சமீபத்திய விஸ்வரூபம் சினிமா பட விவகாரத்தில் ஒருங்கிணைந்த 24 அமைப்புகளின் நிலைபாட்டை பற்றிய நமது சகோதரர்களின் பல்வேறு கருத்துக்களும் ஒரு வகையில் யோசிக்கப்படக் கூடியதாக இருந்தாலும், ஒரு பிரச்சினையை மையமாக வைத்து ஒருங்கிணைந்த விசயம் மிகவும் முக்கியமானதாகும். இத்தகைய ஒற்றுமையை கடந்த காலங்களில் பார்த்ததாக என் நினைவுக்கு வரவில்லை.
தற்போதைய நமது சமுதாயத்தின் தனிப்பட்ட ஒவ்வொரு அமைப்பை பற்றியும் விமர்சிக்க ஆரம்பித்தால் கூடை கூடையாக குற்றச்சாட்டுக்களும், குறைபாடுகளுமே மிஞ்சி நிற்கும்.
பிரச்சினை இப்போது அதுவல்ல, முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய ஒவ்வொரு விஷயத்திலும் இதுபோன்ற ஒற்றுமை வேண்டும் என்பது தான் நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாகும்.
நான் பெரியவன், நீபெரியவன், எங்கள் அமைப்புதான் நீண்டகால அமைப்பு, மற்ற அமைப்புகளெல்லாம் நேற்று பெய்த மழையில் முழைத்த காளான்கள் என்றெல்லாம் விதண்டாவாதம் பேசித்திரிவது மக்களிடம் எடுபடாது.
இன்றைய போட்டி மிகுந்த பொருளாதார சந்தையில் எவருடைய நிறுவனத்தில் பொருள் தரமானதாகவும், விலை குறைவாகவும் கிடைக்குமோ அங்கேதான் மக்களின் கூட்டம் அலைமோதும்.இது சாதாரண பாமரனுக்கும் புரியும். இது போல தான் அமைப்புகளின் செயல்பாடும்.
சமுதாயத்திற்கெதிரான பிரச்சினைகளை கையாளும் விதம்தான் மிகமுக்கியமானது.
ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஆதரவாக குரல் கொடுத்து வரும் எனது அருமை சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள்!
நாம் ஆதரித்துக்கொண்டிருக்கும் நமது ஒவ்வொரு இயக்கத்தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் அல்லாஹ்வின் அச்சமும், மறுமையின் பயமும், மண்ணறை வேதனை பற்றிய சிந்தனையுமிருந்தால்,
இப்போதே முஸ்லிம் தலைமை இல்லாத அரசியல் கட்சிகளின் கூட்டணியை விட்டு வெளியேறி, பாங்கின் சப்தம் கேட்டதும் எப்படி கடமையான தொழுகையை இமாம் ஜமா-அத்தோடு ஒரே பள்ளியில் ஒரு இமாமை பின்பற்றி தொழக்கூடுகிறோமோ, அதுபோல ஒரே இடத்தில் ஒன்று கூடி எதிர்காலத் தலைமுறைகளுக்காவது உதவும் வகையில் அரசியல் அதிகாரத்தை ஒற்றுமையாக பெறக்கூடிய பயனுள்ள ஆலோசனைகளை செய்யக்கூடிய சூழ்நிலையை உருவாக்குங்கள்.
கேவலம்,ஒரு எம் பி,சீட்டிற்கும்,இரண்டு அல்லது மூன்று எம் எல் ஏ சீட்டிற்கும் சுயமரியாதையை இழந்து அடுத்தவன் சின்னத்தில் போட்டியிடுவதும், அடுத்தவனை போற்றி புகழ்பாடுவதிலும் தான் தங்களது அமைப்பின் எதிர்காலமே இருப்பது போன்ற இமேஜை உருவாக்கி வைத்திருக்கும் ஒவ்வொரு அமைப்பும் இனியாவது திருந்தட்டும்.
இதை செய்யாமல் வழக்கம்போல் அதிமுகவில் 10 முஸ்லிம் அமைப்புகளும், திமுகவில் 10 முஸ்லிம் அமைப்புகளும், காங்கிரஸில் 2 முஸ்லிம் அமைப்புகளும் கூட்டணி வைத்துக் கொண்டு அவைகள் வீசியெறியக்கூடிய ஒன்றிரண்டு எலும்புத்துண்டுகளுக்காக அலைய ஆரம்பித்தால்....
அத்தகைய பிற்போக்குத்தனமான அமைப்புகளை சமுதாயம் ஒதுக்கி வைக்க தயங்கக்கூடாது என்பதே எனது பணிவான வேண்டுகோள்.
-மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்