ஆளூர் ஷாநவாஸ்
[ என்னதான் பிரச்சனை பா.ம.க.வுக்கு? அல்லது ராமதாசுக்குத்தான் என்ன ஆயிற்று?
இந்த ஒற்றை கேள்வியின் விடையில்தான், இன்றைய பிரச்சனைகளின் மொத்த சாரமும் அடங்கியிருக்கிறது.
பா.ம.க.வுக்கு இப்போது என்ன பிரச்சனை என்று தெரிய வேண்டுமெனில், முதலில் பா.ம.க.வைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.]
தர்மபுரியில்
தலித்துகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, தமிழகத்தின் வடமாவட்டங்களில்
நடத்தப்படும் சாதி வெறியாட்டங்களை காணும்போது, நாகரிகமுள்ள ஒரு
சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்ற ஐயம் ஏற்படுகின்றது. கல்லூரிக்கு சென்ற
இடத்தில் காதல் வயப்பட்டு சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடியைக்
காரணம் காட்டி, ஒரு சமூகத்தையே குறிவைத்துக் குதறும் கொடூரம் அரங்கேறி
வருகின்றது.
ஈராக்கைக்
கைப்பற்ற ஒரு பேரழிவு ஆயுதம் போல், ஆப்கானைச் சூறையாட ஒரு இரட்டை கோபுரத்
தாக்குதல் போல், பாபர் மசூதியை இடிக்க ஒரு ராமர் கோயில் போல், குஜராத்
கலவரத்தை நடத்த ஒரு கோத்ரா ரயில் எரிப்பு போல், கோவை முஸ்லிம்களின் உயிரைப்
பறிக்கவும், உடமைகளை அழிக்கவும் ஒரு போலீஸ்காரர் செல்வராஜ் படுகொலை போல்,
தலித் மக்களை வேட்டையாடுவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட காரணம்தான், காதல்
நாடகத் திருமணம்.
எளிய
மக்களை வேட்டையாடும் முன் வலிமையானவர்கள் செய்யும் முதல் வேலை, அவர்களின்
மீது தப்பபிப்ராயத்தை உருவாக்குவதே ஆகும். எளியோர் மீதான வெறுப்புணர்வை
பொதுப்புத்தியில் ஆழ விதைத்த பிறகே, தன் திட்டத்தை செயல்படுத்துகிறது
ஆதிக்க வர்க்கம். தாக்கப்படும் மக்கள் மீது மற்ற எவருக்கும் பரிவு
வந்துவிடாமல் பார்த்துக் கொள்வதிலேயே பாசிசத்தின் வெற்றி
அடங்கியிருக்கிறது. 'முஸ்லிம்கள் எங்கு பார்த்தாலும் குண்டு வைக்கிறார்கள்;
அதனால் மோடி செய்தது சரிதான்' என்று வெகுமக்களைச் சொல்ல வைத்ததுபோல்,
'தலித்துகள் எங்கு பார்த்தாலும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்; அதனால்
ராமதாஸ் செய்வது சரிதான்' என்று சொல்ல வைக்கிறது பாசிசம்.