நெகிழ வைத்த ஒரு நிகழ்வு!
இரண்டு மாதத்துக்கு முன்பு ஒரு அவசர வேலை காரணாக தமிழகம் செல்ல நேரிட்டது. நோன்பின் முதல் நாள் எனது பயணம். எப்பொழுதும் சவுதியா விமானத்தில்தான் செல்வேன். இந்த முறை நமது நாட்டு விமானமான ஏர்இந்தியாவில் பயணிப்போமே என்று எண்ணினேன். பெட்ரோல் பணத்தைக் கூட திரும்ப செலுத்தாத அளவுக்கு நட்டத்தில் ஓடிக் கொண்டிருப்பதால் அந்த நிறுவனத்துக்கு நமது பயணமும் ஒரு ஊன்றுகோலாக இருக்குமே என்ற எண்ணத்தில் புக் செய்து கொண்டேன். கூடிய வரை படிக்கும் நாமும் ஏர் இந்தியாவிலேயே பயணம் செய்ய முயற்ச்சிப்போமாக!
விமானம் ரியாத்திலிருந்து 6:45 புறப்படுவதாக இருந்தது. நான் நோன்பாகையால் ஒரு கேக், ஒரு பாட்டில் தண்ணீர், ஒரு ஜூஸ் சகிதமாக முன்னெச்சரிக்கையாக வாங்கிக் கொண்டு விமானத்தில் அமர்ந்தேன். சவுதியா விமானமாக இருந்தால் கண்டிப்பாக நோன்பு திறக்க ஏற்பாடு செய்வார்கள். ஏர் இந்தியாவில் தரவில்லை என்றால் எப்படி நோன்பு திறப்பது என்ற முன்னெச்சரிக்கையே இவற்றை வாங்கச் சொன்னது. எனக்கு நடுவில் இருக்கை கிடைத்தது. வலது புறமும் இடது புறமும் அமர்ந்தவர்களிடம் ஒரு 'ஹலோ' சொல்லி விட்டு இருக்கையில் அமர்ந்தேன்.
சற்றும் எதிர்பாராத விதமாக ஏர் இந்தியா நிர்வாகம் பயணிகள் அனைவருக்குமே இரண்டு பேரித்தம் பழங்கள், ஒரு ஜூஸ், ஒரு கேக், ஒரு தண்ணீர் பாட்டில் என்று விநியோகிக்க ஆரம்பித்தனர். எனக்கு வலது புறம் அமர்ந்தவர் கொடுத்த மாத்திரத்திலேயே சாப்பிட ஆரம்பித்து விட்டார்.
நோன்பு திறக்க இன்னும் பத்து நிமிடம் இருக்க சாப்பிடுகிறாரே என்று நினைத்துக் கொண்டேன். ஒருக்கால் இந்து நண்பராகவோ அல்லது கிறித்தவ நண்பராகவோ இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். எனது இடது புறமாக அமர்ந்திருந்தவர் 'நோன்பு திறக்க இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது?' என்று கேட்டார். நானும் 'இன்னும் 10 நிமிடம் பாக்கி இருக்கிறது' என்று பதிலளித்தேன்.
நேரமும் வந்தது. விமானத்தில் அனைவரும் நோன்பு திறந்தோம். எனது இடது புறம் அமர்ந்திருந்தவரும் நோன்பு திறந்தார். அதன்பிறகு இருக்கையில் அமர்ந்தவாரே மாலை நேர (மஃக்ரிப்) தொழுகையை தொழுது கொண்டேன். நான் செய்யும் ஒவ்வொரு அசைவையும் இடது புற நண்பர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
நான் தொழுகையை முடித்தவுடன் எனது செயல்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த நண்பரிடம் 'நீங்களும் தொழுகலாமே? அமர்ந்து கொண்டு கூட தொழுகலாம்' என்று கூறினேன். அதற்கு அவர் 'சாரி. நான் முஸ்லிம் அல்ல. சௌராஷட்ரா வகுப்பை சார்ந்தவன். சவுதி வந்த நாள் முதல் இந்த நாட்டின் சுற்று சூழல் என்னையும் நோன்பு வைக்க ஆர்வத்தை ஏற்படுத்தியது. இப்படி இறைவனுக்காக நோன்பு வைப்பதில் மிகுந்த மன நிறைவை அடைகிறேன். எனக்கு தொழுக தெரியாது. எனவேதான் நீங்கள் தொழுததை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன்.' என்று சொன்னவுடன் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தேன். (அல்லாஹ் அவருக்கு ஹிதாயத்தைக் கொடுப்பானாக.)
எனது வலது புறம் அமர்ந்திருந்தவர் தோற்றத்தில் முஸ்லிமைப் போல் இருந்ததால் 'உங்கள் பெயர் என்ன?' என்று கேட்டேன். 'அபுபக்கர்' என்று கூறினார். சிறிது நேரத்தில் விமானப் பணிப் பெண்ணிடம் 'மது கிடைக்குமா?' என்று கேட்டார். பணிப்பெண்ணும் தருகிறேன் என்று சென்று விட்டார். நான் அபுபக்கரிடம் 'முஸ்லிம் தாய் தந்தையருக்கு பிறந்து விட்டு நோன்பு நாளில் நோன்பும் வைக்காமல் மது அருந்துகிறாயே தம்பி! இறைவனின் பயம் உனக்கு கிடையாதா?' என்று கேட்டேன். அதற்கு அவர் 'இரண்டு வருடமாக மது அருந்தாமல் கட்டுப்பாட்டோடு இருந்தேன். விமானத்தில் மது அருந்தலாம் என்று தான் ஏர் இந்தியாவிலேயே பயணிக்கிறேன்' என்றார் கூலாக.
உடன் எனக்கு அருகில் இருக்கும் இந்து நண்பரைக் காட்டி 'இவர் இந்துவாக இருந்தாலும் இறைவன் மேல் உள்ள பிரியத்தால் நோன்பு வைக்கிறார். தொழுவதற்கும் ஆர்வத்தோடு இருக்கிறார். முஸ்லிம் தாய் தந்தையருக்கு பிறந்த நீங்கள் இறப்புக்கு பின்னால் இறைவன் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதிலை வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டவுடன் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சிறிது நேரத்தில் எனக்கு அருகில் இருக்கும் இருக்கையை காலி செய்து விட்டு கடைசியில் சென்று உட்கார்ந்து கொண்டார். (அல்லாஹ், இவரையும் தவறை உணரும்படி செய்து நேர்வழிப்படுதுவானாக.)
இடது புறம் அமர்ந்திருந்த இந்து நண்பர் இஸ்லாம் சம்பந்தமாக பல கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தார். எனது வலைதள முகவரியையும், டார்வின் சம்பந்தமான கேள்விகளுக்கு நண்பர் ''ஆஷிக்''கின் வலைத்தளத்தையும் அடுத்து ஆன்லைன்பிஜே வலைத்தளத்தையும் மேலதிக விளக்கங்களுக்காக கொடுத்தேன். அவரும் ஆர்வமுடன் தனது லேப்டாப்பில் குறித்துக் கொண்டார்.
முஸ்லிம் தாய் தந்தையருக்கு பிறந்தும் இஸ்லாத்தை விளங்க அபுபக்கரால் முடியவில்லை. ஆனால் வேலை நிமித்தமாக சவுதி வந்தவருக்கு இந்து மதத்தில் பிறந்தும் இஸ்லாத்தின் மேல் ஒரு அதீத பற்றை கொடுத்த இறைவனின் கிருபையை என்னவென்பது?
''தான் நாடியோருக்கு ஞானத்தை வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர யாரும் சிந்திப்பதில்லை'' (குர்ஆன் 2:269)
நன்றி: சுவனப்பிரியன்
கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு சம்பவம் எனது வாழ்விலும் நடந்தது. பல வருடங்களுக்கு முன்னால் நானும் எனது குடும்பத்தார்கள் - எனது மனைவி மக்களுடன் "ஏர் லங்கா" விமனத்தில் ஐரோப்பாவிலுள்ள ஒரு நாட்டிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். விமானத்தில் உணவு பறிமாறப்பட்டபோது அவர்கள் "நான்-வெஜிடேரியன்" உணவை வைத்தனர். நான் அதை உண்ண மறுத்து, எனக்கும் என்னுடன் வந்துள்ள குடும்பத்தார்கள் அனைவருக்கும் வெஜிடேரியன் உணவுதான் வேண்டும் என்றும், நீங்கள் கொடுத்திருக்கும் இந்த சிக்கன் உணவு ஹலாலா என்று தெரியவில்லை அதனால் வேண்டாம் என்ரு சொல்லி விட்டேன். (வெஜிடேரியன் உணவு வேண்டுமானால் முன்னமேயே டிக்கெட் எடுக்கும்போதே கேட்டிருக்க வேண்டும் என்பதை அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை.)
அவர்கள் எவ்வளவோ - கிட்டத்தட்ட மன்றாடிக் கேட்டுக் கொண்டபோதும் நானும் என்னுடன் வந்த சிறு பிள்ளைகள் உள்பட அனைவரும் உண்ண மறுத்துவிட்டோம். நேரம் கடந்து கொண்டிருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் சுவையாக உணவுருந்திக் கொண்டிருந்தனர்.
என் சிறுவர்களும் சிறுமியும் பிடிவாதத்துடன் உணவருந்தாமல் இருந்தது விமான ஸ்டாஃபுகளுக்கு மிகவும் சங்கடத்தைக் கொடுத்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு வெஜிடேரியன் தட்டு மூன்றுடன் எங்களிடம் வந்து கொடுத்த விமானத்தின் முக்கிய ஸ்டாஃப் ஒருவர் "எங்களால் முடிந்தது இவ்வளவுதான்! தயவு செய்து உங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கொடுத்துவிட்டுச் சென்றார்.
நானும் எனது மனைவி மக்களும் இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சந்தோஷத்துடன் அந்த உணவை உண்டு முடித்தவுடன் எனது பக்கத்து இருக்கையில் இருந்த ஒரு சகோதரர், "ஏன் முதலில் அவர்கள் வைத்த சிக்கன் உணவை நீங்கள் உண்டிருக்கலாமே..?" என்றார்.
''ஒரு முஸ்லிம் ஹலாலான உணவைத்தான் உண்ண வேண்டும், அதனால் தான் நான் முதலில் கொடுத்த சந்தேகத்துக்கிடமான அந்த உணவை நாங்கள் உண்ண மறுத்துவிட்டோம்'' என்று நான் சொன்னபோது அந்த சகோதரர் சொன்னார் "நானும் முஸ்லிம்தான்... (அவர் எற்கனவே அந்த சிக்கன் உணவை உள்ளுக்குள் - வயிற்றுக்குள் தள்ளிவிட்டவர்தான்) இதெல்லாம் விமானத்தில் போகும்போது நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது... அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ள வேண்டியதுதான்...!" என்றார்.
ஒரு புன்னகையை மட்டுமே அவருக்கு பதிலாக கொடுதுவிட்டு அமைதியாக பயணமானோம். சிறிது நேரத்திற்குப்பிறகு அந்த சகோதரரைப் பற்றி விசாரித்தபோது எனக்கு பயங்கர அதிர்ச்சி! காரணம் "தான் ஒரு ஹாஃபிஸ் (குர்ஆனை மனனம் செய்தவர்) என்றும் பெங்களூரிலுள்ள ஒரு பெரிய மதரஸாவின் பெயரைக் குறிப்பிட்டு; அங்குள்ள மிகப்பெரிய ஆலிமின் பெயரைக் குறிப்பிட்டு அவரைக் காணவே செல்வதாக அவர் சொன்னபோது எனக்கு மேலும் அதிர்ச்சி!
"என்ன நீங்கள்...! ஒரு ஹாஃபிஸாக இருந்து கொண்டு இப்படி ஹராம்-ஹலால் பார்க்காமல் உண்ணுகின்றீர்களே...! சரி தானா?" என்று கேட்டபோது "நான் ஹாஃபிஸே ஒழிய ஆலிம் அல்ல, அதனால் எனக்கு மார்க்க சட்டங்கள் அவ்வளவாகத் தெரியாது!!!" என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. அவர் தமிழகத்திற்கு பக்கத்திலுள்ள தமிழ் பேசும் ஒரு குட்டி மாநிலத்தைச் சேர்ந்தவர்தான். அதன்பிறகு அவரிடம் மார்க்கத்தைப்பற்றி பேசப்பேச தனது தவறை உணர்ந்து கொண்டார். இன்றைக்கும் அந்த இன்ஸிடென்ட் மறக்க முடியாத ஒரு சம்பவமாக மனதில் பதிந்திருக்கிறது.. அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்
- எம்.ஏ.முஹம்மது அலீ. www.nidur.info
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment