Thursday, October 27, 2011

சட்டம் இருந்து என்ன பயன்?



[ நவீன வசதிகள் நன்மைக்குப் பயன்படுத்தப் படுவதற்குப் பதிலாக, பெண் சிசுவைச் சிதைப்பதற்குப் பயன்படுத்தப்படுவது மகா மகா வெட்கக் கேடாகும்.
இந்தியாவில் தான் பெண் சிசுக் கொலை பெரிய அளவில் நடந்து கொண்டு இருக்கிறது. அதனைத் தடுக்கவும், தண்டிக்கவும் சட்டம் இருந்து என்ன பயன்? அது குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருக்கிறது.
இது ஆண் என்றால் எஜமானன்; பெண் என்றால் அடிமை என்று நினைக்கும் இந்து மனப்பான்மை சுட்டெரிக்கப்பட வேண்டும். ஆண் என்றால் பலவான், பெண்ணென்றால் பலவீனமானவர் என்கிற மனப்போக்கிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆண்களின் தசை பலம் என்பது பெண்களை ஒடுக்கும் கருவி என்ற நிலை மாற்றப்பட வேண்டும்.
இந்தியா பெண்கள் பாதுகாப்பு இன்மையில் நான்காவது இடத்தை பெற்றுவிட்டது, பாரத புண்ய பூமி பெண் இனத்தை போற்றும் ஒரு நாடு என்று சொல்லவதெல்லாம் ஒரு சுத்த பொய் என்பது இதில் இருந்து தெரிகிறது. முதலில் மனிதனாக பாருங்கள் அதன் பின் பழம்பெருமை பேசலாம்,]
பெண் சிசுக் கொலை 1.20 கோடியா?
கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்கள் ஒரு கோடியே 20 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண் சிசுவைக் கருவில் அழித்து வருவதால்தான் ஆண் - பெண் விகிதாசாரம் என்பது கவலைக்குரியதாக ஆகிவிட்டது.
1990ஆம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 906 பெண் குழந்தைகள் என்ற நிலை இருந்தது. 2005ஆம் ஆண்டிலே 1000 ஆண் குழந்தைகளுக்கு 836 பெண் குழந்தைகள் என்ற நிலைக்கு வீழ்ச்சியுற்றது. இது மேலும் வீழ்ச்சியுறலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இதில் ஒரு வெட்கக்கேடு என்னவென்றால், தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும்; பெண் குழந்தை வேண்டாம் என்று பெண்ணாகிய ஒரு தாயே கருதுவதுதான்.
கருவில் வளர்வது பெண் குழந்தை என்றால் அதைச் சிதைத்து விடவே தாய் விரும்புகிறார் என்பது என்ன கொடுமை!
நவீன வசதிகள் நன்மைக்குப் பயன்படுத்தப் படுவதற்குப் பதிலாக, பெண் சிசுவைச் சிதைப்பதற்குப் பயன்படுத்தப்படுவது மகா மகா வெட்கக் கேடாகும்.
பெண்களை இழிவுபடுத்துவது என்பது இன்று நேற்றல்ல, அது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.
கிருஷ்ணன் எழுதியது என்கிறார்களே பகவத் கீதை - அதில் என்ன சொல்லப்படுகிறது? பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என்றுதானே எழுதி வைக்கப்பட்டுள்ளது. மனுதர்மமும் பெண்ணை ஒரு ஜீவனாகவே ஏற்றுக் கொள்வதில்லை; அதற்குப் பதவுரை பொழிப்புரை எழுதும் சங்கராச்சாரியார்கள், சோ ராமசாமி போன்ற பார்ப்பனர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பெண்ணென்றால் ஒரு சுமை என்று கருதுகிற மனோபாவம் சமுதாயத்தில் இருந்து வருகிறது.
ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் படிப்பு, வேலை வாய்ப்பிலும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். ஆண்களைப் போலவே பெண்களும் பொருள் ஈட்டும் நிலை ஏற்பட வேண்டும் என்று தந்தை பெரியார் கூறியவற்றை - செயல்படுத்தும் பொழுதுதான் பெண்கள் என்றால் பெரும் சுமை என்ற மனப்பான்மை சமுதாயத்தைவிட்டு விலகும்.
ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் இந்த நிலையில்கூட பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு வரதட்சணை கொடுக்க வேண்டியுள்ளது என்பது விசித்திரமான நிலை அல்லவா!
இது ஆண் என்றால் எஜமானன்; பெண் என்றால் அடிமை என்று நினைக்கும் இந்து மனப்பான்மை சுட்டெரிக்கப்பட வேண்டும். ஆண் என்றால் பலவான், பெண்ணென்றால் பலவீனமானவர் என்கிற மனப்போக்கிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஆண்களின் தசை பலம் என்பது பெண்களை ஒடுக்கும் கருவி என்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்றால் பெண்களும் தங்கள் உடல் பலத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியவர்களே ஆவார்கள்.
இந்த நவீன யுகத்தில் கராத்தே போன்ற பயிற்சிகளில் பெண்கள் ஈடுபட வேண்டும். அண்மைக் காலமாக இத்தகு பயிற்சிகளில் பெண்கள் தேர்ந்து வருவது வரவேற்கத் தகுந்ததாகும். ஆண்கள் பணியாற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்ற முடியும்; இதனை இராணுவத் துறையிலும்கூட பெண்கள் நிரூபித்தே வருகிறார்கள். விமானிகளாகவும் பெண்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். சட்டம் இயற்றும் அதிகார மய்யத்தில் பெண்கள் விகிதாசாரப்படி அமர்த்தப்பட வேண்டும். சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் 33 சதவிகித இடங்கள் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்கிற சட்டம் 1996 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருகிறதே - என்ன காரணம்?
எல்லாக் கட்சிகளிலும் உள்ள ஆண்களின் ஆதிக்க வெறியே இதற்கு முக்கிய காரணமாகும்.
நியாயமாக 50 விழுக்காடு இடங்கள் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும். ஆண்களாகப் பார்த்து அளிப்பார்கள் என்ற எண்ணம் பெண்களுக்கு ஏற்படக் கூடாது. வீதியில் வந்து போராட வேண்டும். நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும்.
குமரி முதல் காஷ்மீர் வரை கிடுகிடுக்கும் போராட்டத்துக்குப் பெண்களே அழைப்புக் கொடுத்து வெற்றிகரமாக நடத்தும் பட்சத்தில், இதற்கொரு தீர்வு கிடைத்திட வாய்ப்பு உண்டு.
இந்தியாவில் தான் பெண் சிசுக் கொலை பெரிய அளவில் நடந்து கொண்டு இருக்கிறது. அதனைத் தடுக்கவும், தண்டிக்கவும் சட்டம் இருந்து என்ன பயன்? அது குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருக்கிறது.
ஆண்களை விஞ்சக் கூடிய அளவில் பெண்கள் கல்வியில் சாதனை படைத்து வருகிறார்கள். வாய்ப்புக் கொடுத்தால் சாதிப்பார்கள் என்பது இதன்மூலம் விளங்கவில்லையா? (விடுதலை" தலையங்கம் 31-5-2011)
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு நான்காவது இடம்
பெண் சிசுக் கொலை, குழந்தைகள் கடத்தல் உள்ளிட்டவை இந்தியாவில் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக நடத்தப்பட்ட சர்வேயில்.
உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக திகழ்வது ஆப்கானிஸ்தான். 2வது இடத்தில் காங்கோவும், 3வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.
இந்த வரிசையில், 4வது இடத்தில் இந்தியாவும், 5வது இடத்தில் சோமாலியாவும் உள்ளன.பெண்கள் உரிமைக்கான சட்டப்பூர்வ தகவல் மற்றும் சட்ட ஆதரவு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தர வரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் 3 நாடுகள் தெற்காசியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் கொடுமைகள், சுகாதார சீர்கேடு, பாலியல் அல்லாத கொடுமைகள், கலாச்சார ரீதியிலான சித்திரவதைப் பழக்கவழக்கங்கள், மதம் அல்லது பாரம்பரியம் சார்ந்த பெண்களுக்கு எதிரான பழக்க வழக்கங்கள், கடத்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நாடுகள் இதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை பெண் சிசுக் கொலை, சிசுக் கொலைகள், பெண் குழந்தைகள் கடத்தல் ஆகியவை அதிகமாக இருக்கிறதாம்.
2009ம் ஆண்டு இந்தியாவில் 1 கோடி பேர் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை செயலாளர் மதுகர் குப்தா கூறியதாக ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் 2009ம் ஆண்டு நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் 90 சதவீதம் இந்தியாவுக்குள் நடந்தவையாகும். மீதமுள்ள 10 சதவீதம் வெளிநாட்டுக் கடத்தல் சம்பவங்களாகும்.

மேலும் இந்தியாவில் 30 லட்சம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
கட்டாயத் திருமணங்களும் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான முக்கியக் கொடுமைகளில் ஒன்றாக விளங்குகிறது.
இந்தியா பெண்கள் பாதுகாப்பு இன்மையில் நான்காவது இடத்தை பெற்றுவிட்டது, பாரத புண்ய பூமி பெண் இனத்தை போற்றும் ஒரு நாடு என்று சொல்லவதெல்லாம் ஒரு சுத்த பொய் என்பது இதில் இருந்து தெரிகிறது. முதலில் மனிதனாக பாருங்கள் அதன் பின் பழம்பெருமை பேசலாம்.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::

Post a Comment