Sunday, June 22, 2014

ரமளானுக்கு தயாராவோமே!

ஒன்றுக்கு பலமடங்கு நன்மைகளை அள்ளித் தரும் புனிதமிக்க ர‌மளான் மாதம் நம்மை நெருங்கிவிட்ட நிலையில் அந்த ரமளானின் மகத்தான நாட்களை நாம் மறுமைக்கு பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்ள இப்போதே நாம் தயாராக‌வேண்டும்.
குறிப்பாக குடும்பத் தலைவிகளாகிய பெண்கள் மற்ற நாட்களைவிட ரமளானில் செய்யவேண்டிய அமல்களையும், தவிர்ந்துக் கொள்ள வேண்டியவற்றையும், வீட்டு வேலைகளை எவ்வாறு குறைத்துக் கொள்வது என்பது பற்றியும் சில டிப்ஸ்களை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.
ரமளானுக்கு முன்னால் செய்யவேண்டிய....
ஸ்டோரேஜ் & க்ளீனிங் டிப்ஸ்:
o  நம் வீடுகளை எப்போதும்தான் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருக்கிறோமே என்று அலட்சியமாக இல்லாமல், ரமலானுக்கு முன்பு கொஞ்சம் ஸ்பெஷலாக எல்லாவற்றையும் ஒருகைப் பார்த்து வைத்துவிட்டால் அந்த ஒரு மாத காலத்தில் வேலைச்சுமை நிச்சயம் குறையும்.
o  எப்போதாவது எடுத்து பயன்படுத்தும் பொருட்களை எடுத்து தூசுகளின்றி சுத்தப்படுத்தி ப்ளாஸ்டிக் கவர் அல்லது கேரி பேக்கினால் மூடி வைத்தால் ரமலானில் தேவைப்படும்போது அந்தப் பொருட்களை எடுத்தவுடன் சுலபமாக பயன்படுத்தலாம்.
o  பழைய துணிமணிகளை தனியாக எடுத்துவிட்டு, பயன்படுத்தும் துணிகளை மட்டும் தனித்தனி வகைகளாக பிரித்து நேர்த்தியாக அடுக்கி வைத்துக் கொண்டால் அவசர நேரத்தில்கூட‌ தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. தனியாக பிரித்து வைத்த பழைய துணிகளை ஏழை எளியவர்கள் கேட்டு வரும்போது உடனுக்குடன் கொடுக்கவும் வசதியாக இருக்கும். (இது இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்.)
o  வாரம் ஒருமுறை துவைக்கும் பெட்ஷீட் செட்கள், முஸல்லா, போர்வைகளாக‌ இருந்தாலும் 4, 5 செட்களை முன்பே துவைத்து வைத்துக் கொள்ளலாம். தினமும் இரவுத் தொழுகைக்கு செல்லத் தேவையான (ஒன்றுக்கு மேற்பட்ட ) ஃபர்தா செட்களையும் ரெடி பண்ணி வைத்துக் கொள்வது நல்லது.
o  ஃபிரிஜ்ஜில் உள்ள பொருட்களை எடுத்துவிட்டு, சமையல் சோடா (சோடாப்பு) கலந்த நீரினை பழைய துணி அல்லது ஸ்பாஞ்சினால் தொட்டு உள்பக்கம் முழுதும் துடைத்துவிட்டு, மீண்டும் பொருட்களை அடுக்கி வைத்தால் ஃபிரிஜ் எந்த வாசனையுமின்றி ஃப்ரெஷ்ஷாக இருக்கும். ஃப்ரீஸரையும் அதுபோல் சுத்தப்படுத்தி கடல் உணவுகள், கறி வகைகள், காய்கறி/கீரைகள், பேஸ்ட் வகைகள் என தனித்தனியாக அடுக்கி வைத்துக் கொண்டால் தேவைப்படும்போது தேடாமல் எடுக்கலாம்.
o  பெருநாள் புத்தாடைகள் வாங்க‌ ரமளான் தள்ளுபடி விற்பனைக்காக காத்திருந்துவிட்டு கடைசிப் பத்து நாட்களில் கடைத் தெருவில் நேரத்தை வீணாக்காமல், கூடுமானவரை உங்களுக்குத் தேவையான புத்தாடைகளை முன்பே வாங்கி/தைத்து வைத்துக் கொள்வது நல்லது. அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் மட்டும், (கடை கடையாக அலையாமல்) ஒரு இடத்தில் வாங்கினோமா, வந்தோமா என்று ஷாப்பிங்கை விரைவில் முடித்துவிட்டு வந்துவிட்டால் ரமலானின் பொன்னான பொழுதுகள் வீணா
o  நீண்ட நாட்கள் சேமித்தாலும் வீணாகாத பொருட்களான சோப்பு, ஷாம்பு, சோப்புத்தூள், க்ளீனிங் லிக்யுவிட் வகைகளை ஒரு மாத தேவைக்கும் கூடுதலாக ரமலானுக்கு முன்பே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.காது.
சமையல் தயாரிப்பு டிப்ஸ்:
o  முக்கியமாக... சமையலை முன்பே முடிவு செய்துக் கொண்டு, அதற்காகவே நேரத்தை அதிகமாக செலவழிக்காத வண்ணம் திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்.
o  சமையலுக்கு தேவைப்படும் மசாலா, மளிகை வகைகளை மொத்தமாக வாங்கி சேமித்துவைத்துக் கொள்ளலாம். நாமே தயாரிக்கும் மசாலாக்களுக்கான பொருட்களை முற்கூட்டியே வாங்கி, சுத்தப்படுத்தி மிஷினில் கொடுத்தோ, மிக்ஸியிலோ அரைத்தோ வைத்துக் கொள்ளலாம்.
o  மல்லி, புதினா, சோற்று இலை (டவுன் பாண்டான் இலை) போன்று அடிக்கடி பயன்படுத்துபவற்றையும், நீண்ட நேரம் உட்கார்ந்து கவனமாக சுத்தம் செய்யும் முருங்கைக் கீரை போன்ற கீரை வகைகளையும் முன்கூட்டியே வாங்கி சுத்தம் செய்து தண்ணீர் படாமல் ஃப்ரீஜரில் எடுத்து வைத்துக் கொண்டால், அவ்வப்போது பயன்படுத்த மிகவும் வசதியாக இருக்கும். (குறிப்பு: இதுபோன்று தயார்படுத்தி வைத்த‌வற்றை பயன்படுத்தும் சமயம் நீண்ட நேரம் எடுத்து வெளியில் வைக்கக் கூடாது. எடுத்தவுடனே கழுவி, உடனே பயன்படுத்திவிடவேண்டும்.)
o  வாழைப்பூவைக்கூட இந்த முறையில் செய்து வைக்கலாம். ஆனால் உப்பு நீரில் சிறிது போட்டு, பிறகு தண்ணீரை வடியவிட்டு எடுத்து வைக்கவேண்டும். இதை எடுத்தவுடன் அப்படியே பயன்படுத்தலாம். காளிஃபிளவர், காளான் போன்ற காய்கறி வகைகளையும் சுத்தப்படுத்தி, நறுக்கி வைத்துக் கொள்ளலாம்.
o  எப்போதும் பயன்படுத்தும் பாத்திரங்களைவிட சில ஸ்பெஷல் பாத்திரங்கள் ரமலானில் தேவைப்படலாம். அதுபோன்ற பிரத்யேக பொருட்களை எடுத்து பயன்படுத்துபோது அதிகம் தேவைப்படாத மற்ற பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிடலாம். பாத்திரம் கழுவ அதிகமாக சேர்ந்து போகாமல் இருக்கும்.
o  இஞ்சி பூண்டு விழுதினை அவரவர் குடும்ப செலவினத்திற்கேற்ற அளவில் கூடுதலாக‌ அரைத்து, அத்துடன் அரைக்கும்போதே சிறிது எண்ணெய் கலந்து கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொண்டால் மிகவும் உபயோகமாக இருக்கும். (குறிப்பு: இஞ்சி பூண்டு விழுதை கண்ணாடி பாட்டிலில் மட்டும்தான் சேமிக்கவேண்டும். ப்ளாஸ்டிக், மற்றும் உலோகப் பொருட்களில் சேமித்து வைப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.)
o  ரமளானில் இஃப்தார் (நோன்பு திறக்கும்) சமயத்தில் மிக முக்கிய உணவாக இடம்பெறுவது நோன்புக் கஞ்சிதான். இது சத்தானதாகவும், மிகவும் சுலபமாக செரிமாணமாகக் கூடியதாகவும் இருப்பதால் அநேகமான நாடுகளில் (அந்தந்த நாட்டு உணவு முறைகளுக்கேற்ப) கஞ்சியை தயார் பண்ணிக் கொள்கிறார்கள். இதை தயாரிக்க‌ சற்று கூடுதல் நேரமாகும் என்பதால் 3 நாட்களுக்கு ஒருமுறை தயாரித்து, பால் வகைகள் மட்டும் சேர்க்காமல் ஃபிரிஜ்ஜில் வைத்துக் கொண்டால் நேரம் மிச்சமாகும். (குறிப்பு: மறுநாள் தேவைக்குரியதை மட்டும் எடுத்து தண்ணீரும் பாலும் கலந்து கொதிக்க வைத்து, கட்டியில்லாமல் கலக்கி வைத்துக் கொண்டால் புதிய கஞ்சிபோல் ஃபிரஷ்ஷாக இருக்கும்.)
o  கஞ்சிக்கு தேவையான வெந்தயம், கடலை அல்லது பருப்பு வகைகளை (ஒரு வாரத்திற்கு தேவையான அளவினை) தனித்தனி பாட்டில்களில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக் கொண்டால், பயன்படுத்த வசதியாக இருக்கும். அவை தீர்ந்த பிறகு மீண்டும் அதுபோல் ஊறவைத்துக் கொள்ளலாம். (குறிப்பு: அதுபோல் பயன்படுத்தும்போது ஊறிய தண்ணீருடன் கலக்கி எடுத்து பயன்படுத்தவேண்டும். தண்ணீரை கீழே ஊற்றக்கூடாது.)
o  கறி வகைகளை தினமும் சென்று வாங்கிக் கொண்டிருக்காமல், கொஞ்சம் கூடுதலாக வாங்கி சுத்தப்படுத்தி, தேவைக்கேற்ப தனித்தனி பாக்கெட்களில் போட்டு ஃப்ரீஜரில் (வாரம் ஒருமுறை) ஸ்டோர் பண்ணிக் கொள்ளலாம். வெளிநாடுகளில் வசிப்போர் மொத்தமாக ஒரு மாதத்துக்கும் சேர்த்து வாங்கும் வாய்ப்புகள் இருப்பதால் அதுவே நல்லது. அதன்மூலம் அலைச்சலைக் குறைத்து நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
o  சமோசா, நேம், ஸ்பிரிங் ரோல் வகைகளை இப்போதே தயாரித்து, ஃப்ரோஜன் பேக் அல்லது ப்ளாஸ்டிக் பாக்ஸ்களில் அடுக்கி ஃபிரீஜரில் வைத்துக் கொள்ளலாம். (குறிப்பு: ஒவ்வொரு லேயருக்கிடையிலும் Cling Film (ப்ளாஸ்டிக் ராப்) போட்டுக் கொண்டால் ஒன்றுக்கொன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும்.)
o  எலுமிச்சைப் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் ஐஸிங் சுகர் சேர்த்து நன்கு கரைத்து ஐஸ் க்யூப் ட்ரேக்களில் ஊற்றி ஃப்ரீஜ் செய்து, உறைந்த பிறகு எடுத்து ஒரு பாக்ஸில் போட்டு ஃப்ரீஜரில் வைத்துக் கொண்டால் லெமன் ஜூஸ் கரைக்கும்போது 3/4 க்ளாஸ் தண்ணீரில் ஒரு கட்டி ஜூஸ் (அல்லது உங்கள் சுவைக்கேற்ப ) கலந்துக் கொண்டால் (Preservative கலக்காத) ஃப்ரெஷ் லெமன் ஜூஸ் ரெடி!
o  தேங்காயைக் கூடுதலாக அரைத்து ஐஸ் க்யூப் ட்ரேக்களில் நிரப்பி, உறைந்த பிறகு எடுத்து ஃப்ரோஜன் பேக்கில் போட்டு வைத்துக் கொண்டால் அவ்வப்போது பயன்படுத்த மிகவும் வசதியாக இருக்கும். (இந்தியாவில் உள்ளவர்கள்) அதுபோல் தேங்காய் பாலையும் தயார் பண்ணி வைக்கலாம். தேங்காயைத் துருவியும் சிறு சிறு பாக்கெட்களில் போட்டு வைத்துக் கொண்டால் தேவைக்கு ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்.
o  பழவகைகளை வெட்டி ஃப்ரீஜரில் வைத்துக் கொண்டால் உடனுக்குடன் ஃப்ரூட் சாலட், ஃப்ரூட் ட்ரை ஃபில் போன்றவை செய்ய உதவியாக இருக்கும். (குறிப்பு: அப்படி உறைய வைக்கும் பழங்களை முன்கூட்டியே வெளியில் எடுத்து வைக்கக் கூடாது. தண்ணீர் விட்டுப் போய்விடும். அதனால் தயார் பண்ணி சுமார் 1/2 மணி நேரத்தில் சாப்பிடும்படி இருக்கவேண்டும்)
o  ஸஹர் உணவுகளை நோன்பு திறக்கும் முன்பே தயார் செய்துவிட்டால் இரவுத் தொழுகைக்கு சரியான நேரத்தில் செல்லவும், ஸஹருக்குரிய நேரத்தில் அசதியின்றி சுறுசுறுப்பாக எழவும் வசதியாக இருக்கும். சமையலறையில் அதிகமான நேரத்தை செலவிடாமல் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளுக்கான உணவுளையும் தயாரித்துவிடும்போது, மீதியுள்ள இரவு நேரங்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட நிறைய நேரம் கிடைக்கும்.
o  ஒரே நாளில் பலவகை உணவுகளை தயாரிப்பதை தவிர்ந்துக் கொள்ள வேண்டும். அதனால் சமையலுக்கான நேரம் மிகுதியாக செலவாவதைத் தவிர்க்கலாம்.
ஆரோக்கிய டிப்ஸ்:
o  உஷ்ணமான நாடுகளில் வசிப்போர் குளிர்ச்சி தரும் பொருட்களான பாதாம் பிசின், சப்ஜா விதைகள், நன்னாரி, கடல்பாசி, பனை நுங்கு போன்றவற்றை ஷர்பத்தாக செய்து அருந்த‌லாம். மற்றும் பழ வகைகள், பழ ஜூஸ்கள், மில்க் ஷேக் போன்ற ஏதாவது ஒன்றை இஃப்தார் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
o  ஸஹர் உணவுடனோ/உணவுக்குப் பிறகோ கெட்டித் தயிர் 1 கப் சுமார் (200 மில்லி) அளவு சாப்பிட்டால், இரவு கண் விழிப்பதாலும் சீதோஷ்ண நிலைகளாலும் ஏற்படும் உஷ்ணத்தை வெகுவாகக் குறைக்கும். உணவுண்ட பிறகு சாப்பிடுவது அல்சர், நெஞ்சு எரிச்சல் உள்ளவர்களுக்கு அருமருந்தாகும்.
o  குளிர்ச்சி தரும் பழங்களான தர்பூசணி, பன்னீர் திராட்சை, மங்குஸ்தான் பழம், ஆரஞ்சு, ஆத்தாப் பழம், ரம்புதான் பழம், செவ்வாழை இதுபோன்ற வகைகளில் எது கிடைக்கிறதோ அவற்றை இஃப்தார் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளரிப் பிஞ்சு சாலட் செய்தும் சாப்பிடலாம்.
o  ஸஹர் உணவில் கடல் உணவுகளான மீன், இறால் சமைப்பவர்கள் 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொண்டால் ஸ்மெல் இருக்காது. அத்துடன் புளிக்கு பதிலாக எலுமிச்சைச் சாறு சேர்ப்பது நல்லது.
o  நிறைந்த சத்துக்களைத் தரக்கூடிய பேரீத்த பழங்களை இஃப்தாரின்போது முடிந்தவரை கண்டிப்பாக சேர்த்துக் கொள்வது நல்லது.
o  எண்ணெயில் முக்கிப் பொரிக்கும் (Deep Fry) வகை உணவுகளைக் குறைத்துக் கொண்டு அவித்த உணவுகள், கஞ்சி வகைகள் மற்றும் பழங்களை தேவைக்கு தகுந்த விகிதத்தில் சாப்பிடலாம்.
o  சஹர் நேர உணவுகளை மசாலா, எண்ணெய், நெய், காரம், புளிப்பு போன்றவை அதிகம் சேர்க்காத வகையிலும், முடிந்தவரை குறைவாகவும் சாப்பிடுவது நல்லது.
o  நோன்பு வைத்தால் விடிந்தபிறகு சிலருக்கு தலைவலி வந்துவிடும். அவர்கள் ஸஹர் உணவுக்குப் பின் ஒரு கப் சூடான டீ (பால் கலந்தோ/கலக்காமலோ) அருந்தினால் தலைவலி பெரும்பாலும் வராது. ஆரோக்கியம் தரக்கூடிய லெமன் க்ராஸ் கிரீன் டீ கூட‌ அருந்தலாம்.
நன்மைகளைத் தேடிக்கொள்ள டிப்ஸ்:
o  என்னதான் முன்னேற்பாடுகளுடன் நாம் தயாராக இருந்தாலும் அதையும் மீறி அன்றாட வேலைகள் இருக்கதான் செய்யும். அப்படி தவிர்க்க முடியாத வேலைகளில் ஈடுபடும்போது வேலை செய்துக்கொண்டே திக்ரு, தஸ்பீஹ், ஸலவாத்களை சொல்லிக் கொண்டிருக்க‌லாம்.
o  இரவுத் தொழுகைக்கு தக்க துணையுடன் பாதுகாப்பான சூழ்நிலையில் சென்றுவர வாய்ப்புள்ள சகோதரிகள் இயன்றவரை பள்ளிக்கு சென்று ஜமாஅத்துடன் தொழுவதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.
o  சப்தங்கள் இல்லாத அமைதியான சூழல் கிடைக்கும்போதெல்லாம் திருக்குர்ஆனின் சிறிய/பெரிய சூராக்களை மனனம் செய்யலாம். அல்லது ஏற்கனவே மனனம் செய்து மறந்திருந்தால் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
o  இரவு நேரங்களில் தனிமையில் அமர்ந்து அதிகமாக துஆ செய்யலாம்.
o  அவரவர் குர்ஆன் ஓதும் வேகத்துக்கு தகுந்தமாதிரி ஒருநாளைக்கு இத்தனை ஜுஸ்உ என்று திட்டமிட்டு குறிப்பிட்ட நாட்களில் திருக்குர்ஆனை ஓதி முடித்தால் அதிகமான நாட்களுக்கு நீட்டிக்காமல், லைலத்துல் கத்ரு வரக்கூடிய‌ கடைசிப் பத்து நாட்களுக்கு முன்பே ஒருமுறையோ/இரண்டு முறைகளோ குர்ஆனை ஓதி முடித்துவிடலாம். இயன்றால் மீண்டும் கடைசிப் பத்தில் புதிதாகவும் ஓதத் துவங்கலாம்.
o  6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை நோன்பு நோற்கவும், 5 வேளைத் தொழுகை உட்பட சிறு சிறு அமல்களைச் செய்யவும் ஆர்வத்தைத் தூண்டுவதோடு, டிவி/கேம்ஸ்/இணையம் போன்றவற்றில் அவர்கள் டைம் பாஸ் பண்ணக்கூடிய மாதம் இதுவல்ல என்பதை அவர்களுக்கு புரியவைத்து, நம்முடன் சேர்ந்து அவர்களும் நன்மைகளைச் செய்யும் வகையில் அவர்களைக் கண்காணிக்கவேண்டும்.
o  வெள்ளிக் கிழமைகளில் அதிகமாக ஓதும் ஸலவாத்தினை ரமளானின் வெள்ளிக் கிழமைகளிலும் அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.
o  வெளியூரிலிருந்து நம்மைத் தேடி வரக்கூடிய மக்களுக்கோ, வீடு தேடிவரும் ஏழைகளுக்கோ, உறவினர்கள்/நண்பர்களுக்கோ நோன்பு திறக்கும் இஃப்தார் மற்றும் ஸஹர் உணவு ஏற்பாடு செய்து கொடுப்பது நன்மையான விஷயமே! ஆனால் சிலர் இஃப்தாருக்கென்றே பெரிய ஏற்பாடுகளைச் செய்து விருந்துக்கு மற்றவர்களை அழைப்பார்கள். அதற்காக‌ அன்றைய பொழுது முழுவதும் சமையல் அறையில் அவர்கள் செலவழித்துக் கொண்டிருப்பார்கள். இது தேவையற்ற/தவிர்ந்துக் கொள்ளவேண்டிய ஒன்று! (எல்லோரும் கூடி செய்யக்கூடிய, பொது இஃப்தார் நிகழ்ச்சிகள் என்றால் அது யாருடைய அமல்களையும் வீணாக்காது)
o  தூங்கி எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் முன் வரை ஒவ்வொரு நிலையிலும் ஓதவேண்டிய துஆக்களை அவ்வப்போது மறக்காமல் ஓதிக் கொள்ளுங்கள்.
o  நம்மால் இயன்றவரை அதிகமாக‌ ஸதகா (தர்மம்) செய்யவேண்டும். நாம் செய்யும் தர்மம் இஸ்லாம் காட்டிய முறையில் இருக்கவேண்டும். (சிலர் ஜ‌காத்தும் ஸதகாவும் ஒன்று என தவறாக விளங்கி வைத்துள்ளனர். இரண்டுக்குமுள்ள வித்தியாசங்களை பார்க்கவும்.)
o  அக்கம் பக்கத்தில் கூடிப் பேசி நேரத்தைக் கழிப்பது, விவாதங்கள்/தர்க்கங்கள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் பொழுதை ஓட்டுவது, அவசியத் தேவையின்றி இணையத்தில் நேரம் செலவழிப்பது போன்றவற்றைக் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். இயன்றவரை தொலைப்பேசியின் மூலமும்கூட வீணான பேச்சுக்களை பேசுவதைக் தவிர்ந்துக் கொள்ள‌வேண்டும். நோன்பின் நோக்கம் நிறைவேறும்படி நம் அமல்களை அமைத்துக் கொள்ளவேண்டும்.
o  ரமளானின் ஆரம்ப நாட்களின் இரவுகளைவிட கடைசிப் பத்து நாட்களின் இரவுகள் மிகவும் சிறப்பும், முக்கியத்துவமும் வாய்ந்ததாக இருப்பதால் இயன்றவரை இரவில் கண்விழித்து அமல்களைச் செய்ய முயற்சி செய்யவேண்டும். சில நேரங்களில் நம்மையும் மீறி தூக்கம் மேலிடும். அதுபோன்ற சமயங்களில் தையல், பின்னல் போன்ற பயனுள்ள கைவேலைப்பாடுகள் (Crafts) தெரிந்தவர்கள் அதை செய்துக் கொண்டே தூக்கத்தைக் கலைப்பதன் மூலம் தஸ்பீஹ், திக்ரு, ஸலவாத் மற்றும் கடைசிப் பத்துக்கான பிரத்யேக துஆ (“அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன், துஹிப்புல் அஃப்வ, ஃபஅஃபு அன்னீ”) போன்றவற்றை ஓதலாம்.
அல்லாஹுதஆலா நம் அனைவருக்கும் ஆரோக்கியமான உடல்நிலையுடன் ரமலான் நோன்புகளை நோற்கவும், அதிகமதிகமான நல்ல அமல்களை செய்து மறுமையில் அதன் முழு பலனை அடையவும் நல்லருள் புரிவானாக!
நன்றி “பயணிக்கும் பாதை”

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::

Post a Comment