Saturday, January 19, 2013

"தலையணை மந்திரம்"!


    பெண்களே! போடுங்க "தலையணை மந்திரம்"!      
நம் சமூக அமைப்பில் சாதாரணமாகச் சொல்லப்படும் பொதுவான ஒரு கிண்டலான வார்த்தை ''தலையணை மந்திரம்''!!
இது கணவன் மனைவி இருவரும் தங்களின் தனிமையான நேரத்தில் ரொம்ப ஸ்பெஷலாக அன்னியோனியமாக பேசிக்கொள்வதை குறிக்கிறது! ஆனால் இதன் அர்த்தம் வேறு விதமாக நம்மால் எடுத்து கொள்ளபடுகிறது.
எனக்கு தெரிந்தவரை மாமியார் தனது மருமகளை திட்டுவதற்கு கையாளும் ஒரு வசைச் சொல் என்றே தெரிகிறது.
'தலையணை மந்திரம் போட்டு என் மகனை மயக்கிட்டா', 'அப்படி என்ன தலையணை மந்திரம் போட்டாளோ, இப்படி மயங்கி கிடக்கிறான்' இதை சொல்லாத மாமியார்கள் குறைவு.....!!
ஆனால் மிக உன்னிப்பாக கவனித்தால் இதன் பொருள் அந்தரங்கம் என்றே வருகிறது. இது எவ்வளவு மோசமான உதாரணம் என்று பலருக்கும் புரிவதில்லை....
ஆண்கள் எல்லோரும் அந்த உறவிற்கு மயங்கிவிடுவார்கள் என்றும் அதற்காக பெற்றவளையும் உதாசீனம் படுத்தி விடுவான் என்பதாகத்தானே பொருள்...?!
அதுவும் பெற்ற தாயே தனது மகனை அவ்வாறு சொல்வது எந்த விதத்தில் ஏற்புடையது!?
மருமகளை திட்டுவதற்காக கூறப்படும் இந்த வார்த்தை அந்த ஆண்மகனை இழிவுக்குள்ளாக்கும் என்பதை ஏன் யாரும் புரிந்து கொள்வதில்லை ?? 'வீட்டுக்காரனை கைக்குள்ள போட்டுகிட்டா', 'முந்தானையில் முடிஞ்சிகிட்டா' என்பது போன்றவைகள் பெண்ணை குறை சொல்லணும் என்று பேசபட்டாலும் மறைமுகமாக அங்கே கேலிப் பொருளாக்கப்படுவது பரிதாபத்துக்குரிய ஆண்மை...!!
ஆண்களே ?!
என்னவோ ஆண்கள் என்றாலே எப்போதும் பெண் சுகத்திற்கு அலைபவர்கள் போலவும், அதைத் தவிர அவர்களின் மூளை வேறு எதையும் சிந்திக்காது என்கிற ரீதியில் ஒரு சில பெண்கள் ஆண்களை நடத்துவது மிகவும் வருந்த தகுந்த ஒன்று.......
ஒவ்வொரு ஆணிற்கும் திருமணம் ஆன புதிதில் சில நாட்கள் மனைவி தேவதையாக தெரியலாம். அந்த தேவதை வரம் கொடுக்காமல்,வரம் கேட்டாலும் கொடுப்பார்கள்....!! இது ஆரம்ப சில மாதங்கள் மட்டுமே..... அடுத்து தொடரும் நாட்களில் மனைவிடம் தன் அம்மாவை தேடுவார்கள்/எதிர்பார்ப்பார்கள் என்பது உண்மையில் இங்கே எத்தனை பெண்களுக்கு புரியும் ?!!
அம்மாவின் அன்பும் அரவணைப்பையும் மட்டுமே பெரிதாக என்னும் ஆண்கள் பலர், அதையே மனைவி சிறிதும் குறைவின்றி தரும் போது, அந்த ஆண்மகன் சற்று தடுமாறி போவான். அந்த அன்பில் திளைத்து மூழ்கி முத்தெடுப்பவர்கள் பாக்கியசாலிகள்! மாறாக எந்த ஆண் மகனும் வெறும் உடல் சுகத்தை மட்டும் பெரிது படுத்தமாட்டான். இது புரியாத அறிவிலிகள் தலையணை மந்திரம் என்று எதையாவது சொல்லி அன்பான தம்பதிகளுக்கிடையே பிரிவினையை, விரிசலை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
அதனால் கணவன், மனைவி இருவருக்குள் மனப்பொருத்தம் ஏற்பட வழி இல்லாமல் கெடுக்கக்கூடிய காரணங்கள் பெரும்பாலும் பெண்ணின் பக்கத்தில் இருந்தே தொடங்குகிறது.....அதை பெண்கள் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். திருமணம் முடிந்த பெண்ணிற்கு நல்லது சொல்கிறோம்/செய்கிறோம் என்று வருகிற நலம்விரும்பிகளை(?) முதலில் வெளியே நிறுத்துங்கள்.
மனைவிகளே !
பிறர் கூறும் கணவனை கைக்குள்ள போட்டுக்கோ, முந்தானையில் முடிஞ்சுக்கோ என்பது போன்ற தவறான பேச்சுக்களை முதலில் காதுகொடுத்து கேட்காதீர்கள் ஒருவேளை சொன்னது உங்கள் தாயாக இருந்தாலுமே...!! தாய் நமக்கு நல்லதுக்கு தானே சொல்வாங்க என்று அப்படியே கேட்டு வைக்காதிர்கள்... அவர்கள் அப்படி சொல்வதின் பின்னணியில் சில கசப்பான அனுபவங்கள்- குறிப்பா தன் மாமியார் வீட்டில் அவர்கள் பெற்ற அனுபவங்கள் அவர்களை இப்படி பேச வைக்கலாம். 'நாம தான் உசாரா இல்லாம போய்ட்டோம் நம் மகளாவது நல்லா இருக்கட்டும்' என்று ஒரு நல்ல எண்ணத்தில் சொல்லலாம். ஆனால் நீங்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும். அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை வேறு. கணவன் மனைவி இருவருமே படித்து வேலைக்கு செல்லக்கூடிய இன்றைய தம்பதிகளின் நிலை வேறு.
இருவருமே பொருளாதார ரீதியிலான ஒரு தேடலில் தீவிரமாக போய் கொண்டிருக்கும் போது... இந்த மாதிரி தலையணை மந்திரம், கணவனை தன் வழிக்கு கொண்டு வரணும் என்று ஈடுபடக்கூடிய இத்தகைய செயல் ஒரு நயவஞ்சக எண்ணம் போல் சென்று, மனதில் எப்போதும் ஒரு இறுக்கமான நெருக்கடியை கொடுத்துவிட கூடிய ஆபத்து இருக்கிறது. அதை முற்றியும் தவிர்த்து அந்தரங்கமான நேரத்தில் இனிமையான நினைவுகளை பரஸ்பரம் பரிமாறி ஒரு தெளிந்த நீரோடை போன்று மனதை வைத்துக்கொண்டு உறவில் ஈடுபடும் போது அங்கே தாம்பத்தியம் மிக அழகாக அற்புதமாக நிறைவு பெறும். மறுநாள் காலை இருவருமே உற்சாகமாக, புது புத்துணர்ச்சியுடன் துயில் எழுவார்கள்...அப்புறம் என்ன, அன்றைய பகல் பொழுது முழுவதுமே அதே புத்துணர்ச்சி தொடரும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ...?!!
ஒரு சர்வே :
"நகரத்தில் வாழும் 44 சதவீத திருமணமான ஆண்கள் தங்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்து கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களிலும் 29 சதவீதம் பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள் !!"
சர்வே வேற இப்படி சொல்லுது...!! நிலைமை இப்படி இருக்க, தலையணை மந்திரம் அப்படி இப்படின்னு எதையாவது முயற்சி செய்து(?) இருந்ததும் போச்சு... அப்படின்ற நிலைக்கு கொண்டு வந்திடாதிங்க...!!
சரி இருக்கட்டும்... தவறாமல் மனைவியுடன் உறவு வைத்து கொள்பவர்கள், என்ன சொல்றாங்க... அதையும் பாப்போம்.....
"எங்கள் வேலைகளிலேயே நாங்கள் மிகவும் சோர்ந்து போகிறோம். வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக் கொள்ளாவிட்டால் மனைவி, அவள் மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுகிறாள். அப்படி ஒரு எண்ணம் மனைவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்து கொள்கிறோம்"
இது ஏதோ சுவாரசியத்துக்காக எழுதப்பட்டதில்லை... சர்வேயில் சொல்லப்பட்ட தகவல்கள். இன்றைக்கு பல வீடுகளில் இருக்ககூடிய நிதர்சனம்!!
''தலையணை மந்திரம்'' இனி இப்படி போடுங்க...!!
o மனதில் சுமப்பதால் நீங்களும் ஒரு தாய்தான். உங்கள் அன்பான அரவணைப்பில் அவரை குழந்தையாய் மாற்றுங்கள்...! அப்புறம் எங்கிருந்து வரும் பிரச்சனை ??!! அதனால் பாசத்தை காட்டும் விதத்தில் ஒரு தாயாய் !!
o அவரது குறைகளை மட்டுமே பெரிசு படுத்தி வாதாடாமல் நிறைகளை சொல்லி ஊக்கபடுத்துங்கள் ஒரு சகோதரியாய் !!
o கணவர் சோர்ந்து போகும் நேரம் தோளில் தாங்குங்கள் ஒரு தோழியாய் !!
o குடும்பம்/தொழில்/வேலை இவற்றில் பிரச்சனை ஏற்பட்டால் உங்களுக்கு தெரிந்த நல் ஆலோசனைகளை சொல்லுங்கள் ஒரு மந்திரியாய் !!
o எல்லாவற்றிற்கும் பிறகு தனியறையில் நடந்துகொள்ளுங்கள்...முழுமை அடைந்த மனைவியாய் !!
கணவன் தன்னை புரிந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட நீங்கள் முதலில் அவரை புரிந்துகொள்ளுங்கள். கணவனின் ஆசைகள், தேவைகள், உரிமைகள் என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வது தான் புரிதல். குடும்பத்தில் யார் பேச்சை யார் கேட்கணும் என்று எடை போட்டு பார்த்து கொண்டிராமல் இருவரும் ஒருவர் பேச்சை ஒருவர் மதித்து செல்வது நல்லது. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
அனைத்தையும் விட ஒருவரை ஒருவர் உண்மையாக நேசியுங்கள், பாசாங்கு இருக்ககூடாது...!!
பிறரின் தேவையற்ற ஆலோசனைகளை கேட்டு அதன் படி நடந்து மனவிரிசலை ஏற்படுத்தி கொள்வதை விட இங்கே குறிப்பிட்ட இந்த மந்திரங்களை பின் பற்றுங்கள்... கணவன் உங்களையே சுற்றி வருவார்...! அன்பால் சாதிக்க முடியாததை வேறு எதை கொண்டு சாதித்தாலும் அவை எல்லாம் வெறும் கானல்!!
-டாக்டர் கவ்சல்யா

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.