Saturday, October 12, 2013

போலீஸ் பக்ருதீனும் புத்தூர் கைதுகளும் போலீசின் நடவடிக்கைகளும்!

போலீஸ் பக்ருதீனும் புத்தூர் கைதுகளும் 
போலீசின் நடவடிக்கைகளும்! 





====================================== 
''உன்னை கொல்லாம விடமாட்டேன்.இது வரைக்கும் 
21பேரை சுட்டிருக்கேன். உன்னையும் 
சுடாம விடமாட்டேன்.நான் சுடவில்லை 
என்றால் ஆம்பளையே இல்லை'' 

-என்கவுன்ட்டர் வெள்ளத்துரை 
======================================
''என்மரணம் அல்லாஹ் கையில் இருக்கிறது.
அது எப்படி நடக்குமோ அப்படித்தான் நடக்கும்.
நீ என்னை அநியாயமாக கொன்றால் நானும் 
உன்னை கொல்வேன'' 
-போலீஸ் பக்ருதீன் 
======================================

அதெப்படி என்று தெரியவில்லை....என்கவுண்டர் பண்ணச் செல்லும் போதெல்லாம் போலீசார் வெட்டுக்காயம் படுவது!இந்த கதையை தொடர்ந்து காவல்துறை ஒவ்வொரு சம்பவத்திலும் எழுதிக் கொண்டிருக்கிறது.

போலீசின் டார்ச்சருக்கு பயந்து தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் நெருங்கும் போது அவர்கள் பீதியுடன் தான் காணப்படுவார்கள்.இதுதான் மனோதத்துவ ரீதியாக யதார்தமானது. துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் பெரும் படையோடு வரும் காவல்துறையை எதிர்க்க முடியாது என்பது இப்படி தலைமறைவாக இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

போலீசையோ இராணுவத்தையோ எதிர்த்து நிற்பவர்கள் நவீன ஆயுதங்களுடன் தலைமறைவாக இருக்கும் போராளி குழுக்கள் 
தான்.போலீசிடம் சிக்கினால் பின்னி எடுத்துவிடுவார்கள் என்று பயந்து போய் தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்களல்ல.இந்த 
வகையை சேர்ந்தவர்கள் தான் பண்ணா இஸ்மாயில்,போலிஸ் பக்ருதீன்,பிலால் மாலிக்.

இவர்களால் அரிவாளாலும் (?!) குக்கர் கைப்பிடியாலும் (?!)தாக்கப்பட்டதாக கூறப்படும் போலீசாரின் படங்களை காவல்துறையால் வெளியிட முடியவில்லை என்பதே போலிசின் பொய் வாதத்திற்கு சான்று.

தமிழக ஹிந்துத்துவா தலைவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில்,ஒரு சமுதாயத்தை குறி வைத்து 
ஹிந்துத்துவாவும் மீடியாக்களும் பரப்புரை மேற்கொண்ட நேரத்தில் தமிழக டி.ஜி.பி ராமானுஜத்தின் அறிக்கை வெளியாகி இந்த பரப்புரைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.பொய் பரப்புரைகளை மேற்கொண்டவர்கள் அவமானத்திற்குள்ளாகி மௌனம் காத்தனர்,காரணம் அதே சமுதாயத்தை சேர்ந்தவர்களே கொலையாளிகள் என்பதையும் இந்த கொலைகள் மத விவகாரங்களுக்காக நடை பெறவில்லை தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்தது என்பதையும் டி.ஜி.பி தெளிவு படுத்தி இருந்தது தான்.

டி.ஜி.பி யின் அறிக்கையில் வேலூர் வெள்ளையப்பன்,சேலம் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரை கொன்றவர்கள் யார் என்று 
தெரியவில்லை.அவர்களை பற்றிய தகவல்களை தருபவர்களுக்கு இருபது லட்சம் பரிசளிக்கப்படும் என்ற தமிழக அரசின் செய்தியும் சொல்லப்பட்டிருந்தது.இந்த சமயத்தில் தான் போலிஸ் ஒரு கேம் ஆடியது.இந்த பரிசு அறிவிப்போடு சேர்த்து பண்ணா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன்.பிலால் மாலிக் படங்களைப் போட்டு மீடியாக்களுக்கு செய்தி தந்தது போலிஸ். அதாவது டி.ஜி.பியின் அறிக்கையில் இல்லாத இவர்களின் பெயர்கள் போலிஸ் ஆடிய கேம்மில் படங்களுடன் வெளியாகி,சேலம் ரமேஷ் கொலைக்கு இவர்கள் தான் காரணம் என்று கட்டமைக்கப்பட்டது

மீடியாக்களில் மூவரது படங்களும் வெளியான நிலையில்,இது குறித்து சேலம் கமிஷனர் மஹாலியிடம்,சேலம் மாலை முரசு 
நிருபர் கேட்டபோது இந்த படங்களையும் இந்த செய்தியையும் போலீஸ் வெளியிடவில்லை;அது பற்றி எதுவும் சொல்ல முடியாது என ஜகா என்றார் கமிஷனர்.போலிஸ் வெளியிடவில்லை என்றால் வேறு யார் வெளியிட்டது?

ஆனால் அப்போது மேற்கண்ட மூவரும் மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு வழக்கிற்காக போலீசாரால் தேடப்பபட்டு 
வந்தவர்கள்.இந்துத்துவா தலைவர்களின் படுகொலைகளை கண்டித்து இந்துத்துவா அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்திய காரணத்தால் அவர்களை திருப்திபடுத்தவோ அல்லது உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் தலைமறைவாக இருக்கும் இந்த மூவரில் பக்ருதீன் மீது இந்த பழியை தூக்கி போட்டு ரமேஷ் கொலையின் குற்றவாளியை போலிஸ் கண்டுபிடித்துவிட்டதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்தவோ முயற்சி செய்திருக்கிறது போலிஸ் என்று தான் புரிய முடிகிறது.

ரமேஷ் கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சியான காவலாளி,வந்தவர்கள் 20-23 வயது கொண்டவர்கள் என்று வாக்கு மூலம் கொடுத்திருப்பது இங்கேகவனிக்கத்தக்கது. மேற்கண்ட மூவரும் குறைந்த பட்சம் 35 ஐ கடந்தவர்கள்.

ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வேலூர் வெள்ளையப்பன் கொலைக்கு காரணமானவர்கள் இது வரை கண்டு 
பிடிக்கப்படவில்லை.இந்நிலையில் தலைமறைவாக இருந்த பக்ருத்தீன் தான் ரமேஷ் மற்றும் வெள்ளையப்பன் கொலை குற்றவாளி என்றால் பக்ருதீன் சேலத்திற்கு வந்து ரமேஷை போட்டு தள்ளி விட்டு போய் இருக்கிறார் அல்லது எங்கோ இருந்து கொண்டு கூலிப்படையை அனுப்பி கொலை செய்திருக்கிறார் என்று பொருள் கொள்ள முடியும்.இதில் இரண்டாவதை இப்போது போலீஸ் சொல்கிறது.முதலாவதை சொன்னால்,தலைமறைவாக இருக்கும் ஒருவர்,அதுவும் காவல்துறையின் பல பிரிவுகளால் தேடப்படும் ஒருவர் சேலம் நகருக்குள் பிரவேசித்து கொலை செய்து விட்டு போய் இருக்கிறார் போலிஸ் என்ன பிடுங்கிக்கொண்டிருந்ததா என்ற கேள்விகள் போலிசை நாறடித்து விடும்.கமிஷனர் மஹாலி காவல்துறை தலைமையால் கேள்விகளுக்கு உட்படுத்தப்படுவார்.

பக்ருதீன் எங்கிருந்தோ கூலிப்படையை ஏவி கொலை செய்தார் என்று போலிஸ் சொல்வதற்கும் ஆதாரம் இல்லை.இதுவரை எந்த கூலிப்படையினரும் கைது செய்யப்பட்டு,பக்ருதீன்தான் எங்களை அனுப்பினார் என்றும் வாக்குமூலம் தரவில்லை.குறைந்த பட்சம் இப்படி ஒரு ஜோடிப்பை கூட காவல்துறையால் செய்முடியவில்லை. மறந்திருப்பார்களா என்று தெரியவில்லை. 

ஆக, திட்டமிட்டு இந்த படுகொலை வழக்குகளை தலைமறைவாக இருந்த பக்ருதீன் மீது போட்டிருக்கிறது போலீஸ் என்று கருத இடமுண்டு இவர்களை பயங்கரவாதிகளாக போலீசும் மீடியாக்களும் சித்தரிக்கின்றன....மதுரை பைப் வெடி குண்டு வழக்கு பக்ருத்தீன் மீது சுமத்தப்படுவதற்கு முன்பு வரை சில வழக்குகளில் சிறை சென்று விடுதலையாகி மதுரை நெல்பேட்டை பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தவர்தான் பக்ருதீன்.அப்போது வரை இவர் காவல்துறையின் பார்வையில் பயங்கரவாதி இல்லை. இவருக்கும் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரைக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாக இவர் மதுரையை விட்டு தலைமறைவான பின்னர் தான் பயங்கரவாதியாக அடையாளப்படுத்தப்பட்டார்.இதற்கு காரணம் மதுரை காவல்துறையோடு இவருக்கு ஏற்பட்ட மோதல் போக்குதான்.

கடந்த 07/04/2010 அன்று மதுரை கரீம்ஷா பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு வீட்டில் திருட வந்த திருடனை பிடித்து போலீசில் 
ஒப்படைத்திருக்கிறார் பக்ருதீன்.இந்த வழக்கை பக்ருதீன் மீதே திருப்பி இருக்கிறது நெல்பேட்டை போலீஸ்.

மதுரை ஜே.எம்.கோர்ட்டில் இதற்காக கையெழுத்து போட்டு வந்த நிலையில் மதுரையில் இருந்த பக்ருதீன் அக்காலகட்டத்தில், கலவர வழக்கு ஒன்றின் 
ட்ரையலுக்காக ஸ்பெஷல் கோர்ட்டில் ஆஜராக தென்காசியிலிருந்து மதுரைக்கு 5 பேர் வந்தனர்.இவர்கள் பக்ருதீனுக்கு ஏற்கெனவே சிறையில் பழக்கமானவர்கள் என்பதால் இவர்களை மதிய உணவிற்காக நெல்பேட்டைக்கு கூட்டி வந்தார் பக்ருதீன்.இவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது அங்கே வந்த மதுரை B1காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பால குமார்,''யாருடா நீங்க எல்லாம் வண்டியிலே ஏறுங்கடா''என்று சொல்ல,''அவங்க ட்ரையலுக்கு வந்திருக்காங்க.நான் தான் இங்க கூட்டி வந்தேன் சாப்பிட.வேணும்னா மதுரை தென்காசி உளவு பிரிவு போலீசை கேட்டு பாருங்க''என்று பக்ருதீன் சொல்லி இருக்கிறார்.''அப்ப நீ வண்டியிலே ஏறு'' என்று இன்ஸ்.பாலகுமார் பக்ருதீனிடம் சொல்ல..''ஏற்கெனவே உங்களை நம்பி வந்தேன்.வந்த இடத்துல எம்மேல இரண்டு வழக்கை போட்டீங்க ஒரு குண்டாஸ் போட்டீங்க.அதை உடைச்சிட்டு இப்பதான் வெளியில வந்திருக்கேன்.உங்களை நான் நம்பமாட்டேன்'' என்று பகுருதீன் சொல்லிக்கிட்டிருந்த போதே அங்கே வந்த மதுரை A.C என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை(அப்போது இவர் மதுரை A.C ) ''என்னடா வண்டியில ஏறுன்ன்னா ஏறமாட்டேன்குற'' என்று சொல்லிக்கொண்டே பக்ருதீனின் பனியனை கொத்தாக பிடித்து துப்பாக்கியை அவர் நெற்றிப்பொட்டில் வைத்து ''நீ வண்டியில ஏறலைன்னா சுட்டுருவேன்'' என மிரட்டி இருக்கிறார்.இதற்கும் அசையாத பக்ருதீன்...''நான் செத்தாலும் இந்த ஏரியாவ விட்டு வரமாட்டேன்'' என்று எகிற...இருவருக்கும் வாய்த்தகராறு 
ஏற்பட்டிருக்கிறது.அப்போது வெள்ளதுரையுடன் இருந்த 2 எஸ்.ஐ.,ஒரு இன்ஸ்பெக்டர்,20 காவலர்கள் சேர்ந்து பக்ருதீனை 
அடித்திருக்கிறார்கள்.

இதனைப் பார்த்த அப்பகுதி கடைக்காரர்கள் இடை மறித்து பக்ருதீனை போலீசிடமிருந்து மீட்டுள்ளனர்.பக்ருதீனை அடித்தபோது பக்ருதீன் தள்ளிவிட்டதில் வெள்ளத்துரை கீழே விழுந்திருக்கிறார்.இது வெள்ளதுரைக்கு அவமான உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.அப்பொழுது வெள்ளத்துரை,''உன்னை கொல்லாம விடமாட்டேன்.இது வரைக்கும் 21பேரை சுட்டிருக்கேன்.உன்னையும் சுடாம விடமாட்டேன்.நான் சுடவில்லை என்றால் ஆம்பளையே இல்லை'' என கோபத்தில் கொந்தளிக்க, பக்ருதீனோ,''என்மரணம் அல்லாஹ் கையில் இருக்கிறது.அது எப்படி நடக்குமோ அப்படித்தான் நடக்கும்.நீ என்னை அநியாயமாக கொன்றால் நானும் உன்னை கொல்வேன'' என பதிலுக்கு எகிறி இருக்கிறார்.இந்த செய்தியை ஜூலை 23-29 தேதியிட்ட மக்கள் ரிப்போர்ட்டில், 'பண்றதை சொல்ல மாட்டேன்;சொல்றதை பண்ண மாட்டேன்-வைகை நகரை வெலவெலக்க வைக்கும் என்கவுன்ட்டர் வெள்ளத்துரை' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.இதில்,பக்ருதீன் குடும்பத்தினர்,வெள்ளத்துரை என இரு தரப்பையும் தொடர்பு கொண்டு அவர்களின் விளக்கங்களை அப்படியே பதிவும் செய்திருந்தோம். 

இந்நிலையில்,மறுநாளிலிருந்து பக்ருதீனை தீவிரமாக தேடத் துவங்கியது மதுரை காக்கி டீம்.பக்ருதீனின் சகோதரன் தர்வீசை 
.பிடித்து சென்று துன்புறுத்தியது.குடும்பத்தினரையும் மிரட்டியது.இது குறித்து முதல்வரின் தனி பிரிவுக்கு கூட அவர்கள் கடிதம் எழுதினர்.போலீசின் பிடியில் சிக்காமல் அப்போது தலைமறைவான பக்ருதீனை தான் இப்போது சென்னை பெரிய மேட்டில் பிடித்ததாக சொல்கிறது போலீஸ்.
பக்ருதீன் தலைமறைவான நிலையில்,அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில்,அத்வானியின் வருகையையடுத்து பைப் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்தது.இந்த வழக்கை பக்ருதீன் மீது போட்டது மதுரை போலீஸ்.ஆனால்,மதுரையின் முக்கிய பி.ஜே.பி பிரமுகர் ஒருவரே முஸ்லிம்களுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.இந்த வழக்கு திசை திருப்பப் படுகிறது.மதுரை முஸ்லிம்களில் பலர் எனது நண்பர்கள் என்று நம்மிடம் சொன்ன அவர், அத்வானி பயணத்தில் சென்ற கான்வாய்க்கு ஓட்டுனர்களாக இருந்த அனைவரின் மொபைல் எண்கள்,அவர்களின் விபரங்களை போலீஸ் அதிகாரிகள் என்னிடம் தான் வாங்கினார்கள்.இதற்கு முன் அத்வானி போகும் பாதையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டிருந்தனர் போலீசார்.என்றும் சொன்னார்.இதையும் அப்போது மக்கள் ரிப்போர்ட்டில் எழுதி இருந்தோம்.

பக்ருதீன் தலைமறைவானதன் விளைவு,இன்று அவர் மீது ஆடிட்டர் ரமேஷ்,வெள்ளையப்பன் கொலை வழக்கும் 
சுமத்தப்பட்டிருக்கிறது.ஆயினும் அவரை போலீசார் மற்றும் மீடியா சொல்வது போல் பயங்கரவாதி என்று ஏற்றுக்கொள்ள 
முடியாது.அவர் மீது போலீஸ் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு சந்தேகத்திற்கிடமின்றி நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கவில்லை.அதனால்,ஒருவரது குற்றம் நீதிமன்றத்தின் மூலம் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றவாளியல்ல.என்ற சட்ட நெறிமுறைபடி பக்ருதீன் பயங்கரவாதியோ,போலீஸ் சுமத்தும் வழக்குகளில் குற்றவாளியோ அல்ல.

இதே போல மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு வழக்கு சுமத்தப்பட்டுள்ள பண்ணா இஸ்மாயில்,பிலால் மாலிக் ஆகியோருக்கும் இதே நிலை தான்.மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு போலீஸ் சொல்லும் ஒரே ஆதாரம்,பா.ஜ.க அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவான மங்கலான படக்காட்சி தான்.இதில் இருப்பது பண்ணா இஸ்மாயில் என்கிறது போலீஸ்.

ஆனால்,இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கிசான் புஹாரி உள்ளிட்டவர்கள் அந்த படத்தை பார்த்து இவர் 
பண்ணா இஸ்மாயில் இல்லை என தெரிவித்துள்ளனர் என்கின்றனர் இவர்களது வழக்கறிஞர்கள்.இப்போது பண்ணா இஸ்மாயில் கைதாகி இருக்கும் நிலையில் காமிரா பதிவில் இருப்பது இவர் தானா என தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி சந்தேகமற நிரூபிக்க வேண்டியது போலீஸ் தான்.இந்த வழக்கில் நிறைய சந்தேகங்களை போலீஸ்தெளிவுபடுத்தவில்லை.குண்டு வெடிப்பு நடத்த பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு ஆர்.எஸ்.எஸ்.காரருக்கு சொந்தமானது என்று சொல்லும் போலீஸ் அது குறித்து விசாரிக்கவே இல்லை என்பது உட்பட பல சந்தேகங்கள் கர்நாடக முதல்வரிடம் தமிழக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் சமர்பிக்கப் பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதனால் இப்போது வரை மதுரை பைப் வெடிகுண்டு,ஆடிட்டர் ரமேஷ் ,வெள்ளையப்பன் கொலை வழக்குகளில் பக்ருதீனும், 
மல்லேஸ்வரம் குண்டுவெடிப்பில் பண்ணா இஸ்மாயில்,பிலால் மாலிக் ஆகியோரும் போலீசாரால் சிக்க சிக்கவைக்கப்பட்திருக்கிறார்கள். 

என்ற கூற்றை மறுக்கும் ஆதாரங்கள் போலீசாரிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.உண்மை என்றால் அதனை நீதி மன்றத்தில் நிரூபித்து இவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கி தரவேண்டும் என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது.ஏனெனில் இவர்களால் மதுரை,மேலப்பாளையம்,கோவை முஸ்லிம்கள் பட்ட அவமானங்கள்,போலீஸ் சித்திரவதைகள் 

கொஞ்ச நஞ்சமல்ல.இவர்கள் அப்பாவிகளாக இருந்து தண்டனை அடைந்து விடக்கூடாது என்பது தான் நமது கவலையே 
தவிர,இவர்கள் குற்றவாளிகள் என்றால் உடனடியாக தண்டனைக்கு உட்படுத்தப் படவேண்டும்.இவர்களுக்காக எந்த முஸ்லிமும் குரல் எழுப்ப மாட்டார்கள்.

பக்ருதீனைப் பொறுத்தவரை மதுரையிலிருந்து தலைமறைவான சில நாட்களிலேயே அவர் நீதிமன்றத்தில் சரணடைந்து எதற்காக தலைமறைவாக நேர்ந்தது என்று விளக்கம் அளித்திருந்தால் இன்று அவரது நிலை வேறு கட்டத்தை அடைந்திருக்கும்.அதை அவர் 

சியா தவறியதன் விளைவே இன்று பல வழக்குகளை தன மீது சுமந்து நிற்பது என்பதைத் தவிர இதில் வேறென்ன சொல்ல 
முடியும்.?
 —

நன்றி;------
https://www.facebook.com/reporterfaisal/posts/518493404894458