Friday, September 5, 2014

சூனியம்...!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூனியம் வைக்கப்பட்டு வஹி மூலம் அதை இறைவன் நிவாரணப்படுத்திய ஹதீஸ் பற்றிய விமரிசனங்களும் விளக்கங்களும்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட செய்தியைக் கூறும் ஹதீஸ் தொடர்பாக முன்வைக்கப்படும் விமரிசனங்களுக்கான சரியான பதில்களை இப்பகுதியில் வழங்கலாம் என நினைக்கின்றோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸை நாம் முதலில் அறிந்து கொள்வோம்.
صحيح البخاري ـ 5766 – حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ سُحِرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِنَّهُ لَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّيْءَ وَمَا فَعَلَهُ حَتَّى إِذَا كَانَ ذَاتَ يَوْمٍ وَهُوَ عِنْدِي دَعَا اللَّهَ وَدَعَاهُ ثُمَّ قَالَ أَشَعَرْتِ يَا عَائِشَةُ أَنَّ اللَّهَ قَدْ أَفْتَانِي فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ قُلْتُ وَمَا ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ جَاءَنِي رَجُلَانِ فَجَلَسَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالْآخَرُ عِنْدَ رِجْلَيَّ ثُمَّ قَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الْأَعْصَمِ الْيَهُودِيُّ مِنْ بَنِي زُرَيْقٍ قَالَ فِيمَا ذَا قَالَ فِي مُشْطٍ وَمُشَاطَةٍ وَجُفِّ طَلْعَةٍ ذَكَرٍ قَالَ فَأَيْنَ هُوَ قَالَ فِي بِئْرِ ذِي أَرْوَانَ قَالَ فَذَهَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ إِلَى الْبِئْرِ فَنَظَرَ إِلَيْهَا وَعَلَيْهَا نَخْلٌ ثُمَّ رَجَعَ إِلَى عَائِشَةَ فَقَالَ وَاللَّهِ لَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ وَلَكَأَنَّ نَخْلَهَا رُءُوسُ الشَّيَاطِينِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَأَخْرَجْتَهُ قَالَ لَا أَمَّا أَنَا فَقَدْ عَافَانِيَ اللَّهُ وَشَفَانِي وَخَشِيتُ أَنْ أُثَوِّرَ عَلَى
النَّاسِ مِنْهُ شَرًّا وَأَمَرَ بِهَا فَدُفِنَتْ
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூனியம் செய்யப்பட்டார்கள். ஓன்றை செய்ததாக நபியவர்கள் நினைப்பார்கள் ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. நபியவர்ளின் நிலை இவ்வாறே இருந்தது. ஒரு நாள் நபியவர்கள் அல்லாஹ்விடம் துஆச்செய்து கொண்டிருந்தார்கள். பின்னர் நபியவர்கள் என்னிடம் "ஆயிஷாவே உனக்குத் தெரியுமா? நான் எந்த விடயத்தில் அல்லாஹ்விடம் தீர்ப்புக் கேட்டேனோ அல்லாஹ் எனக்கு அந்த விடயத்தைக் காட்டித்தந்து விட்டான்" எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் அது என்ன என்று நான் கேட்டேன்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "இருவர் என்னிடம் வந்தார்கள். ஒருவர் என் தலைக்குப்பக்கத்திலும் மற்றையவர் என் கால்களுக்குப்பக்கத்திலும் அமர்ந்தனர். பின்னர் அவர்களிலொருவர் மற்றையவரிடம் " இவருக்கு ஏற்பட்ட நோய் என்ன?" எனக் கேட்டார். அதற்கு மற்றையவர் "இவருக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார். அதற்கு மற்றையவர் "இவருக்கு சூனியம் வைத்தவர் யார்? எனக் கேட்க, "ஸூரைக் கோத்திரத்தைச் சேர்ந்த லபீதிப்னுல் அஃஸம் என்ற யூதர் தான் இவருக்கு சூனியம் செய்தார்" என்று அடுத்தவர் கூறினார்.
"இவருக்கு எதிலே சூனியம் வைக்கப்பட்டுள்ளது" என அவர் மீண்டும் கேட்க, "முடிகள், சீப்பு ஆகியவற்றில் சூனியம் செய்து அவற்றை ஒர் ஆண் பேரீத்த மரத்தின் பாலைக்குள் வைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார். "அந்தப்பாலை எங்கேயுள்ளது?" என்று மீண்டும் அவர் கேட்கவே, "அர்வான் என்ற கிணற்றுள் அது வைக்கப்பட்டுள்ளது" என்று மற்றையவர் கூறினார்.
பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களுடன் அந்தக்கிணற்றுக்குச் சென்று அங்கிருந்த பேரீத்தம் கொப்புகளைப்பார்த்து விட்டு ஆயிஷா நாயகியிடம் திரும்பி வந்து "சூனியம் வைக்கப்பட்டுள்ள அக்கிணற்றின் நீர் மருதானி கலந்தது போன்றிருந்தது. அந்த பேரீத்தம் கொப்புகள் ஷெய்தான்களின் தலைகளைப் போன்றிருந்தன." என்று கூறினார்கள். இதைக் கேட்ட ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் " அல்லாஹ்வின் தூதரே நீங்கள் அவற்றை வெளியெடுத்தீர்களா?" எனக்கேட்டார்கள். அதற்கு "இல்லை" என்று பதில் கூறிவிட்டு "அல்லாஹ் என்னை குணப்படுத்திவிட்டான். எனவே மக்களுக்கு மத்தியில் குழப்பங்கள் ஏற்படுத்துவதை நான் வெறுக்கிறேன்" என்று சொல்லி விட்டு அதைப் புதைக்குமாறு நபியவர்கள் ஏவினார்கள்". (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம்: புகாரி)
இந்த சம்பவம் புஹாரியில் வார்த்தை வித்தியாசங்களுடன் பல இடங்களில் இடம் பெறுகிறது. இந்த ஹதீஸில் நமக்குப்பல படிப்பினைகளுள்ளன. நபியவர்கள் தனக்குச் சூனியம் செய்யப்பட்டிருந்த அந்தப் பொருட்களைப் பிரித்துப் பார்க்கவுமில்லை. வெளியிலெடுக்கவுமில்லை. பார்த்து விட்டு வருகிறார்கள். சூனியமென்பது அவிழ்க்கப்பட்டால்தான் குணமாகும் என்ற தவறான நம்பிக்கையை இந்த ஹதீஸ் உடைக்கிறது. ஒருவருக்கு நோயேற்பட்டால் அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்திக்கும் போது அல்லாஹ் குணப்படுத்துவான்.
சூனியத்தை அவிழ்க்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கு இந்த ஹதீஸ் மிகப்பெரும் சான்றாகவுமுள்ளது. அத்துடன், ஒருவருக்கு சூனியம் வைக்கப்பட்டிருப்பின் அதை சூனியக்காரன்தான் எடுக்க வேண்டும் என்பது பொய்யென்பதும் இந்த ஹதீஸிலிருந்து தெளிவாகின்றது. ஒருவருக்கு நோயேற்படுவதற்கு கிருமிகள், சூழல், மனோநிலை போன்றன காரணமாகின்றதைப் போலவே சூனியமும் ஒருவருக்கு நோயேற்படுவதற்குக் காரணமாகின்றது என்பதும் இந்த ஹதீஸிலிருந்து தெரியவருகின்றது.
இந்த ஹதீஸி அறிவிப்பாளர் வரிசையைக் குறை கூறி சிலர் இந்த ஹதீஸை விமர்சிக்கின்றனர். முஃதஸிலாக்கள் போன்ற போலிப் பகுத்தறிவுவாதிகளே இவ்வாறு இதன் அறிவிப்பாளர் வரிசையை விமர்சிப்போராகும் என்பதனால் நாம் இவ்விமர்சனத்துக்கு பதில் கூற விளையவில்லை.
ஆனாலும் தௌஹீத் சகோதரர்களில் சிலர்  இந்த ஹதீஸை குர்ஆனுக்கு முரண்படுவதாக விமர்சிக்கின்றனர். அதுபற்றி இங்கு சிறிது ஆராய்வோம்.
மேற்படி ஹதீஸில் சில வார்த்தைக் குழப்பங்களுள்ளதாக விமரிசிக்கின்றனர்:
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நாற்பது நாள்தான் இந்த நோய் இருந்தது என்று சில அறிவிப்புக்களிலும் ஆறு மாதங்கள்தான் நபியவர்களுக்கு இந்நோய் இருந்தது என்று சில அறிவிப்புக்களிலும் உள்ளன.
2. அதுபோலவே நபியவர்கள் அக்கிணற்றுக்குச் சென்று சூனியத்தை எடுத்தார்கள் என்று சில அறிவிப்புக்களிலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிணற்றுக்குப் போய் எடுக்கவில்லை என்று சில அறிவிப்புக்களிலும் கூறப்பட்டுள்ளது. சில அறிவிப்புக்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களை கிணற்றுக்கு அனுப்பினார்கள் எனவும் சில அறிவிப்புக்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே போனார்கள் எனவும் கூறப்படுகின்றது.
3. சில அறிவிப்புக்களில் நபியவர்கள் சூனியத்தை தாமாக அகற்றினார்கள் எனவும் சில அறிவிப்புக்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சூனியத்தை அகற்றுவீர்களா என்று கேட்ட போது தேவையில்லை என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான வார்த்தைக் குழப்பங்களை வைத்து இந்த ஹதீஸை சிலர் பலவீனப்படுத்துகின்றனர். ஒரு ஹதீஸைப் பொருத்தமட்டில் அதனுடைய அறிவிப்பாளர் வரிசை ஸஹீஹாக இருந்து, அந்த சம்பவம் ஸ
ஹீஹாக இருந்து அந்த ஹதீஸின் கிளைகளில் காணப்படும் இது போன்ற வார்த்தைக் குழப்பங்களை வைத்து ஹதீஸ் பலவீனப்படுத்தப்படும் முறையொன்று கிடையாது. ஏனெனில் ஒரு பக்கமளவில் நீண்டிருக்கும் ஹதீஸ்களை நீங்கள் உற்று நோக்கினால் இது போன்ற வார்த்தைக் குழப்பங்கள் அதில் காணப்படும். உதாரணத்துக்குச் சொல்வதென்றால்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மனைவியொருவரின் வீட்டில் தேன் குடித்ததாக வரும் ஹதீஸில் ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டிலா? ஹப்ஸா ரளியல்லாஹு அன்ஹா வீட்டிலா இது நடைபெற்றது என்ற கருத்து வேறுபாடுள்ளது.
அவ்வாறுதான் அத்தஹிய்யாத்திலே விரலை எவ்வாறு வைப்பது என்று பார்க்கும் போதும் சைக்கினை எனவும் அசைத்தல் எனவும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது இவ்வேறுபாடுகளை வைத்து யாரும் ஹதீஸை பலவீனப்படுத்துவதில்லை. கருத்துக்களுக்குள் பொருத்தம் காணவே முயற்சிப்பர்.
நபியவர்களின் சூரிய கிரகணத் தொழுகை தொடர்பான ஹதீஸில் நபியவர்கள் மூன்று ருகூஉ செய்ததாகவும் முஸ்லிமில் அறிவிப்புக்கள் இடம்பெறுகின்றன இதை வைத்து முழு ஹதீஸையுமே நாம் பலவீனப்படுத்துவதில்லை.
இது போன்ற பெரிய ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் இது போன்ற சில வார்த்தைக் குழப்பங்கள் இருப்பது தவிர்க்க முடியாததாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஹதீஸின் அடிப்படை சரியானதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். அடுத்ததாக அவ்வாறான முரண்பட்ட வார்த்தைகளைக் கூறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் பலமானவர்களாக இருந்தாலும் மிகச்சிறந்த அறிவிப்பாளர்கள் கூறும் வார்த்தைகளை வைத்தே ஏனையவைகளை நாம் முடிவுசெய்ய வேண்டும்.
மேலே நாம் பார்த்த ஹதீஸை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து உர்வா அறிவிக்கின்றார். அவரிடமிருந்து ஹிஷாம் அறிவிக்கின்றார். ஹிஷாமிடமிருந்து உஸாமா, ஸ{ப்யான் அத்தௌரி போன்ற பலர் அறிவிக்கின்றனர். இவற்றுள் ஸ{ப்யான் அல் உயைனாவுடைய அறிவுப்புத்தான் முழுமையானதாக, நேர்த்தியானதாக இருக்கின்றது. ஆகவே இவ்வார்த்தை முரண்பாடுகளை வைத்து இந்த ஹதீஸை  நாம் பலவீனப்படுத்த முடியாது. இன்னும் இந்த ஹதீஸிற்கு வேறு சில அறிவிப்பாளர் வரிசைகளும் உள்ளன. அவைகளின் உடன்பாடு முரண்பாடுகளை வைத்தும் வார்த்தையின் பொருத்தமான வடிவத்தை முடிவு செய்யலாம். எனவே இந்த அளவுகோள் தவறானது.
PART 2
அடுத்ததாக இந்த ஹதீஸின் கருத்துக்களைக் கவனித்து சிலர் இந்த ஹதீஸைப் பின்வருமாறு பலவீனப்படுத்துகின்றனர்:
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றைச் செய்ததாகக் கற்பனை பன்னுகிறார்கள் ஆனால் அதை அவர்கள் செய்திருக்கவில்லை. செய்யவில்லை என்று நினைக்கின்றார்கள் ஆனால் அதைச் செய்துள்ளார்கள். இத்தகைய பாதிப்புக்கள் ஒருவருக்கு சூனியத்தால் ஏற்பட்டிருக்குமானால் அவருடைய நபித்துவத்தில் சந்தேகம் எழ வாய்ப்புண்டு. ஏனெனில் இக்காலப்பிரிவில் வஹியாக அல்லாஹ் இறக்கியதை இல்லையென்று அவர் சொல்லியிருக்கலாம், வஹியல்லாததை வஹியென்று அவர் கூறியிருக்கலாம் ஆகவே இந்த ஹதீஸை ஏற்கமுடியாது" என்பதே அந்த வாதம்.
இந்த வாதங்களையும் ஏற்கமுடியாது. ஏனென்றால் உலகியல் ரீதியாக நபியவர்கள் ஒரு மனிதனாகவே இருந்தார்கள். மற்றைய மனிதர்களுக்கு வரும் பாதிப்புக்கள் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் வரவே செய்தன. மறதி, ஒன்றை மாற்றிக் கூறுதல், நோய் போன்ற பலவீனங்கள் நபியவர்களுக்கும் இருந்தன. வஹி விடயத்தில் மாத்திரமே நூறு வீதம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எவ்விதத் தவறும் ஏற்படாது என்று நாம் நம்பவேண்டும்.  உதாரணமாகக் கூறுவதானால் ஸஹீஹ{ல் புஹாரியில் 460 வது ஹதீஸை எடுத்துக்கொள்வோம். அபூஹ{ரைரா (ரழி)அவர்கள் இதை அறிவிக்கிறார்கள்.
"ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான்கு ரக்அத் தொழுகையில் இரண்டு ரக்அத்தோடு ஸலாம் கொடுத்து விட்டார்கள். அதற்குப் பின்னால் கோபமான முகத்தோடு ஒதுங்கி அமர்ந்து கொள்கிறார்கள். இதைப்பார்த்த நபித்தோழர்களுக்குக் குழப்பமாக இருந்தது. அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு உமர் ரளியல்லாஹு அன்ஹு போன்றோர் நபியவர்களிடம் இதைப்பற்றிக் கேட்க அஞ்சினார்கள். இச்சந்தர்ப்பத்தில் ‘துல் யதைன்’ என்ற நபித்தோழர் "தொழுகை சுருக்கப்பட்டு விட்டதா? அல்லது நீங்கள் மறந்துவிட்டீர்களா?" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார். அப்போது நபியவர்கள் "நான் மறக்கவுமில்லை தொழுகை சுருக்கப்படவுமில்லை" என்று கூறுகிறார்கள். அப்போது மற்றைய நபித்தோழர்களும் இரண்டு ரக்அத் தொழுத விடயத்தைக் கூறியதும் நபியவர்கள் எழுந்து விடுபட்டவற்றைத் தொழுதார்கள். என்று அந்த ஹதீஸ் இடம் பெறுகிறது.
"இப்படி எத்தனை விடயங்களை நபியவர்கள் மறந்தார்களோ?" "மறதியால் எத்தனை விடயங்களைக் குறைத்தார்களோ?" எனக் கூறி மேற்சொன்ன வாதத்தினடிப்படையில் இந்த ஹதீஸையும் மறுக்கலாம். இவை மனித பலவீனங்களாகும். ஆனால் இந்த பலவீனங்களை வைத்து நபியவர்களின் வஹியுடைய பகுதியை நாம் குறை காண முடியாது.
இன்னும் சொல்வதென்றால், ஒரு முறை நபியவர்கள் தன்மீது ஒன்றை ஹராமாக்கிக் கொள்கிறார்கள். அல்லாஹ் உனக்கு ஹலாலாக்கியதை ஏன் நீர் ஹராமாக்கின்றீர் என்று உடனே அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கின்றான். உங்களின் மனைவியின் திருப்தியை நாடி  இப்படிச் செய்கிறீரே என்று அல்லாஹ் நபியவர்களிடம் கேட்கின்றான். ஆகவே அதை வைத்து "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி இன்னும் பலவற்றை ஹராமாக்கியிருக்கலாமல்லவா?" என்று கூறி இந்த அல்குர்ஆன் வசனத்தை மறுக்கமுடியாது.
எனவே மனிதன் என்ற அடிப்படையிலான பலவீனங்கள் நபியவர்களிடம் இருந்துள்ளன. இந்த பலவீனங்களை வைத்து நபியவர்களுக்கு வழங்கப்பட்ட வஹியைக் குறைகாண முடியாது ஏனெனில் வஹி விடயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கப்பட்டுள்ளது. எங்களில் ஒருவருக்கு சூனியம் வைக்கப்பட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் போன்று உடனடியாக ஜிப்ரீல் (அலை) மூலம் எங்களுக்கு சூனியத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் சொல்லித்தரப்பட மாட்டாது.
மூஸா நபியவர்களுக்கு தடியைப் போடச்சொல்லி அது பாம்பாகி உடனடியாக சூனியத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான வழிகள் காட்டிக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் சொல்லித்தரப்படுமென்று நாம் எதிர்பார்க்க முடியாது. நபிமார்களாயின் இதைப்போன்ற பாதுகாப்புக்களை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் ஆதாரமாகவுள்ளது.
மூஸா நபியவர்களுக்கும், ஏனையோருக்கும் கயிறு பாம்பாக விளங்கியது. ஆனால் மற்றவர்களுக்கு அதிலிருந்து விடுதலைபெற முடியவில்லை. மூஸா நபியவர்கள் விடுதலை பெற்றார்கள். இது அல்லாஹ் செய்த அற்புதமாகும். இவ்வாறுதான் நபியவர்களுக்கும் சூனியம் செய்யப்பட்டது. மற்ற மக்களால் அதிலிருந்து உடனடியாக விடுதலைபெற முடியாது. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் எதில், எவ்வாறு வைக்கப்பட்டுள்ளது போன்ற விடயங்கள் வஹி மூலம் சொல்லிக் கொடுக்கப்பட்டு சூனியத்திலிருந்து உடனடியாகப் பாதுகாப்பளிக்கப்பட்டது.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::

Post a Comment