலாக ஒரு 25 அடி நிலத்தை பாதைக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதாக கூறுகிறார். இது இப்படியே எவ்வித பிரச்சினையும் இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தனை அட்டூழியங்கள் செய்து வருகிறார்களே… இவர்களை ஏன் யாருமே தட்டிக் கேட்பதில்லை என்று அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, பத்திரிக்கையாளர்கள், அதிகாரிகள் என்று யார் வந்தாலும், அவர்களுக்கு கணிசமான தொகையைக் கொடுத்து வாயை அடைப்பதுதான் ஈஷா மையத்தின் வழக்கம் என்று கூறுகிறார்கள்.
மீண்டும் சென்னைக்கு திரும்பியதிலிருந்து நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் மொட்டையாக்கப்பட்ட அந்த வனப்பகுதியும், தாணிக்கண்டி பழங்குடி மக்களும், இறந்த யானைகளும், தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாக உறுத்திக் கொண்டே இருந்தனர்.
சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அனைத்துக் கட்டிடங்களையும், இடிக்க வேண்டும், மகாசிவராத்திரி விழாவைத் தடை செய்ய வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தோழர் வெற்றிச் செல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு வெள்ளியன்று தலைமை நீதிபதி அகர்வால் மற்றும் நீதிபதி பால் வசந்த குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. உடனடியாக வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தமிழக அரசு மற்றும் ஈஷா மையம் 2 வாரத்திற்குள் பதில் மனு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மகாசிவராத்திரி விழாவுக்கு இடைக்காலத் தடை கேட்டதற்கு, இறுதி நேரத்தில் வந்திருப்பதால், தடை விதிக்க முடியாது என்று கூறினர். நீங்கள் இது குறித்து கலெக்டரை ஏன் அணுகவில்லை என்றார் நீதிபதி பால் வசந்தகுமார்.
உடனே வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வெகுண்டெழுந்தார். நாங்கள் இறுதி நேரத்தில் வந்திருக்கிறோம் என்பது உண்மைதான். எங்களுக்கு இப்போதுதான் தகவல் தெரிந்தது, தெரிந்த உடனேயே நீதிமன்றத்தை அணுகி விட்டோம். நாங்கள் ஏன் கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும்… ? இது பொதுநல வழக்கு… இந்த விதிமீறல்களை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம்.
இறுதி நேரத்தில் வந்திருக்கிறோம் என்பதாலேயே சுற்றுச் சூழலை பாதிக்கும் இந்த விழாவை தங்கு தடையின்றி நடத்த அனுமதிக்க முடியுமா ? இவ்விழாவில் கடந்த ஆண்டு 2 லட்சம் பேர் பங்கெடுத்தனர். இந்த ஆண்டு 4 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கான வாகனங்கள் வனப்பகுதிக்குள் நுழையும்… மாலை 5.40 முதல் விடிய விடிய, ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி பஜனைகள் நடைபெறப் போகிறது… பல வாட்டுகள் சக்தி கொண்ட ஒளி விளக்குகள் பயன்படுத்தப்படப் போகின்றன… இதனால் காட்டு விலங்குகள் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகும் என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டாமா ? சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று அரசியல் அமைப்புச் சட்டம் சொல்கிறது. குடிமகனுக்கே அந்தக் கடமை இருக்கையில் நீதிமன்றம் என்ன விதிவிலக்கா ? நாங்கள் வெளிப்படையாக நாத்தீகர்கள் என்று அறிவித்தவர்கள். இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் வெற்றிச் செல்வனும் நாத்தீகரே… எங்களுக்கு யார் இந்த ஜக்கி என்பதைப் பற்றிக் கவலையில்லை…. எங்களது ஒரே கவலை சுற்றுச் சூழல் மட்டுமே… வனவிலங்குகளின் நலன் மட்டுமே” என்று கடும் அழுத்தத்தோடு தன் வாதத்தை வைத்தார்….. ….
நீதிபதிகளுக்கு ராதாகிருஷ்ணனின் வாதம், ஜக்கியால் பாதிக்கப்பட்ட யானையின் பிளிறலைப் போல இருந்திருக்க வேண்டும். மனுதாரர், கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து மனு கொடுக்கலாம். அந்த மனுவைப் பெற்ற அவர்கள், மனுதாரரின் கோரிக்கைக்கு இணங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு, மகாசிவராத்திரி விழாவால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆகியோருக்கு பேக்ஸ் மற்றும் பதிவு அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. ஞாயிறன்று, நடைபெறும் விழாவை வீடியோ எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை நீதிமன்ற உத்தரவையடுத்து பதறிய ஈஷா நிர்வாகம், கோவை பதிப்பின் அனைத்து செய்தித்தாள்களிலும், ஈஷா மையம் இயற்கைக்காக செய்த அத்தனை சேவைகளையும் விளம்பரப்படுத்தியிருந்தது. இந்த விளம்பரங்கள், ஈஷாவின் சாம்ராஜ்யம் ஆட்டம் காணத் தொடங்கியிருப்பதன் முதல் அறிகுறி. விழிப்புணர்வு அடைந்து, எதுவுமே தன்னை பாதிக்காத மோனநிலையில் இருக்கும் ஜெகதீஷ் என்கிற ஜக்கி வாசுதேவ் என்கிற சத்குரு சஞ்சலம் அடைந்துள்ளார் என்பதன் அறிகுறி இது. இந்த வழக்கு குறித்து செய்தி வந்ததும், தனது உயர்மட்டத் தொடர்புகள் அனைத்தையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார் ஜக்கி. எப்படியாவது இந்த வழக்கை முடித்து ஆசிரமத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவே நமது பெரிய வெற்றி….
அந்த வனத்தை மீட்டு விலங்குகளிடமும், பழங்குடியின மக்களிடமும் ஒப்படைக்கும் வரை தொடர்ந்து அயராது போராடுவோம் தோழர்களே… இந்த போலிச் சாமியார்களின் முகத்திரையைக் கிழிப்போம்.
அத்தனைக்கும் ஆசைப்படாதே ஜக்கி.... உனது ஆசையே உனக்கு வரப்போகும் துன்பத்துக்குக் காரணம்.

விதி மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் பட்டியல்
ஈஷா மையத்தின் எல்லைகள் அனைத்தும் மின்வேலி போட்டு தடுக்கப்பட்டள்ளன.
ஈஷா மையத்தின் பின்புறம், தாணிக்கண்டி என்கிற மலைவாழ் இனத்தவர் வாழும்
பகுதி உள்ளது. அந்த தாணிக்கண்டி கிராமம், அடர்ந்த காட்டின் நடுவே
அமைந்துள்ள பகுதி. தாணிக்கண்டி மலைவாழ் மக்கள், காட்டை தங்கள் தெய்வமாகப்
பார்க்கிறார்கள். அந்த விலங்குகளும், மரங்களும் அவர்களின் தோழனாக இதுநாள்
வரை இருந்து வந்தன. இன்று அவர்களின் வீடுகள் அமைந்துள்ள இடத்தில் இருந்த
வனம் மொட்டையடிக்கப்பட்டு பொட்டல் காடாக காட்சியளிக்கிறது. ஈஷா
மையத்திற்கு வெளியே வனப்பகுதியில் இருந்த இந்த மரங்கள், ஈஷா மையத்தினரால்
வெட்டப்பட்டுள்ளன. இந்த மரங்கள் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான
மரங்கள். வெட்டப்பட்ட மரங்களில் சந்தனமும் அடக்கம்…. 200 வருடக் காட்டை
அழித்து விட்டு, பசுமை இயக்கம் நடத்தும் இந்த மோசடிப் பேர்வழியை எப்படி
மன்னிப்பது… ?இது மட்டுமல்ல தோழர்களே…. ஈஷா மையம் அதிக அளவிலான கட்டுமானப்பணிகளை கட்டத் தொடங்கிய பிறகு, 2006 முதல் 2011 வரையிலான காலத்தில் மட்டும் 50 யானைகள் இறந்திருக்கின்றன. ஈஷா மையத்தின் வளர்சசியாலும், அது ஏற்படுத்தும் சுற்றுச் சூழல் மாசாலும், நிலப்பகுதிக்குள் நுழைந்த யானைகள் 2006 முதல் 2012 வரையிலான காலத்தில் மிதித்துக் கொன்ற மனிதர்களின் எண்ணிக்கை மட்டும் 57.
நெஞ்சு கொதிக்கிறதா இல்லையா….? ஈஷா மையத்திற்கு அருகே, பல ஆண்டுகள் பழமையான புளிய மரம் ஒன்று உள்ளது. அந்த புளியமரத்தை யானைக்கட்டி புளியமரம் என்று அழைக்கிறார்கள். ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்திற்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் உள்ளுர் பக்தர்களிடம் ஜக்கி, அந்த புளியமரம் தான் வைத்தது என்றும், அதற்கு சிறப்பு சக்தி உள்ளது என்றும் கூறுகிறார். இதை நம்பிய வெளிநாட்டினர் பலர், அந்த புளியமரத்துக்கு வந்து, மரத்தை நக்கிப் பார்க்கின்றனர். இந்த புளிய மரம், பல ஆண்டுகளுக்கு முன் அந்தப் பகுதியில் குடியிருந்த தம்பிய கவுண்டர் என்பவரால் வளர்க்கப்பட்டது. அந்த புளிய மரத்தில் ஒரு யானைக் குட்டியை கட்டி வளர்த்து வந்தார் தம்பியக் கவுண்டர். அவருக்குப் பின் அவர் மகன் நஞ்சப்ப கவுண்டர் அந்த யானையை வளர்க்கிறார். அவருக்குப் பின் அவருடைய மகன் சண்முக சுந்தரம் அந்த யானையை பராமரிக்க முடியாமல், பழனி கோவிலுக்கு தானமாகத் தருகிறார். இதை வைத்துத்தான் அந்த புளிய மரத்துக்கு யானைக்கட்டி புளியமரம் என்ற பெயர் வந்தது... ஜக்கி எப்படிப்பட்ட புளுகுமூட்டை என்பது இப்போது புரிகிறதா ?
யானைக்கட்டி புளியமரம்.
காட்டை மொட்டையடித்ததையும், யானைகளின் இறப்பையும் கேட்டதும் மனதில்
தோன்றியது என்ன தெரியுமா ? ஜக்கி வாசுதேவை அதே யானைகட்டி புளியமரத்தில்
ஜட்டியோடு ஒரு வாரத்திற்கு கட்டி வைக்க வேண்டும். அந்தப் பகுதியில்
காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகம். என்ன நடக்கும் என்பதை சொல்ல
வேண்டியதில்லை.ஈஷாவின் கட்டுமானப் பணிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் வாகனத்தில் பின்தொடர்ந்தபடியே இருந்தார். அவர் செக்யூரிட்டியிடம் சென்று சொன்னதும், செக்யூரிட்டி “சார்.. இங்கே புகைப்படம் எடுக்கக் கூடாது என்றார்… அவர் சொன்னதை காதிலேயே வாங்காமல் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததும் அவர் சென்று ஒரு சாமியாரை அழைத்து வந்தார். சாமியார், “அண்ணா… இங்க போட்டோ எடுக்கக் கூடாது அண்ணா” என்றார்… “ரோட்டிலிருந்து போட்டோ எடுக்க எனக்கு உரிமை இருக்கிறது அண்ணா” என்றதும், அண்ணாவையெல்லாம் விட்டு விட்டார்… “யாருங்க நீங்க எங்கேர்ந்து வர்றீங்க“ என்றார்…. அதெல்லாம் உன்னிடம் சொல்ல முடியாது… உங்கள் இடத்திற்குள் வந்தால் கேள்வி கேளுங்கள்.. இது சாலை… என்றதும்… “நீ இந்த எடத்த விட்டு எப்படிப் போறன்னு பாக்கறேன்“ என்றார். கேமராவில் மெமரி கார்டை எடுத்து ஒளித்து வைத்து விட்டு, அவர் சொன்ன இடத்திலேயே 15 நிமிடம் காத்திருந்த போதும் யாரும் அடிக்க வரவில்லை. வந்து அடித்தால், இதை வைத்து புகார் கொடுத்து, எப்ஐஆர் போட்டு, ஒரு சாமியாரையாவது உள்ளே வைக்கலாம் என்றால் எதிரில் சென்று நின்று கொண்டு, நம்மை போட்டோ எடுக்கிறார்கள்…. 15 நிமிடம் கழித்தும் யாருமே அடிக்க வரவில்லை என்பதால், அங்கிருந்து கிளம்ப நேர்ந்தது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த சுப்பையா என்பவர், 2001ம் ஆண்டு ஈஷா மையத்துக்கு தனது நிலத்தை ஒரு ஏக்கர் 2.5 லட்சம் என்ற விலைக்கு விற்கிறார். அவ்வாறு அவர் விற்பனை செய்கையில், அந்த நிலத்துக்கு செல்ல பாதையே இல்லாமல் இருக்கிறது. இதனால் அந்த நிலப்பத்திரத்திலேயே கூடுதலாக ஒரு 25 அடி நிலத்தை பாதைக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதாக கூறுகிறார். இது இப்படியே எவ்வித பிரச்சினையும் இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது.
நிலத்தை விற்பனை செய்த சுப்பையா
இந்த பாதைக்கு அருகே, ஒருவர் அசைவ ஹோட்டல் நடத்திக் கொண்டிருக்கிறார்.
அந்த ஹோட்டல் இருக்கும் இடத்தை தங்களிடம் கொடுக்குமாறு ஈஷா நிர்வாகத்தினர்
தொடர்ந்து வற்புறுத்துகின்றனர். ஹோட்டல் உரிமையாளர் கொடுக்க
மறுக்கிறார். அந்த ஹோட்டலுக்கு அருகே செல்லும் ஈஷாவுக்கு சொந்தமான
பாதையில், ஆசிரமத்தில் உள்ள கழிவு நீரை அகற்றும் குழாய்க்கு சம்ப்
அமைக்கிறார்கள். அந்த சம்ப்பை திறந்து வைக்கிறார்கள். கழிவு நீர் சம்ப்பை
திறந்து வைத்தால் ஹோட்டலில் யாராவது சாப்பிட முடியுமா ? ஹோட்டல்
உரிமையாளரே சம்ப்பை மூடி மீண்டும் ஹோட்டல் நடத்துகிறார். இதையடுத்து,
அந்த ஹோட்டலில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, காவல்நிலையத்தில் புகார்
கொடுக்கின்றனர் ஈஷா நிறுவனத்தினர். காவல்துறை ஹோட்டலை தலைகீழாக புரட்டிப்
போடுகிறது. ஹோட்டல் உரிமையாளர், இனி காலம் தள்ள முடியாது என்று விற்க
முடிவு செய்கிறார். அவரை விற்க விடாமல், அந்த ஓட்டலை கொங்குப் பேரவை
நடத்தி வருகிறது.
அந்த கழிவு நீர் சம்ப்
அடைக்கப்பட்ட பாதை
கொங்கு பேரவை பிடிவாதமாக நடத்தியதும், பாதைக்காக கொடுத்த 25அடி நிலத்தை
மடக்கி ஒரே நாளில் வேலி போடுகிறார்கள் ஈஷா நிறுவனத்தினர். வேலி போடும்
அன்று, ஆசிரமத்திலிருந்து 150 பேர்களை அழைத்து வந்து வேலி போட்டு
முடிக்கின்றனர்.20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தனை அட்டூழியங்கள் செய்து வருகிறார்களே… இவர்களை ஏன் யாருமே தட்டிக் கேட்பதில்லை என்று அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, பத்திரிக்கையாளர்கள், அதிகாரிகள் என்று யார் வந்தாலும், அவர்களுக்கு கணிசமான தொகையைக் கொடுத்து வாயை அடைப்பதுதான் ஈஷா மையத்தின் வழக்கம் என்று கூறுகிறார்கள்.
ஈஷா மடத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் கார்த்திகேயன்
ஒரு சாதாரண சாமியார், இப்படி எந்தச் சட்டத்தையும் மதிக்காமல்,
ரவுடித்தனம் செய்து கொண்டு, ஒரு ஊரையே வளைத்துப் போட்டு அட்டூழியம் செய்து
கொண்டிருக்கிறானே… ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்டால், சார்…
அரசாங்கமே சாமியார் கையிலதான் சார் இருக்கு… இப்போ பாருங்க அரசாங்கம்
கட்டிடம் கட்டாதேன்னு நோட்டீஸ் கொடுத்துருக்கு… ஆனா சாமியார் கட்டிடம்
கட்டுவதோடு இல்லாமல், சிவாரத்திரி விழா வேறு கொண்டாடுகிறார்… இந்த
விழாவுக்கு 4 லட்சம் மக்கள் வருவார்கள்.. குறைந்தது 1 லட்சம் வாகனங்கள்
வனப்பகுதிக்குள் வரும்… இது அரசாங்கத்துக்கு தெரியாதா ? அரசாங்கமே சாமியார்
கைக்குள்ள இருக்கும்போது நாங்க என்ன சார் பண்ண முடியும் என்றனர்.மீண்டும் சென்னைக்கு திரும்பியதிலிருந்து நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் மொட்டையாக்கப்பட்ட அந்த வனப்பகுதியும், தாணிக்கண்டி பழங்குடி மக்களும், இறந்த யானைகளும், தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாக உறுத்திக் கொண்டே இருந்தனர்.
சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அனைத்துக் கட்டிடங்களையும், இடிக்க வேண்டும், மகாசிவராத்திரி விழாவைத் தடை செய்ய வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தோழர் வெற்றிச் செல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு வெள்ளியன்று தலைமை நீதிபதி அகர்வால் மற்றும் நீதிபதி பால் வசந்த குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. உடனடியாக வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தமிழக அரசு மற்றும் ஈஷா மையம் 2 வாரத்திற்குள் பதில் மனு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மகாசிவராத்திரி விழாவுக்கு இடைக்காலத் தடை கேட்டதற்கு, இறுதி நேரத்தில் வந்திருப்பதால், தடை விதிக்க முடியாது என்று கூறினர். நீங்கள் இது குறித்து கலெக்டரை ஏன் அணுகவில்லை என்றார் நீதிபதி பால் வசந்தகுமார்.
உடனே வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வெகுண்டெழுந்தார். நாங்கள் இறுதி நேரத்தில் வந்திருக்கிறோம் என்பது உண்மைதான். எங்களுக்கு இப்போதுதான் தகவல் தெரிந்தது, தெரிந்த உடனேயே நீதிமன்றத்தை அணுகி விட்டோம். நாங்கள் ஏன் கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும்… ? இது பொதுநல வழக்கு… இந்த விதிமீறல்களை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம்.
இறுதி நேரத்தில் வந்திருக்கிறோம் என்பதாலேயே சுற்றுச் சூழலை பாதிக்கும் இந்த விழாவை தங்கு தடையின்றி நடத்த அனுமதிக்க முடியுமா ? இவ்விழாவில் கடந்த ஆண்டு 2 லட்சம் பேர் பங்கெடுத்தனர். இந்த ஆண்டு 4 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கான வாகனங்கள் வனப்பகுதிக்குள் நுழையும்… மாலை 5.40 முதல் விடிய விடிய, ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி பஜனைகள் நடைபெறப் போகிறது… பல வாட்டுகள் சக்தி கொண்ட ஒளி விளக்குகள் பயன்படுத்தப்படப் போகின்றன… இதனால் காட்டு விலங்குகள் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகும் என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டாமா ? சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று அரசியல் அமைப்புச் சட்டம் சொல்கிறது. குடிமகனுக்கே அந்தக் கடமை இருக்கையில் நீதிமன்றம் என்ன விதிவிலக்கா ? நாங்கள் வெளிப்படையாக நாத்தீகர்கள் என்று அறிவித்தவர்கள். இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் வெற்றிச் செல்வனும் நாத்தீகரே… எங்களுக்கு யார் இந்த ஜக்கி என்பதைப் பற்றிக் கவலையில்லை…. எங்களது ஒரே கவலை சுற்றுச் சூழல் மட்டுமே… வனவிலங்குகளின் நலன் மட்டுமே” என்று கடும் அழுத்தத்தோடு தன் வாதத்தை வைத்தார்….. ….
நீதிபதிகளுக்கு ராதாகிருஷ்ணனின் வாதம், ஜக்கியால் பாதிக்கப்பட்ட யானையின் பிளிறலைப் போல இருந்திருக்க வேண்டும். மனுதாரர், கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து மனு கொடுக்கலாம். அந்த மனுவைப் பெற்ற அவர்கள், மனுதாரரின் கோரிக்கைக்கு இணங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு, மகாசிவராத்திரி விழாவால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆகியோருக்கு பேக்ஸ் மற்றும் பதிவு அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. ஞாயிறன்று, நடைபெறும் விழாவை வீடியோ எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை நீதிமன்ற உத்தரவையடுத்து பதறிய ஈஷா நிர்வாகம், கோவை பதிப்பின் அனைத்து செய்தித்தாள்களிலும், ஈஷா மையம் இயற்கைக்காக செய்த அத்தனை சேவைகளையும் விளம்பரப்படுத்தியிருந்தது. இந்த விளம்பரங்கள், ஈஷாவின் சாம்ராஜ்யம் ஆட்டம் காணத் தொடங்கியிருப்பதன் முதல் அறிகுறி. விழிப்புணர்வு அடைந்து, எதுவுமே தன்னை பாதிக்காத மோனநிலையில் இருக்கும் ஜெகதீஷ் என்கிற ஜக்கி வாசுதேவ் என்கிற சத்குரு சஞ்சலம் அடைந்துள்ளார் என்பதன் அறிகுறி இது. இந்த வழக்கு குறித்து செய்தி வந்ததும், தனது உயர்மட்டத் தொடர்புகள் அனைத்தையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார் ஜக்கி. எப்படியாவது இந்த வழக்கை முடித்து ஆசிரமத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவே நமது பெரிய வெற்றி….
அந்த வனத்தை மீட்டு விலங்குகளிடமும், பழங்குடியின மக்களிடமும் ஒப்படைக்கும் வரை தொடர்ந்து அயராது போராடுவோம் தோழர்களே… இந்த போலிச் சாமியார்களின் முகத்திரையைக் கிழிப்போம்.
அத்தனைக்கும் ஆசைப்படாதே ஜக்கி.... உனது ஆசையே உனக்கு வரப்போகும் துன்பத்துக்குக் காரணம்.
எந்தக் கேள்வியும் கேட்காமல் கருணாநிதியால் ஊமையாக்கப்பட்ட வனத்துறை செக்போஸ்ட்
ஈஷா மைய சுற்றுச் சுவர்..
ஈஷா மையத்துக்காக வனப்பகுதியில் உருவாக்கப்பட்ட தார்ச்சாலை
300 வருடங்களாக வாழும் தாணிக்கண்டி மலைவாழ் மக்களின் கிராமத்துக்கு செல்லும் சாலை போன்ற ஒன்று
புகைப்படம் எடுக்கக் கூடாது என்று மிரட்டும் செக்யூரிட்டி
பின் தொடர்ந்து வந்து மிரட்டிய சாமியார்
தங்கு தடையின்றி நடைபெறும் கட்டுமானப் பணிகள்
மகாசிவராத்திரி விழாவுக்காக அமைக்கப்பட்டு வரும் மேடை
மேடைக்கு 50 அடி தொலைவில் தொடங்கும் வனப்பகுதி
கள்ளத்தனமாக எடுக்கப்படும் தண்ணீருக்கான தொட்டி
மொட்டையடிக்கப்பட்ட வனம்
ஒரு வருடத்துக்கு முன் அடர்ந்த காடாக இருந்த இடம்
தாணிக்கண்டி பழங்குடியின குழந்தைகள்
அந்தப்
பழங்குடியின மக்களை வைத்தே மலை மேலிருந்து ஈஷா மையத்திற்கு எப்படி குடிநீர்
இணைப்பு வழங்கப்பட்டது என்பதை விளக்கும் தாணிக்கண்டி கிராமப் பழங்குடி
தாணிக்கண்டி பழங்குடியின கோயில்
நமது வாகன எண்ணை குறித்து மிரட்டும் செக்யூரிட்டி
ஈஷா மையத்தினரால் அமைக்கப்பட்டுள்ள மின்வேலி
பிடுங்கி எறியப்பட்டுள்ள 1939ம் ஆண்டு எல்லைக்கல்
ஈஷா மையத்தினர் அமைத்துக் கொண்டுள்ள பாலம்
மலையிலிருந்த திருட்டுத்தனமாக எடுத்து வரப்படும் குடிநீர் இணைப்பு
ஹெலிபேட் அமைய உள்ள இடம்.
thanks-source;http://savukku.net/index.php?option=com_content&view=article&id=1777&catid=1&Itemid=19