மதவாத பாரதிய ஜனதாவுக்கு ஒரு மதச்சார்பற்ற முகமூடியை 17 ஆண்டுகளாக வலிந்து அளித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் தற்போது கூட்டணியை முறித்திருக்கிறது. இந்த முகமூடி உறவுக்கு மோடி பிரதமரானால் கேடு என்பது நிதீஷ் குமாரின் முடிவு.
2005 மற்றும் 2010 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து வென்று இரண்டாவது முறையாக முதலமைச்சராக நீடிப்பவர் நிதீஷ். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது நரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு வருவதாக இருந்ததை தடை செய்து வெற்றி பெற்றவர் அவர். பீகாரில் முசுலீம்கள் வாக்கு பறிபோய்விடக்கூடாது என்பதற்கே இந்த மோடி தடை. அன்று பாஜகவும் இந்த தடையை சந்தர்ப்பவாதமாக ஏற்றுக் கொண்டது.
தற்போது அடுத்த ஆண்டில் வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தும் பாஜகவின் முடிவு அவருக்கு உவப்பானதில்லை. காரணம் கொள்கையல்ல, இசுலாமியர் வாக்குகள் பறிபோய்விடும் என்ற சுயநலத்திலிருந்து வரும் பிழைப்புவாத பயம்தான்.
கோவா கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக, அத்வானி ஆதரவாளர்களின் எதிர்ப்பையும் மீறி மோடியை நியமிக்கப்பட்டது துவக்கம் மட்டுமல்ல அவர்தான் பிரதமர் பதவிக்கான ஆள் என்பது நிதீஷ் குமாருக்கு உடன்பாடில்லை.
இதன் தொடர்ச்சியாக நேற்று கவர்னர் டி.ஒய் பாட்டிலை பார்த்து கூட்டணி முறிவை தெரிவித்து, 11 பாஜக அமைச்சர்களை நீக்குமாறு பரிந்துரைத்திருக்கிறார். மேலும் ஜூன் 19 அன்று சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்ட சபையில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 118 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மைக்குரிய எண்ணான 122-ஐ அடைய இன்னும் 4 உறுப்பினர்கள் வேண்டும். அதை ஏதாவது சுயேச்சைகளைக் கொண்டு அடைந்து விடுவார்கள். அதேநேரம் 91 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக, 31 உறுப்பினர்களை குதிரை பேரத்தில் வாங்கினால் அவர்களே ஆட்சி அமைக்கலாம். ஆனாலும் இது நிறையவே சிரமம் என்பதால் நிதீஷ் குமார் ஆட்சியை தொடருவதில் அநேகமாக பிரச்சினை இல்லை.
ஆனாலும் பாஜக இந்த பிரிவை சும்மா விடவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெயரைச் சொல்லி முதலமைச்சரான நிதீஷ் குமார் மானமுள்ளவராக இருந்தால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அறம் பேசுகிறது பாஜக. நிதீஷ் அமைச்சரவையில் துணை முதல் அமைச்சராக இருந்த பாஜகவின் சுஷில் குமார் மோடி ஐக்கிய ஜனதா தளத்தின் முடிவை நம்பிக்கை துரோகம் என்றதோடு வரும் 18-ம் தேதி பீகார் பந்தையும் அறிவித்திருக்கிறார். கூட்டணி முறிவுக்கெல்லாம் நடத்தப்படும் வேலை நிறுத்தத்தை பார்க்குமளவு பீகார் மக்கள் ஏமாளிகளாக இருக்கிறார்கள்.
பீகாரில் இப்படி உறவு முடிந்திருப்பதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அமைப்பாளர் பதவியில் இருந்து சரத் யாதவும் ராஜினாமா செய்திருக்கிறார். “இந்த தருணம் கொள்கையா இல்லை சமரசமா என்று முடிவு செய்யும் நேரம், கொள்கைக்காக நாங்கள் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று முடிவெடுத்தோம், அதனால் எந்த விளைவையும் சந்திக்க தயாராக உள்ளோம்” என்றெல்லாம் முழங்கியிருக்கிறார் நிதீஷ் குமார்.
தேர்தலுக்கான சந்தர்ப்பவாதங்கள் கூட எப்படி கொள்கையாக திரிக்கப்படுகின்றன் பாருங்கள்! பாஜகவில் மோடி மட்டும்தான் இந்துத்துவ கேடியா, அத்வானி போன்றவர்களெல்லாம் சைவப்புலியா என்ன? இந்த 17 ஆண்டுகளில் எத்தனை எத்தனை கலவரங்கள், சம்பவங்களையெல்லாம் இந்து மதவெறியர்கள் நடத்தியிருக்கிறார்கள்? 2002 குஜராத் கலவரம் மோடி தலைமையில் நடக்கும் போது இதே நிதீஷ் குமார் ரயிலைவே அமைச்சராக வாஜ்பாயியின் தலைமையில் இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் வராத மதச்சார்பற்ற உணர்வு இப்போது பீறீட்டெழுவது ஏன்? இத்தனை நாட்களாக எங்கே ஒளிந்து கொண்டிருந்தது அந்த உணர்வு?
பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளத்திற்குமான உறவே சந்தர்ப்பாவாதத்தின் அடிப்படையில் உருவான ஒன்றுதான். காங்கிரசையும், லல்லு பிரசாத் யாதவையும் முறியடிப்பதற்கு இரண்டு கட்சிகளும் ஒன்று சேர தேவை இருந்தது. அதற்காக சேர்ந்தார்கள். அதற்காக என்றே நிறைய சமரசங்கள் செய்து கொண்டார்கள். தற்போது இரண்டு முறை வெற்றி பெற்றிருப்பதால் இனி தனிக் கச்சேரியே நடத்தலாம், கூட்டணி ஆவர்த்தனம் தேவையில்லை என்று நிதீஷ் குமார் யோசிக்கிறார். மேலும் மைய அளவில் பாஜக மதவாதக் கட்சி என்றாலும் பீகாரில் மோடியைக் கூட அனுமதிக்கவில்லை எனுமளவு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம், தற்போது அந்த மோடியே பிரதமருக்கான வேட்பாளர் என்றால் முதலுக்கே மோசமில்லையா என்று அவர் பார்க்கிறார்.
பாஜகவோ அத்வானி போன்ற ஓய்வுபெறும் வயதுடைய ஜெனரல்களை கடாசி விட்டு முதலாளிகள், ஊடகங்கள், வட இந்திய இந்து நடுத்தர வர்க்க ஆதரவு பெற்ற மோடியை முன்னிறுத்தி ஏதும் பிழைக்க முடியாதா என்று முடிவெடுத்து விட்டது. அதன்படி நிதீஷ்குமாரின் பீகார் கணக்குகளும், பாஜகவின் இந்தியக் கணக்குகளும் இணக்கமாக சேராது என்பதாலேயே இந்த பிரிவு நடந்திருக்கிறது. இதற்கு மேல் இதை கொள்கையால் வகுத்து பார்ப்பது அந்த வார்த்தைக்கே அவமானம்.
பீகாரின் நிலப்பிரபுத்துவ ‘மேல்’ சாதி மற்றும் இந்துத்துவ நடுத்தர வர்க்கத்தினை சமூக அடிப்படையாகக் கொண்ட பாஜகவை கூட்டாளியாக வைத்திருப்பதை விட நரேந்திர மோடி ஒன்றும் அதிகமில்லை. அதே போன்று எந்த ‘வளர்ச்சி’-க்கென்று மோடி போற்றப்படுகிறாரோ அதே ‘வளர்ச்சி’க்காக நிதீஷும் பாராட்டப்படுகிறார். இரண்டுமே டுபாக்கூர் வளர்ச்சி என்பதற்கு வினவிலேயே நிறைய கட்டுரைகள் ஆதாரங்களோடு இருக்கின்றன. தற்போது இந்த இரண்டு ‘வளர்ச்சி’ வாள்களும் ஒரு உறையில் முடங்க முடியாது என்பதுதான் இதன் கவித்துவ நீதி.
11.11.2011-ம் தேதியில் 11 மணி 11 நிமிடம் 11 விநாடியில் 11 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த நிதீஷ் குமார் இது போன்ற ‘வரலாற்று’ முக்கியத்துவம் வாய்ந்த தேதிகளில் முடிவெடுப்பதுதான் தனது வெற்றிக்கு காரணம் என்று முன்னர் சொல்லியிருந்தார். இந்த விசயத்தில் இவருக்கு போட்டியாளர் ராகுகாலம் – நல்ல நாள் – முகூர்த்தம் பார்த்து முதலமைச்சராவதற்கு நாட்கணக்கில் காத்திருந்த புதுவை ரங்கசாமி மட்டும்தான்.
அந்த வகையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருக்குள்ளும் ஒரு இந்துத்துவவாதி ஒளிந்திருக்கிறான். அதே நேரம் இசுலாமியர் வாக்கு வேண்டும், பாராளுமன்ற தேர்தலில் ஒரு முக்கிய சக்தியாக வருவதற்கு நிறைய தொகுதிகள் வேண்டும் என்று பல கணக்குகளோடு இந்துத்வவாதிகளின் குத்தகைதாரரான பாஜகவோடு மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது.
இறுதியாக மோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று பொறி பறக்க குதிக்கும் பாஜக, இந்த பிரிவுக்கு பிறகு சிவசேனா, அகாலிதளம் எனும் இரண்டு கட்சிகளோடு மட்டும் புலம்ப முடியும். அந்த வகையில் பார்த்தால் மோடிக்கேற்ற ஜாடி குஜராத்தை தாண்டி எங்கும் இல்லை என்பதே நிதர்சனம்.
நன்றி......
http://www.vinavu.com/2013/06/17/bihar-nithishkumar-bjp-split/
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment