சார்...நக்கீரன்ளா...கவர்மெண்ட்ல ஏதோ ஆதார் கார்டுன்னு ஒண்ணு கொடுக்கிறாங்களாம். இதை வாங்கலன்னா 1000 ரூபாய் அபராதம் வேற விதிப்பாங்களாம். எதுக்கு வம்புன்னு நானும் ஒருவாரமா அந்தக்கார்டை வாங்க அலையுறேன். ஒரே தள்ளுமுள்ளுவா இருக்கு. ஒருநாளைக்கு 100 பேருக்குத்தான் கொடுப்பாங்களாம். சென்னையில ஒரு அஞ்சு போஸ்ட் ஆஃபீஸ்ல மட்டும்தான் கொடுக்கிறாங்க. ஒருநாளைக்கு நூறுபேருக்குன்னு கொடுத்தா எப்போ கொடுத்துமுடிக்கப்போறாங்கன்னு தெரியல. எதுக்காக இந்தகார்டுன்னும் சரியா விளங்கமாட்டேங்குது. ஃபில்லப் பன்ற ஃபார்ம் கேட்டா கம்ப்யூட்டர்ல போயி டபுள்யூ டபுள்யூ டபுள்யூ என்னமோ ஒரு டாட்காமை போட்டு டவுன்லோடு பண்ணிக்கணுமாம். என்னப்பன்றதுன்னு புரியல” என்று மண்டையை பீறாண்டிக்கொண்டு ஒருவர் நம்மிடம் வந்துகேட்க...ஆதார் கார்டு வழங்கும் அஞ்சல் அலுவலங்களுக்கு ஆர்வத்தோடு விசிட் அடித்தோம்.
இந்திய அரசின் பிரத்யேக அடையாளாத்திற்கான தேசிய ஆணையம்...இந்தியாவில் குடியிருப்பவர்களுக்கு பயோமேட்ரிக் விவரங்களை பெற்று 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் வழங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது. தமிழக மக்களுக்கு சென்னை தியாகராயநகர், மைலாப்பூர், அண்ணாசாலை, சென்னை ஜார்ஜ் டவுன் ஆகிய தலைமை போஸ்ட் ஆஃபீஸ்களிலும்...மற்ற மாவட்ட தலைமை போஸ்ட் ஆஃபீஸ்களிலும் இதற்கான படிவங்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில் நாம் முதலில் சென்றது என்னை தியாகராய நகரிலுள்ள தலைமை போஸ்ட் ஆஃபீஸுக்கு.
வரிசையில் நின்ற சரோஜா மற்றும் பரமேஸ்வரியிடம் கேட்டபோது, “காலையில ஒன்பதரை மணிக்கே வந்ததால...டோக்கன் வாங்கமுடிஞ்சது. இதுல கொடுத்துருக்குற தேதிப்படி இன்னும் 10 நாட்கள் கழிச்சுதான் ஃபோட்டோ எல்லாம் எடுப்பாங்களாம். அதுக்கான ஃபார்ம் கேட்டா தீர்ந்துப்போச்சுங்குறாங்க. எதுக்குசார் இந்தக்கார்டு உதவும்னு கேட்டா சரியா பதில் சொல்லமாட்றாங்க” என்று சொல்லிவிட்டுப்போகிறார்கள்.
“சோழிங்கநல்லூர் பக்கத்துல எதுவும் இந்த அட்டைக் கொடுக்கப்படாத்தால... இங்க வரவேண்டியதாகிப்போச்சு. ஒருநாளைக்கு 90லிருந்து 110பேருக்குத்தான் டோக்கன் கொடுக்குறாங்க. மேலும், ஒருநாளைக்கு 30 பேருக்குத்தான் ஃபோட்டோ பதிவு கைரேகை எல்லாம் எடுக்குறாங்க. இந்த ஃபார்மை எப்படி ஃபில்லப் பண்ணிக்கொடுக்கணும்? என்னென்ன ஆவணாங்கள் சமர்ப்பிக்கணும்க்குற வழிகாட்டுதல் நோட்டீஸ் எதுவும் இல்லைங்க. சாதாரண மக்கள் இதுக்காக ரொம்ப அலைய வேண்டியிருக்கு” என்று உச் கொட்டுகிறார் சொக்கலிங்கம்.
அப்போது ஒருவர் இதற்கான ஃபார்ம் கேட்க...ஃபார்ம் தீர்ந்துப்போச்சுங்க. வேணும்னா பக்கத்துல இருக்குற பொட்டிக்கடையில வாங்கிக்கோங்க” என்று அனுப்பிவைக்கிறார்கள். அப்படி ஒருவர் பொட்டிகைடையில் ஆதார் அட்டைக்கான ஃபார்ம் வாங்குவதை ஃபோட்டோ எடுத்துவிட்டு நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு அவரிடமே கேட்டோம். “பார்த்தீங்களா சார்? இந்த ஃபார்மை இலவசமா வழங்கச்சொல்லியிருக்கு. ஆனா, ஊழியர்களோ பக்கத்துல இருக்குற செராக்ஸ்கடை, பொட்டிக்கடைகளில் கொடுத்து நைஸா விற்கவெச்சு காசுபார்க்குறாங்க. இலவசமா வாங்கவேண்டியதை 2 ரூபாய் கொடுத்து வாங்கவேம்டியதாகிப்போச்சு” என்று புலம்புகிறார் சுவாமிநாதன்.
இல்லத்தரசிகளான விருகம்பாக்கம் மீரா, தி.நகரை சேர்ந்த திலகவதி, மாரியம்மா, ராணி ஆகியோர்களோ, “வீட்டு வேலைகளையெல்லாம் விட்டுட்டு இதுக்காக அலைஞ்சுக்கிட்டிருக்கோம்ங்க. போஸ்ட் ஆஃபீஸ் தவிர்த்து செண்ட்ரல் பேங்குல கொடுக்குறாங்கன்னு சொன்னாங்க. அங்கேயும் டைம் முடிஞ்சுப்போச்சுன்னு அலையவிடுறாங்க. காலையில ஆறுமணிக்கே டோக்கன் வந்து வரிசையில வந்து நின்னாத்தான் டோக்கன் கொடுப்பாங்களாம். குடும்பத்தோடு வந்தாதான் டோக்கன் கொடுப்பாங்களாம். குழந்தைக் குட்டிங்களையெல்லாம் துக்கிக்கிட்டு காலங்காத்தால எப்புடிங்க வரிசையில வந்து நிக்கிறது?” என்று குமுறுகிறார்கள்.
அடுத்து நாம் சென்றது...மைலாப்பூர். ஆதார் அட்டை குறித்த புரிதல் இல்லாத மக்கள் வரும் தி.நகரில் கொடுக்கப்பாடாத பலவிவரங்கள் இங்கே டிஜிட்டல் பேனரில் தொங்கவிடப்பட்டிருந்தது. மேலும் வழிகாட்டுதல் விவரங்கள் அடங்கிய நோட்டீஸும் விநியோகிக்கப்பட்டிருந்தது. அடுத்து அண்ணாசாலை... தனியார் ஊழியரான சூரி நம்மிடம், “ஆஃபீஸ் வேலையெல்லாம் விட்டுட்டு வந்தா டைம் முடிஞ்சுடுச்சுங்குறாங்க. ஃபோட்டோ பதிவுக்குத்தான் குடும்பத்தோடு வரணும்னா.. ஃபார்ம் வாங்குறதுக்குக்கூட எல்லோரையும் வரச்சொல்றாங்க. ரேஷன் கார்டை காண்பிச்சா எத்தனை பேர் இருக்காங்களோ அத்தனை பேருக்கும் டோக்கனோ அல்லது விண்ணப்பப்படிவமோ கொடுக்கலாமில்லீங்களா?” டென்ஷன் ஆகிறார் அவர்.
இப்படி கொடுக்கப்படும்...ஆதார் அடையாள அட்டை குறித்துப்பேசும் சமூக ஆர்வலரும் பல்வேறு பொதுநலவழக்குகளை தொடுத்து வெற்றிகண்டவருமான வழக்கறிஞர் கார்த்திகேயனோ, “பா.ஜ.க. ஆட்சியில் கொண்டுவர இருந்த தேசிய அடையாள அட்டை திட்ட்த்தைதான் தற்போதைய காங்கிரஸ் அரசு ஆதார் அடையாள அட்டை திட்டம் என்கிற பெயரில் கொண்டுவருகிறது. தேசிய மக்கள்தொகை பதிவேடு இருக்கு. குடிமக்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்து ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் கட்டாயம் பதிவும் செய்யணும்னு அறிவிச்சிருக்கு மத்திய அரசு. இந்தியாவில் நடக்கும் சட்டவிரோத குற்றங்களை தடுக்கவும், பொதுவிநியோகத்திட்டத்தில் உரிய பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சரியாகப்போய் சேரணும்னும்.... தேசிய வேலைவாய்ப்புத்திட்டத்துல நடக்குற ஊழலை தடுக்கவும், அனைவருக்கும் கல்வி- சுகாதாரம் வழங்கவும்தான் இந்த ஆதார் நம்பர் வழங்கப்படுதுன்னு சொல்லுது மத்திய அரசு. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் பிரத்யேக அடையாளத்திற்கான தேசிய ஆணையம்(Unique Identification Authority of India) நேரடியாக பணியை தொடங்காமல் தனியார் நிறுவனத்துக்கு கொடுத்துள்ளது. இதனால், தனி நபரின் முழுவிவரங்களும் எப்படி ரகசியமாக இருக்கும்? என்று கேள்வி எழும்புகிறது.
பல இடங்களில் ஆள் பற்றாக்குறையால் பலரது முகவரிகள் தவறாக அச்சிடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியன் என்பதற்கு இந்த ஆதார் அட்டை ஒன்றே போதும் என்கிறது மத்திய அரசு. ஆனால், என்னதான் ஆதார் அட்டை இருந்தாலும் வங்கிகளில் புதிய அக்கவுண்டுகள் தொடங்க வழக்கமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது ஏன்? மைக்ரேண்ட் ஒர்க்கர்ஸ் எனப்படும் நிரந்தரபணி, நிரந்தரவீடு, நிரந்தரமுகவரிகள் இல்லாதவர்கள் இந்தியர்களாக இருந்தாலும் அவர்கள் இந்தக்கார்டை பெறமுடியாத அளவுக்கு ஆவணங்களை கேட்கிறார்கள். இது, அகதிகளாக வந்து நம்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள நம் ஈழமக்களை விரட்டியடிக்கத்தான் இந்த ஆதார் கார்டு. அதுமட்டுமல்ல...நம்முடைய தனிநபர் உரிமை இதில் நிச்சயம் பரிபோகும். இந்த கார்டை வைத்து நம்முடைய முழு விவரங்களையும் நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ளமுடியும். அந்த ஆதார் விண்ணப்பப் படிவத்திலேயே ‘நான் அளித்துள்ள தகவலை நலத்திட்டங்களை அமுல்படுத்தும் அமைப்புகளுடன் பகிர்ந்துகொள்ள எனக்கு எந்தவித மறுப்பும் இல்லை’ என்று எஸ் அல்லது நோ என்பதை டிக் பண்ண சொல்லியிருக்கிறார்கள். அப்படியென்றால் நம்முடைய தகவல்கள் வேறு ஒரு அமைப்புகளுக்கு கொடுக்கப்படும் என்பதற்கு இதுவே ஆதாரம். சில வங்கிகள் உங்கள் வங்கிக்கணக்கு சார்ந்த விவரங்களை ஆதார் அட்டை வழங்கும் விண்ணப்பத்தில் தெரியப்படுத்தவேண்டாம் என்றும் அந்த விவரங்கள் ரகசியமாக இருக்கும் என்ற உத்தரவாதம் இல்லை என்றும் மறைமுக அறிவித்துவருகின்றன. ஆக, தனி நபர் உரிமைகள் மீறப்படுகிறது என்பதால் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொண்டுவந்த இதேபோன்ற திட்டங்களை கைவிட்டுவிட்டன அந்நாட்டு அரசுகள். மேலும், ஒரே கைவிரல்ரேகை மூன்று நான்கு பேருக்கு ஒரேமாதிரி இருப்பதாகவும் உள்ளதால் குழப்பங்களும் வருகிறதாம். நமது நக்கீரன் தொடுத்த வழக்கில் ‘தனிநபர் சுதந்திரம் என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை’ உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது. இந்த மாபெரும் தீர்ப்பின்படி தனிநபர் சுதந்திரத்தில் குறுக்கிடும் இந்த திட்டத்துக்கு எதிராக வழக்குபோடவும் தயாராகிக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் அதிரடியாக.
“நாட்டுமக்களின் தனிமனித சுதந்திரத்தை தேசமுன்னேற்றம் போன்ற எதற்கு மாற்றாகவும் விலைபேசமுடியாது” என்கிறார் அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற அமர்த்தியாசென். ஆனால், தேசவிரோத சக்திகளை கண்காணிக்கிறோம் என்கிற பெயரில் சொந்தநாட்டு மக்களையே குற்றவாளிகளைப்போல் கண்காணிப்பது சுதந்திரநாட்டுக்கு உகந்த்துதானா? என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வி!
நன்றி: நக்கீரன்
Engr.Sulthan
தனி நபர் சுதந்திரத்தில் தலையிடும் அரசாங்கத்தின் ஆதர கார்டு
ReplyDeleteதேவையில்லை .....பின்னாளில் இதனால் வில்லங்கம் வரும்
வாய்ப்புகள் நிறையவே இருக்கிறபடியால் வேண்டவே வேண்டாம் .....
தனி நபர் சுதந்திரத்தில் தலையிடும் அரசாங்கத்தின் ஆதர கார்டு
ReplyDeleteதேவையில்லை .....பின்னாளில் இதனால் வில்லங்கம் வரும்
வாய்ப்புகள் நிறையவே இருக்கிறபடியால் வேண்டவே வேண்டாம் .....