Thursday, March 15, 2012

பெல்ஜியம் பள்ளிவாசல் தாக்குதலில் இமாம் படுகொலை ...!


BelgianMosqueநேற்று முன்தினம் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸல்ஸில் இடம்பெற்ற பள்ளிவாசல் தாக்குதலால், ஐரோப்பிய முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சி பரவியுள்ளது. இத்தாக்குதலில் அப்பிரதேசத்தின் இமாம் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
‘‘அவர் இங்குள்ள மக்களால் அதிகம் விரும்பப்பட்ட ஒருவர். திறந்த மனதுடையவர். எல்லோருடனும் நன்கு கலந்து பழகும் இயல்புடையவர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்‘‘ என 39 வயதான அப்துல் அபூ ஸெய்னப் தெரிவித்தார்.
47 வயதான இமாம் எரிக்கப்பட்ட பள்ளிவாசலினுள் அகப்பட்டுக் கொண்டார். மாலை நேர தொழுகைக்காக மக்கள் கூடியபோது பார்சலுடன் ஒருவர் வந்தார். அதில் பெற்றோல் நிரப்பப்பட்டிருந்தது. அதனை அறையின் மத்தியில் அவர் வீசினார். இதனால் அங்கு நெருப்பு பிடித்துக் கொண்டது.
இதனை அணைக்க முற்பட்ட இமாம், எரிகாயங்களுக்கு உள்ளானார். பள்ளிவாசலின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன என சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலால், பெல்ஜியம் முஸ்லிம்கள் மத்தியில் இனம் புரியாத பீதி நிலவுகிறது.
பெல்ஜியத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்களுள் அரைவாசிப் பேர் மொரோக்கோவைச் சேர்ந்தவர்கள். 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர் துருக்கிய வம்சாவளியினர் ஆவர்.
பெல்ஜியத்தில் 300 பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன. தலைநகர் பிரஸல்ஸில் 77 பள்ளிகள் உள்ளன.
கடைசியாக 1989 இல் சவூதியில் பிறந்த அப்துல்லாஹ் முஹம்மத் அல் அஹ்தல் என்ற இமாம் பிரஸல்ஸில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::

Post a Comment