Thursday, October 20, 2011

விளம்பரம்!




[ இதோ இந்த மக்கள் வெள்ளத்தைப்பாருங்கள். இதிலுள்ள ஒவ்வொருவரும் விளம்பரப்படுத்திக்கொண்டு டாம்பீகமாகவா வருகிறார்கள்? இல்லையே! நமது நாட்டில் மட்டும் ஏன் வீணான ஆடம்பர வழியனுப்பு வைபவங்கள்? 'லப்பைக்' - 'அடிபணிந்தேன்' என்று இறைவனிடம் அடிபணியச்செல்பவர்களுக்கு ஆடம்பர - விளம்பரம் தேவையா? "ஹஜ்ஜுல் மப்ரூரா" (ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்) கிடைக்கவேண்டும் என்று எண்ணூகின்றவர்களுக்கு இது அழகல்லவே.... சிந்தியுங்கள்.]

ஹஜ் யாத்திரை விளம்பரம் தேவையா?
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமை இறைவனை துதிப்பதற்கான ஒன்றாகவே இருந்து வருகிறது. முன்பெல்லாம் ஹஜ் யாத்தி ரைக்குச் செல்வோர் விருந்தோம்பலை நடத்தி, உறவினர்களுக்கும், ஊர்க்காரர் களுக்கும் பயண செய்தியை தெரிவிப்பார்கள். பகையாளிகளை கூட சந்தித்து தங்கள் பயணத்திற்காக பிரார்த்திக்க சொல்வார்கள்.

ஆனால், இப்போதெல்லாம் ஹஜ் பயணத்தை ஒரு விளம்பரமாகவும், புகழுக் கான ஒன்றாகவும் சிலர் பயன்படுத்துவது வருத்தத்திற்குரிய செய்தியாகும். இதனால் தூய எண்ணங்களோடு ஹஜ்ஜுக்குப் புறப்படும் ஹாஜிகளுக்கும் மரியாதைக் குறைவு ஏற்படுகிறது.

பள்ளிவாசல்களில் ஜும்மா தொழு கைக்குப் பிறகு பயண செய்தியை அறிவிப்பது விருந்தோம்பல் செய்வது இவையெல்லாம் குற்றமாக பார்க்கப் படுவதில்லை. யாரும் இதை விமர்சிக்கவும் மாட்டார்கள். ஆனால் சமீப வருடங்களாக நிலை மாறி வருகிறது. அரசியல் வாதிகளை அழைத்து வாழ்த்தரங்கம் நடத்துவது, ராட்சத டிஜிட்டல் பேனர்கள், சுவர் விளம்பரங்கள், ஆள் உயர போஸ்டரில் ஹஜ் பயணியின் சிரிக்கும் படம், வாழ்த்து சுவரோட்டிகள் என 'அரசியல்' வாடை வீசத் தொடங்கியுள்ளது.

இவையெல்லாம் முற்றிலும் மார்க்கத்திற்கு விரோதமான செயல்களாகும் இப்படியெல்லாம் செய்து ஹஜ் யாத்திரைக்கு செல்வது அதன் நோக்கத்தை சிதைப்பதாகும். இதையெல்லாம் செய்பவர்கள் யார் என்பதை கவனித்தால் அவர்கள் இதற்கு முன்பு மார்க்கத்தை சரிவர பின்பற்றாமல் ஜும்ஆவுக்கு மட்டுமே பள்ளிவாசலுக்கு வருகை தருபவர்களாக இருப்பவர்கள் என்பது தான்!

பொதுவாக ஐவேளை தொழுகைப் பேணுபவர்களும், மார்க்ககத் தின்பால் ஈடுபாடு உடையவர்களும் இதுபோன்ற 'அரசியல்' கூத்துகளை நடத்துவதில்லை. சிறிய விருந்துடன் பயண செய்தியை கூறிவிட்டு புறப்படுகிறார்கள். அவர்களை ஊர் மக்களும், ஜமாத்தோடு கூடி வழியனுப்பி வைக்கிறார்கள்.

இப்படிப்பட்ட உண்மையான ஹஜ் யாத்திரீகள் பெருமைக்கும், புகழுக்கும் விளம்பரம் செய்து ஹஜ்ஜுக்கு புறப்படும் நபர்களால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். முன்பெல்லாம் மாற்றுமத நண்பர்களும் கூட, மக்காவுக்கு செல்வதை மரியாதையுடன் நோக்குவார்கள். அவர்களும் தங்கள் முஸ்லிம் நண்பர்களை வழிய னுப்ப பழங்களோடும், இனிப்புகளோடும் வருவார்கள். இப்போதும் வருகிறார்கள்.அவர்களும் கூட இத்தகைய விளம்பர பிரியர்களின் நடவடிக்கைகளினால், ஹஜ் பயணத்தின் நோக்கத்தைப் பற்றி தவறாக புரிந்து கொள்ளும் சூழல் உருவாகிறது. இதெல்லாம் குர்ஆன் ஹதீஸ் நெறிமுறைகளுக்கு எதிரானவை என்பதை அவர்களுக்கு இதை சுட்டிக்காட்டுவது நமது கடமையாகும்.
இந்நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உலமாக்கள் இது குறித்து ஜும்ஆ பிரசங்கத்தில் அறிவுறுத்த வேண்டும். ஜமாத் தலைவர்கள் இதற்கு துணை புரிய வேண்டும்.

இல்லையெனில் புனிதமான ஹஜ் யாத்திரை எதிர்காலத்தில் கேலிக்குரியதாக மாறிவிடும். இதை தடுக்காதவர்கள், நாளை மறுமையில் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.
இதை படிக்கும் சகோதரர்கள் துண்டு பிரசுரங்கள் மூலமாகவோ, பிரதி எடுத்தோ வினியோகித்து சமூகத்தில் தீமைகள் பரவாமல் தடுத்து நிறுத்த உதவ வேண்டும்.

Posted by இனியவன்...

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::

Post a Comment