Monday, March 26, 2012

லிவ்விங் டுகதர் ...!

இந்தியாவின் குடும்ப அமைப்புகளும், கண்ணியமான காதலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக மக்களால் சிலாகிக்கப்பட்டது. கவனிக்கவும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தான் ! இப்போது இந்தியாவின் கலாச்சார மாறுதல்கள் மேலை நாடுகளின் கலாச்சாரச் சாயலையே ஈயடிச்சான் காப்பியடிக்கின்றன. கலாச்சாரங்களைப் பொறுத்தவரை தண்ணீரை விடுத்து, பாலை அருந்தும் அன்னப்பறவையாய் இந்தியா இப்போது இல்லை. பாலை விடுத்துத் தண்ணீரை அருந்தும் பறவையாக உருமாறியிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
“மேலை நாடுகளிலெல்லாம் டைவர்ஸ் ரொம்ப சகஜமாம். கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துலேயே பிரிஞ்சுடறாங்களாம்… ” என கன்னத்தில் கை வைத்து நாம் அங்கலாய்த்த காலம் ஒன்று உண்டு. இப்போதோ, நம்ம ஊரிலேயே பத்துக்கு நாலு இளம் ஜோடிகள் டைவர்ஸ் செய்து கொள்ளலாமா என பேசித் திரிகிறார்கள். நகர்ப்புறங்களில் மணமுறிவுகள் சகட்டுமேனிக்கு எகிறிக்கொண்டிருப்பதாய்ச் சொல்கின்றன புள்ளி விவரங்கள்.
“அடி ஆத்தி…. அமெரிக்கால கல்யாணம் பண்ணாமலேயே ஆணும், பெண்ணும் சேர்ந்து தங்கறாங்களாமே”  ஒரு காலத்தில் கலாச்சார அதிர்ச்சியாய் பேசப்பட்ட இத்தகைய வாசகங்கள் இப்போது நம்மைச் சலனப்படுத்துவதில்லை. காரணம் இந்தியாவிலேயே இந்த சமாச்சாரம் படு வேகமாகப் பரவி வருகிறது. லிவ்விங் டுகதர் என ஸ்டைலான பேருடன் !  போதாக்குறைக்கு “இதெல்லாம் தப்பில்லை “ என உச்ச நீதிமன்றமே தனது பொன்னான தீர்ப்பை வழங்கி இளசுகளின் மோகத்தில் பால் வார்த்திருக்கிறது. “மணப்பெண் கன்னியாய் இருக்க வேண்டுமென படித்த ஆண்கள் நினைப்பதில்லை” சொல்லி ஒரு நடிகை வாங்கிக் கட்டிக்கொண்டது மறந்திருக்காது. அப்போது பரபரப்பாய் இருந்த விஷயத்தை  சுப்ரீம் கோர்ட்டே இப்போது அங்கீகரித்து ஆசீர்வதித்திருக்கிறது.
இதெல்லாம் என்ன பெரிய சமாச்சாரம் என்பது போல அடுத்த புயல் புதிதாய்க் கரை கடந்திருக்கிறது. அதுதான் வாடகை மனைவி கலாச்சாரம். வாடகை மனைவியென்றதும் ஏதோ குழந்தையில்லாதவர்களுக்காக தனது கருவறையை வாடகைக்கு விடும் வாடகைத் தாயை நினைத்து விடாதீர்கள். அது வேறு இது வேறு. வாடகை மனைவி என்பது தற்காலிக மனைவி. இன்னொரு விதமாகச் சொல்ல வேண்டுமென்றால் “கொஞ்ச நாளைக்கு மனைவிபோல” வாழ்வது !
இன்றைய கார்ப்பரேட் கலாச்சாரமும், அங்கே புழங்கும் அதீத பணமும் இத்தகைய விபரீத உறவுகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கின்றன. இதற்கென்றே இருக்கும் புரோக்கர்கள் ஆண்களுக்கு மனைவியரை தயார் செய்து கொடுக்கிறார்கள். மனைவியர் பெரும்பாலும் வட நாடுகளிலிருந்து வாடகைக்காய் அழைத்து வரப்படும் பெண்கள்.
ஒரு வாரத்துக்கு மனைவியாய் இருக்க ஒரு கட்டணம், ஒரு மாதத்துக்கு கொஞ்சம் சலுகை விலையில் இன்னொரு கட்டணம் என இதன் பின்னணியில் நிழல் நிறுவனங்களே இயங்குகின்றனவாம். வேலை அழுத்தத்திலும், பணப் புழக்கத்திலும் இருக்கும் ஆண்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு மனைவியுடன் (!) ஊட்டி, கோடைக்கானல் எங்காவது போய் கொஞ்ச நாளைக்கு அடைக்கலமாகிவிடுகின்றனர். ரெடிமேட் தாலி இலவசமாகக் கிடைப்பதால் இவர்களுக்குக் ஹோட்டல்களில் இடம் கிடைப்பது முதல், பொது இடங்களில் சில்மிஷத்துக்கான அங்கீகாரம் கிடைப்பதுவரை எந்தச் சிக்கலும் இல்லை.
ஒருவாரமோ, இரண்டு வாரமோ புதிய துணையுடன் நேரத்தையும், பர்ஸையும் கரைத்துவிட்டு கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லாமல் ஆண்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறார்கள். பார்த்த வேலைக்குச் சம்பளம் வாங்கிக் கொண்டு ஊருக்குக் கிளம்பி விடுகிறார்கள் பெண்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் ஏழ்மை நிலையிலுள்ள மக்களிடையே இந்த பழக்கம் இருந்ததை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. ஒரு மாதத்துக்கோ, இரண்டு மாதங்களுக்கோ தனது மகளையே வாடகை மனைவியாய் அனுப்பி வைக்கும் துயரத்தை அது படம்பிடித்தது. அது வறுமையின் உச்சத்தில் நிகழ்ந்த துயரம் என்றால், இப்போது நடப்பதோ மோகத்தின் வேகத்தில் நடக்கும் கொடுமை எனலாம்.
மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு வாடகைக்கு பெண்களை அழைத்து வந்த தரகர்களை கடந்த மாதம் காவல்துறை கைது செய்தது. இந்த வாடகை மனைவி சமாச்சாரங்களின் பல விஷயங்கள் அப்போது வெளிச்சத்துக்கு வந்தன. இதில் இன்னொரு துயரம் என்னவென்றால், இதில் சம்பாதிப்பதெல்லாம் புரோக்கர்கள் தான். பெண்களுக்குப் பத்தாயிரம் என்றால், அதே போல பத்து மடங்கு வரை இவர்களுக்குக் கிடைக்கிறதாம் !
எப்படிப் பார்த்தாலும் இது ஒரு ஹைடெக் விபச்சாரத் தொழில் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த தொழிலில் கல்லூரி மாணவிகள் போன்றவர்களும் ஈடுபடுவது தான் திடுக்கிட வைக்கிறது. படிக்க பணம் வேண்டும், பாக்கெட் மணிக்கு காசு வேண்டும் என்றெல்லாம் காரணம் சொல்லி இந்த தொழிலில் இவர்கள் விரும்பியே வருகிறார்களாம்.
இந்தியாவில் விபச்சாரத் தொழில் ஒன்றும் புதிதல்ல. பண்டைய தேவதாசிகள் கதைகளில் தெரிவது கூட பாலியல் தொழிலின் மத பிம்பம் தான். இன்றைக்கு இந்தியாவில் குறைந்த பட்சம் 28 இலட்சம் பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்கிறது மினிஸ்ட்ரி ஆஃப் விமன். இதில் 35 சதவீதம் பேர் பதினெட்டு வயதுக்கு முன்பே இந்தத் தொழிலுக்குள் தள்ளப்பட்டவர்கள்.
மும்பையில் மட்டுமே ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர். எனவே பாலியல் தொழிலில் பெண்கள் ஈடுபடுவதொன்றும் புதிதல்ல. அந்த விஷயம் சமூகத்தின் எல்லா திசைகளிலும் சல்லிவேரைப் போல விரிந்து பரவியிருப்பது தான் கவலைக்குரிய விஷயம். கணவன் மனைவி எனும் புனிதமான உறவையே கொச்சைப்படுத்தும் விதமாக நடக்கும் இந்த பிஸினஸ் அச்சுறுத்துகிறது. கூடவே உண்மையான கணவன் மனைவியர் இதனால் சந்திக்கப்போகும் பிரச்சினைகளின் விஸ்வரூபமும் திகிலடைய வைக்கிறது.
வாடகை மனைவிக் கலாச்சார விதை நடப்பட்டாகிவிட்டது, அது முளையிலேயே அழிக்கப்படுமா ? அல்லது விருட்சமாய் வளர்ந்து அடுத்த தலைமுறையினரையே அடக்கம் செய்து விடுமா என்பது போகப் போகத் தெரியும் !

நன்றி : பெண்ணே நீ

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::

Post a Comment